January

January

வெற்றி பெறுபவர்களை மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா?: வாசுதேவன்

பதவிக்கு வரும் ஒருவரை மட்டும் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தில் சிலவேளை ஒரு அரசியல் ஆதாயம் இருக்கலாம். ஆனால் ஒருவரை மீளவும் பதவிக்கு வரவைக்க கூடாது என்ற பழி வாங்கும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தர எடுத்திருக்கும் முடிவு சரியானதா என்ற விவாதமே தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள விவாதமாகும். ஆனால் 30 வருட காலமாக தமிழ் பேசும் மக்கள் எந்த அரசியல் உரிமைக்காக போராடினார்களோ அந்த போராட்டத்தை நிவர்த்தி செய்ய குறைந்த பட்சம் விரும்பும் பிரதிநிதிகளையாவது ஆதரித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் பலர் மனதில் தோன்றியுள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலில் தற்போது போட்யிடும் 20 பேரில் மிகவும் புதிய திட்டங்களுடன் ஒரு உண்மையான மாற்றத்தை தேடி நிற்கும் ஒரு வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியலில் அக்கறையுள்ளவர்களிற்கு தெரியாமல் போனது மிகவும் வேதனையான ஒரு விடயம். இங்கே தான் தனியே வெற்றி பெறும் வேட்பாளர்கள் நோக்கிய ஒரு பார்வை புலனாகிறது.

கட்சியில்லா மக்கள் அரசியலதிகாரம் என்ற கோஷத்தின் அடிப்படையில் சுவராஜ்ய என்ற அமைப்பு அரசியல் அதிகாரம் மக்களாகிய நமக்கே என்ற மாற்றத்தினை கொண்டு வருவதினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறியீடாக இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளரை சுயேட்சையாக நியமனம் செய்துள்ளது. இன்று தேர்தலில் நிற்கும் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் மீளவும் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் பேச்சுகளை பேசி வருகிறார்கள். சிங்கள தேசிய வாதத்தை மிகவும் முனைப்போடு பேசும் அதேநேரம் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் சில சலுகைகளை இவர்கள் ஏலம் போடுகிறார்கள். ஆனால் மக்களின் உண்மையான விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்கள் வெல்ல முடியாதவர் என்ற ஒரு காரணத்திற்காக ஓதுக்கப்படுவதுடன் அவர்கள் சொல்ல வரும் செய்தியையும் இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது மிகவும் வேதனையானது.

பிளவுகளை ஏற்படுத்தும் இந்த அரசியற் கட்சிகளுக்கு மாற்றாக சுதந்திரம் என்பது அடி மட்டத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும், ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவுடையதாகவும் தனது விவகாரங்களை தானே கையாளக் கூடிய ஆற்றல் மிக்கதாக வளரவேண்டும் என்ற காந்திய கொள்கையை பின்பற்றும் சுவராஜ்ஜியவின் சார்பில் போட்டியிடும் திரு யு. பி விஜேகோன் தமிழ் பேசும் மக்களிற்கு மிகவும் அறிமுகமானவர். சுவராஜ்யாவின் அரசியல் அமைப்பு இனவாதத்தால் பிரிந்து போயுள்ள நாட்டை மீள இணைப்பதுடன் மக்கள் தமது சொந்த தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் புதிய திட்டம். இதில் அரசியல் கட்சிகள் கிடையாது! மாறாக 14500 கிராம சபைகளும் சுதந்திரமான சுயாட்சி அலகு முறைக்குள் உட்படுத்தப்படும். நிறைவேற்று மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்புடைய ஒவ்வொரு படிமுறையும் இந்த கிராம சபைகளில் இருந்தே ஆரம்பிக்கும்!

இவ்வாறு மக்களிடம் மீள ஆதிகாரங்களை கையளிக்கும் வகையிலான திட்டங்களை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு 60வருட காலமாக காலனித்துவ ஆட்சியார்கள் விட்டுச்சென்ற அரசியல் அமைப்பை உதறித் தள்ளி விட்டு நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற அரசியல் அமைப்பை மீள புதுப்பிக்க முனைகிறது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் தவறிழைக்கும் பட்சத்தில் மக்களால் திருப்பியழைக்கும் உரிமையையும் இது உத்தரவாதம் செய்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற ஒரு அமைப்பு எனவே இதைப்பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை என்பதே அனேகரின் வாதம். ஆனால் புதிய அரசில் மாற்றம் ஒன்றை ஆரம்பிக்க எங்காவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் என் இந்த மாற்றமாக இருக்க கூடாது?

