புசல்லாவை நயபனை மேமலை தோட்டம் மற்றும் நயபனை தோட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 7 பேர் புசல்லாவை வகுகபிடிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நயபனை மேமலை தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்தனர். இவர்கள் 6 பேரும் பின்னர் வகுகபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேநேரம் நயபனை தோட்டத்தில் வீட்டு முற்றத்தில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த என்.பிரபாளினி (21 வயது) என்னும் குடும்பப் பெண் மின்னலினால் தாக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேமலை தோட்டத்தச் சேர்ந்த ஆர்.முத்தாய் (47 வயது), கே.ராஜமணி (48 வயது), எம்.ஞானேஸ்வரி (43 வயது), எம்.சரஸ்வதி (33 வயது), கே.வரதலட்சுமி (36 வயது), ஏ.உதயகுமார் (22 வயது) ஆகியோரே மின்னல் தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசமான நயபனை மேமலை தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் அடிக்கடி இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வருவதால் காலநிலை சீரற்றிருக்கும் நாட்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டு நிவாரணங்களை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென்றும் தொலைவில் இருக்கும் நயபனை தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று வருவதற்கு தமது பிள்ளைகள் அஞ்சுவதாகவும் இதனால், மேமலை தோட்ட மாணவர்களுக்கு நேர காலத்தோடு பாடசாலையிலிருந்து வீடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.நேற்று முன்தினம் சில மணித்தியாலங்களுக்கு புசல்லாவை பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.