தற்போதைய கடும் வெப்பமான நிலைமை மே மாதஇறுதியில் மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுவரை உஷ்ணமான காலநிலையே நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் கருத்து தெரிவிக்கையில்;தற்போதைய உஷ்ணமான காலநிலைக்கு இடைப்பட்ட பருவப்பெயர்ச்சி காலநிலையே காரணமாகும். இக்காலநிலை தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை உருவாகும் வரை நீடிக்கும்.பொதுவாக தென்மேல் பருவப்பெயர்ச்சி மே முதல் செப்டெம்பர் வரை காணப்படும்.
இந்நிலையில் மே மாத இறுதியில் இந்த இடைப்பட்ட காலநிலை மாற்றமடையுமென எதிர்பார்க்கின்றோம்.இக்காலநிலையின் போதே அதிக உஷ்ணம் காணப்படும். அதேநேரம் இலங்கை முழுவதும் பரவலாக மழை கிடைக்கும் காலப்பகுதியாகும்.
உஷ்ணத்தினால் நீர் நிலைகளிலிருந்து நீர் ஆவியாகி மழையாக பொதுவாக மாலை வேளைகளில் நாடு முழுவதும் மழை திடீரென பெய்வது இக்காலநிலையில் வழமையானதாகும்.தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகியதுமே தென்மேற்கு பகுதிகளான கொழும்பு, காலி போன்ற இடங்களில் மழை பெய்யும்.அதேநேரம் கிழக்குப் பகுதியில் உஷ்ணமான காற்று வீசுமென அவர் தெரிவித்தார்.