அரசியல் அதிகாரங்கள் குவிந்து போயுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அல்ல யு பி விஜேக்கோனின் நோக்கம். அந்த புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாட்டும் முகமாக ஒரு செய்தியாளனாகவே இவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். யு பி விஜேக்கோன் வெறும் வார்தை ஜாலங்களுக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லது ஒரு வேட்பாளரை தோற்க வைப்பதற்காகவோ இந்த தேர்தலில் நிற்கவில்லை. அரசியல் அதிகாரம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தனது கொள்கையை இவர் மந்திரியாக இருந்தபோதே சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தியவர். கிராம சபைகள் கூடிய அதிகாரங்களை பெற இவர் அதிகாரத்தில் இருந்தபோதே பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் இவர் கிராமசபைகளை மறு சீரமைத்ததுடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை வலுவூட்டினார். அரசியல் அதிகாரம் அடிமட்ட மக்களிடமிருந்து வரவேண்டும் என்ற தன் கொள்கையை யுஎன்பி ஆட்சிக்காலத்திலும் அறிமுகப்படுத்திய ஒருவர். யு பி விஜேக்கோன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 1980களில் யாழ் மாவட்ட அமைச்சராக பதவி வகித்தவர். அமரர் திரு அமிர்தலிங்கத்தாலேயே பாராட்டப்பட்ட ஒரு மனிதர். அவரின் மனித பண்புகளுக்காக யாழ் மக்கள் அவரை கௌரவித்தனர்.

இவ்வாறு இலங்கை அரசியலில் உண்மையான மாற்றத்தை தேடும் ஒரு நேர்மையான மனிதர் தமிழ் பேசும் கட்சிகளின் கண்களுக்கு தெரியமால் போனதன் காரணம் என்ன? விஜேக்கோன் விரும்பும் மாற்றத்தால் இந்த அரசியல்வாதிகளிற்கு ஒரு இலாபமும் இல்லாமல் போய்விடும் என்பதாலா? அல்லது கட்சிகள் இல்லாது போனால் தங்கள் இருப்பே போய்விடும் என்பதாலா? மக்களின் விடுதலையை நேசிக்கும் எந்த ஒரு சக்தியும் இந்த மாற்றத்தை விரும்பும். கடந்த முப்பது வருட காலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காக தமிழீழ தனியரசமைக்க முனைந்த தமிழ் தேசியம் கிராம ராஜ்யம் என்ற அமைப்பின் ஊடக அந்த மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதா? தேசிய விடுதலைப் போராட்டதில் புலிகளிற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தமது ஆதரவை செலுத்திய இந்தக் கூட்டமைப்பினர் கண்களுக்கு மாநில சுயாட்சி தான் தெரியுமா? அதைவிட மக்களிடம் அதிகாரங்களை வழங்க கூடிய கிராமிய சுயாட்சி இவர்களின் கண்களிற்குத் தெரியாது போனதன் மர்மம் என்ன?

இந்த உலகத்தில் நீங்கள் காண விரும்புகின்ற அந்த மாற்றம் நீங்களேயாக வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் வாசகங்கள் பொறித்த சுவராஜ்ய அல்லது கிரமா ராஜ்ய என்ற அமைப்பின் தேர்தல் துண்டுப்பிரசுரம் நம்பிக்கை தருவதாக இருந்தாலும் இதை யாரும் கண்டு கொள்ளாது விட்டது நாம் தொடர்ந்தும் வெற்றிபெறக் கூடியவர்களை மட்டுமே ஆதரிப்பதாக முடிகிறது

விளையாட்டு வீரர்களை அரசியல் விளம்பரங்களுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலை மாற்றப்படல் வேண்டும் அர்ஜுன ரணதுங்க

arjuna-ranatunga.jpgகொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் விளையாட்டுத்துறையைக் கிராம மற்றும் தோட்டப் பகுதிகளுக்கும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் நுவரெலியா சினிசிட்டா அரங்கில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டு விளையாட்டுத்துறை இன்று அரசியல் மயப்பட்டுள்ளது. திறமை அடிப்படையில் அல்லாது அரசியல் செல்வாக்கினால் வீரர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். தேசிய சொத்துகளான விளையாட்டு வீரர்களை அரசியல் நலன்கருதி அரசியல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைமை மாற்றப்படல் வேண்டும். கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் உட்பட பல விளையாட்டுகளை எமது நாட்டின் கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் கொண்டு வருவதே எனது இலக்காகும்.

அவுஸ்திரேலியாவில் முரளிதரனுக்கு அநீதி ஏற்பட்டபோது முழு அணியையும் மைதானத்தில் இருந்து திருப்பி எடுத்தவன் நான். ஆனால், இன்று அவரது செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. நான் உலகக்கிண்ணத்தை ஏந்திவந்த காலத்தில் இந்த நாட்டில் தேர்தல்கள் நடந்தன. நான் அரசியல் குடும்பத்தில் வந்தவன். ஆனால், எனது கிரிக்கெட் பிரபலத்தை எனது தந்தையின் அரசியலுக்கோ அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்காகவோ நான் விற்கவில்லை. கிரிக்கெட்டை அரசியலாக்கவில்லை. ஆனால், இன்று நடப்பதென்ன என்பதை நீங்கள் ஊடகங்களில் பார்க்கிறீர்கள். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னரே அரசியலுக்கு வந்தேன். அதுவும் யாருக்காகவும் வாக்குக் கேட்கும் விளம்பரக்காரனாக இல்லை. மக்களுக்கு தலைமை கொடுக்கும் தலைவனாகவே செயற்படுகிறேன்.

கிரிக்கெட் சபை நிர்வாகம் கிரிக்கெட் தெரியாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊழல் இடம்பெறுவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று நீதியை வென்றெடுத்தேன். ஆனாலும், அரசாங்கம் கிரிக்கெட் சபையை அரசியல் ரீதியாகவே நடத்துகின்றன.

அரசியலில் எப்போதும் சுயமாக முடிவெடுக்கவேண்டும். அடுத்தவர் கயிற்றை விழுங்கக்கூடாது. நான் இன்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்காரர். எனது தந்தை தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணித்தவர். ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழல்களின் கூடாரமாகிவிட்டது. அதனால்தான் நான் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே தொடர்ந்திருப்பேன். அந்தப்பலம் பெரும் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்குள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மண்டைதீவு இராயப்பர் தேவாலயம் நிர்வாகத்தினரிடம் ஒப்படைப்பு

images1.jpgயாழ். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் நேற்று மாலை ஆலய நிர்வாகத்தினரிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட் டது.  அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இதுவரை காலமும் கருதப்பட்ட மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயப்பகுதி வழிபாடுகளுக்காக விசேட அனுமதி பெற்றே அடியார்கள் செல்ல வேண்டியிருந்தது.

இப்பகுதியின் அதி உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவதுடன் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 3.30 மணியளவில் புனித இராயப்பர் தேவாலயம் கையளிக்கப்பட்டதுடன் ஆசிர்வாத பூஜையும் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அடிகளாரும் இந்த ஆசிர்வாத பூஜையில் கலந்து கொண்டார். யுத்தம் காரணமாகவும், அண்மையில் குடாநாட்டை ஊடறுத்துச் சென்ற புயல் காற்றினால் சேதமடைந்திருந்த மேற்படி ஆலயத்தின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருடந்தோறும் வரும் ஆனி 29 இல் ஆலய மகோற்ஸவமும் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

”தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும்” – தேர்தல்கள் ஆணையாளர்

election-commisone.jpgஜனாதிபதி தேர்தலுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். மாவட்ட மட்டடங்களில் தேர்தல் அத்தாட்சி அலுவலர்களும் நாடாளாவிய ரீதியில் தனது உதவி ஆணையாளர்களும் தேர்தல் பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தயானந்த திஸாநாயக்க அறிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தகால போரினால் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,புத்தளம் கொழும்பு,களுத்துறை,கம்பஹா, குருணாகல்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தின் மறுநாள் காலைப் பொழுதுக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் எனவும் தயானந்த திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

எதிர்க்கட்சி ஆதரவாளர் டிரான் அலஸ் வீட்டின் மீது கிரனேட் தாக்குதல்

dilaan_allas.jpgஎதிர்க் கட்சி ஆதரவாளர் டிரான் அலஸின் நாவலவில் உள்ள வீட்டின் மீது வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் கிரனேட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இதன் போது டிரான் அலஸுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத போதும் அவரது வீடு மற்றும் கார் போன்றவை முற்றாகச் சேதமடைந்துள்ளன

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி

election_box.jpgஇன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் பூர்த்தியாகின்றன. தேர்தல் பிரசார அலுவலகங்கள், மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்டவுட்டுக்களை இன்று நள்ளிரவுடன் அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் இறுதி பிரசார கூட்டங்களும் இன்று நடைபெறவுள்ளன.

இன்று காலை 10.00 மணிக்கு தெபரவெவ பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு ஹினிதுமவிலும், மாலை 5.00 மணிக்கு கெஸ்பாவ பகுதியிலும் நடைபெறவுள்ளன.

ஆறாவது ஜனாதிபதியும் புலி(சிவா)ஜியும்: முகம்மது நிஸ்த்தார்.

mahinda ,sarath2010 ல் இலங்கையின் 6ம் ஜனதிபதிபதியை தெரிவதற்கான காலம் முன்னகர்த்தப்பட்டது ஒரே ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். அதாவது நவீன துட்டகெமுனுவான இன்றைய ஜனாதிபதியின் புலி பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றி சிங்கள மக்கள் மனங்களில் இருந்து காய்வதற்குமுன் இரண்டாம் முறையும் இலகுவாக பதவிக்கு வரவேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் விடயங்கள் திட்டமிட்டபடி முன்னேறிச் செல்வதாகவும் ராஜபக்சவின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதிலும் இரண்டாம் சுற்று இல்லாமலே அந்த வெற்றி அமையுமானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற கூற்றும் நிலவுகிறது. அதே நேரத்தில் சரத் பொன்சேகாவின் வருகை என்பது கடைசி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக வந்த சாரா பெளின்னின் வருகைக்குச் சமனானதாகவும் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் ஆனால் அது எப்படி மெக்கெய்ன்னின் வெற்றிக்கு வழி சமைக்கவில்லையோ அப்படியே சரத் பொன்சேகா(ரனில்) வெற்றி சலசலப்புடன் நின்று விடுமென்றே பேசப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜபக்ச தோல்வியடைவதை விட அவர் வெற்றி பெறுவதற்கான காரணங்கள் நிறையவே உள்ளன என்பதை நாம் மறக்க முடியாதுள்ளது. 30 வருட பயங்கரவாத நோய் குணமாக்கப்பட்டுள்ளதும், ஜனாதிபதி ஜே.ஆர் நாட்டை பிரிக்க போட்ட அத்திவாரம் சுக்குநூறாக்கப் பட்டுள்ளதும், நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டுக் குழுவினர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் சந்தோசப்படும் வேளையில் தமிழ் கற்று, தமிழருடன் தமிழில் கதைக்க ஆர்வம் கொண்டவராக இருப்பதும், நாட்டின் அபிவிருத்தியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் கடந்தகால அனுபவங்களை மறந்து தமது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதிலேயே கவனம் செலுத்துவர் என்பதில் நம்பிக்கை கொண்டவராகவுள்ளதும், சர்வதேச பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வழி தேடுபவராக இருப்பதும், 180 நாட்களுக்குள் அகதிகளை சொந்த இடங்களுக்கு அனுப்புவேன் என்று கூறி ஓரளவு வெற்றி கண்டதும், வடக்கு கிழக்கின் நிரந்தர இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உண்மை கூறுவதும், சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திக்காவின் கூற்றை நிறைவேற்றியதும், சிங்களவர் மாத்திரம்தான் இலங்கையர் என்ற சரத்பொன்சேகாவின் யுத்தகால கூற்றுக்கப்பால் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற பேதமில்லை எல்லோரும் இலங்கையர்(?) என்று கூறுவது போன்ற பல்வேறு அடிப்படை காரணங்களுடன், திடீர் விலை குறைப்பு ஏற்பாடுகள், சம்பள உயர்வு அறிவிப்புகள் என்ற சில்லறை காரணங்கள் கூட மகிந்தாவின் வெற்றியை உறுதி செய்யப் போதுமானதாக பேசப்படுகின்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி த.தே.கூ ( TNA ) க்கும் சரத் பொன்சேக்காவிற்கும் இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் நாட்டை பிரிக்க எடுக்கும் பாரதுரமான தேசத்துரோகமாக சிங்கள மக்களிடையே சொல்லப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக த.தே.கூ யின் புலி ஆதரவு நிலைபாட்டை முன்னிறுத்துகின்றார் ராஜபக்ச. எனவே இவையெல்லாம் இவர் வெற்றி பெறுவார் என்றே கட்டியம் கூறுகின்றன.

இருப்பினும் ராஜபக்ச வெற்றி பெறுவார் அல்லது தோற்றுபோவார் என்பதற்கு அப்பால் இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டிய வலுவான காரணங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

sarath.jpgஅதற்கு இசைந்தாற்போல் முதலில் மற்றைய முக்கிய இரண்டு வேட்பாளர்களான சரத் பொன்சேகாவையும், சிவாஜிலிங்கத்தையும் சற்று தொட்டுச்செல்ல வேண்டியுள்ளது. பொன்சேகாவைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று ராஜபக்ச குடும்பத்துக்குப் பாடம்புகுத்தல், இரண்டு சிறுபான்மையினரை அவர்களின் இடத்தில் வைத்தல். ஆக இவருக்கு நாட்டின் அமைதியில், அபிவிருத்தியில் அக்கறை இல்லை. ரனில் விக்கிரமசிங்கவின் அரசியல் மதிஈனத்தால், தன்னால் என்றுமே ஜனாதிபதியாக வரமுடியாத நிலையில், தன்னால் முடிந்த ஆகக்கூடிய கைங்காரியத்தைச் செய்யும் முகமாக பொன்சேகாவைத் தன் கட்சியூடாக பொது வேட்பாளராக அமர்த்தியுள்ளார். தட்டில் வைத்துக் கொடுத்த பலகாரத்தை யார்தான் தட்டிக்கழிப்பர். தன் புதிய திட்டத்துக்குக் கனிந்து வந்த சந்தர்ப்பம் இது பொன்சேகாவிற்கு, சும்மா இருப்பாரா, ஆகவேதான் 13+ என்றும், ஜனநாயகத்தை கட்டிகாத்தல், மனித உரிமை, அது இது என்று தனக்குச் சம்பந்தமில்லாத விடயங்களை எல்லாம் பேசுகிறார். தற்போதய அரசியல் நகைச்சுவையாளர் இவரே. போதாக்குறைக்கு த.தே.கூ.யின் ஒத்துழைப்பு பொன்சேகாவை பொறுத்தவரை பழத்துடன் கூடிய பலகாரத்தட்டு. ஆனானப்பட்ட ரனிலுக்கே புத்தி பேதலித்துவிட்டதென்றால் சம்பந்தருக்குக் கேட்கவாவேண்டும். ஆள் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தாங்கள் இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட எடுக்கும் முயற்சியே இது என்பதைக்கூட விளங்கமுடியாத அளவுக்கு வயதாகிவிட்டது போலும்.

வாக்களிக்கும் உரிமை எமது ஜனநாயக உரிமை என்பதால் நிச்சயம் வாக்களித்தே ஆகவேண்டும் என்பதில்லை. வாக்கு இருந்தும் வாக்களிக்காமல் இருப்பதென்பதும் எமது ஜனநாயக உரிமையே. கடைசி ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத போது உணரப்படாத இந்த உரிமை இப்போது மாத்திரம் உணரப்பட்டது விசித்திரம் மாத்திரமல்ல இது ஆபத்தானதும் கூட. மொத்தத் தமிழ் வாக்காளர்களும் இந்த தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கெதிரான தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டலாம். இரண்டு போர்க் குற்றவாளிகளில் யாருக்கு வாக்களித்தாலும் தம்மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே த.தே.கூ யின் பொன்சேகா சார்புநிலை என்பது அவர்கள் சுட்டும் ஒட்டுகுழுக்களின் நிலைக்கு ஒப்பானது. பொன்சேகா பொதுவாக சிறுபான்மையினருக்கு, குறிப்பாக தழிழருக்கு எதிரானவர் என்பதை விட முழு நாட்டையுமே ஒரு சிக்கல் நிலைக்கு கொண்டுசெல்வார். புதிய ஒரு மியான்மர் (பர்மா)ரை ஆசிய கண்டத்தில் ஏற்படுத்துவார், நாளடைவில் பாக்கிஸ்தான் மாதிரியான நாடாகவே இலங்கையைக் கட்டியெழுப்ப வழி சமைப்பார்.

நாடா அது எக்கேடும் கெடட்டும், அதன் பிரைஜைகளா அது அவர்கள் பாடு, தமிழரா அவர்கள் எப்போதும் ஏமாறியே பழக்கப்பட்டவர்கள் அது பெரிய விடயமே இல்லை. எமக்கு பழிவாங்கலே முக்கியம். அடுத்த பொதுத்தேர்தலே எமது குறிக்கோள் என்றால் த.தே.கூ யின் இந்த சந்தர்ப்பவாதத்தை நாம் குறை கூற முடியாது. ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்திற்கு ராஜ தந்திரம், தமிழர் தொடர்பான நீண்டகால நோக்குதல் அது இது என்றால் இதைவிட ஒரு அரசியல் கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. த.தே.கூ யின் நிலைப்பாடு சரியானதே என்று புலம்பெயர் தமிழ் (புலி) மக்கள் கூக்குரலிடுவது அவர்களும் நாட்டில் வாழும் தமிழரைப்பற்றி, தமது சொந்த பந்தங்களைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. ஆக பொன்சேகாவும், த. தே. கூயும் ஒரே மாதிரி சிந்திப்போர், ஒரே திசையில் செல்வோர்.

சிவாஜிலிங்கத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாடு சரியாயினும், தான் தனித்து நின்று தமிழ் மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்ப்பது சிங்கள அரசிற்கு ஒரு சவால் மாத்திரமல்ல அது தமிழர், சிங்கள இறையாண்மையை ஏற்க்கவில்லை என்பதை நிரூபிக்க கிடைக்கும் சந்தர்பம் என்றாலும், அவரின் கடந்தகால நடவடிக்கை அவரில் கட்டுக்கடங்காத சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

sivaji.jpgகடைசிக் கட்ட போராட்ட காலத்தில் இந்த ஜீ மேற்கு நாடுகளில் புயல் பயணம் செய்து, அனல் கக்கும் பேச்சுக்கள் பேசி தமிழ் (புலி) மக்களை சுயசிந்தனை இழக்கச் செய்தார். அவர் கைகளிலும் இரத்தக்கறை உள்ளதென நாம் ஏற்கனவே ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டினோம். ஏனெனில் புலிகளால் மனிதக் கேடயமாக நிறுத்தப்பட்ட மக்கள்பற்றி அன்று இவர் வாய் திறக்கவில்லை. அதை விடவும் பின்வரும் சம்பவம் இந்த ஜீ எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மே 03, 2009. தமிழ் சட்டத்தரணிகளின் முதல் கட்ட உண்ணாவிரதம். பாராளுமன்ற சதுக்கத்தில், தீபம் தொலைக்காட்சிக்கு ஜீ பேட்டி கொடுத்து முடிந்த கையோடு அவரின் முதுகில் தட்டி, ‘மிஸ்டர்.சிவாஜிலிங்கம் நீங்கள் தானே புலிகளுடன் நெருக்கமானவர், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் பரிச்சையமானவர், மேற்குலக தமிழ் மக்களுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் உறவுப்பாலம் அமைப்பவர். ஏன் நீங்கள் புலிகளுடன் பேசி சர்வதேசத்தின் ஊடாக ஆயுதங்களை ஒரு பொதுவான நாட்டிடம் ஒப்படைத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரக்கூடாது. அங்கே தமிழர் அல்லவா சாகடிக்கப்படுகிறார்கள்’ இப்படி நான் கேட்க, சிவாஜிலிங்கத்தின் பதில் ‘ஐயா, இப்போது நாம் தமிழீழம் காணாவிட்டால் நாம் எப்போதும் பெறவே முடியாது. புலிகள் இப்போது ஆயுதங்களை கைவிட்டால் அது தமிழரின் தற்கொலைக்குச் சமனாகும்’ என்றார். இது மாத்திரம் இல்லாமல் இவர் யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே கோசம் எழுப்பினார், புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்ததை ஒருபோதும் கண்டிக்கவில்லை என்பது மாத்திரமல்ல அதை கண்டுகொள்ளவுமில்லை.

ஆனாலும் கடந்த டிசம்பர் மாதம் தேசம்நெட்ருக்கு பேட்டி வழங்கும் போது புலிகள் ஆயுதங்களை சர்வதேச நாடொன்றில் ஒப்படைக்காமல் கடைசிச் சண்டையின் போது நடந்து கொண்டவிதம் பிழையானது என்ற பொருள்பட கூறியுள்ளார். எனவே என்னிடம் கூறியது சரியாயின் தேசத்திடம் கூறியது பிழை. தேசம்நெட்டிடம் கூறியது சரியாயின் என்னிடம் கூறியது பொய். ஆக இவர் ஒரு சந்தர்ப்பவாதி. நிரந்தர கொள்கை இல்லாதவர். இவரின் கவலை எல்லாம் இந்த ஜனாதிபதி தேர்தல் அல்ல. எதிர்வரும் பொதுத்தேர்தலே. இதை விடவும் நகைச்சுவை என்னவென்றால் இவரின் தேர்தல் பிரவேசம் நிபந்தனைகளுடன் கூடிய ஒன்று. அதாவது சிங்கள வோட்டுக்கள் இரண்டாக பிரிந்தால், முன்னிலை வேட்பாளர்கள் 50% ஓட்டுக்கள் எடுக்காவிட்டால், தனக்கு ஆகக்குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகள் கிடைத்தால், அதுவே இரண்டாம் கட்ட போட்டியை தீர்மானிக்குமாக இருந்தால், தன்னை யாரும் பேச அழைத்தால் என்று நீண்டு சென்று இறுதியில்தான் பேரம்பேசல் என்று முடிகின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு. மேல் சொன்னவிதத்தில் எல்லாம் நடக்கும் என்பதற்கு எந்த விதத்திலும் உத்தரவாதமில்லை. மற்றயது இவர் என்ன பேரம் பேசப்போகிறார். கடந்த 60 வருடங்களாக பேசாத பேரம் என்ன இருக்கிறது. இவர் பேரம்பேசத் தகுதியானவர் என்றால் ஏன் மே 18 வரை புலிகள் இவரை பேரம் பேச அனுமதிக்கவில்லை என்ற நியாயமான கேள்விகளுக்கு சிவாஜிலிங்கம் பதில் தரவேண்டும். எனவே இதுவரை காலமும் புலிகளின் சேவகனாக இருந்து விட்டு, மக்களைப் பற்றி கவலைப்படாமல் திடீரென்று ராஜதந்திரம் என்றால் இது மக்களை ஏமாற்றும் நயவஞ்சகமே தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஆக சிவாஜிலிங்கத்தின் களமிறங்கல் நாட்டிலுள்ள தமிழரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. இவரும் கூடவே த.தே.கூ. யினரும் தங்கள் பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வார்களாயின் அதுவே தமிழர்களுக்கு அவர்கள் செய்யும் அரசியல் ரீதியிலான கைங்கரியம். இவர்கள் எவரும் தமிழ் அரசியலை சீவியகால குத்துகைக்கு எடுக்கவில்லையே. புதிய தலைவர்கள் நாட்டுக்குள்ளே இருக்கிறார்கள் அல்லது இனிமேல் பிறப்பார்கள். ஆகவே சிவாஜிலிங்கத்தை நிராகரிப்பதும் தமிழரின் ஜனநாயக கடமை.

ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு சர்வதேசமும் ஆயுத உதவி, பொருளாதார உதவி என்பவற்றோடு அவர்களுக்கு பக்கபலமாக நின்று புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடாத்தியும் வைத்தனர். இதற்கான ஒரே ஒரு நியாயம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பதே. இப்போது இந்த சர்வதேசத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதை தமிழர் உணர்த்த விரும்பினால் அதை இரண்டு விதமாகவே செய்ய முடியும். ஓன்று ஜனாதிபதி தேர்தலை முற்றாக நிராகரித்தல். இதன் மூலம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதியை உரக்கக் கூறி சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடன் ஒரு கெளரவமான தீர்வை ஏற்று கொள்ள தயாராய் இருத்தல். இரண்டு இலங்கையின் இறையாண்மையை ஏற்று ராஜபக்சையை வெற்றி பெற செய்வதின் மூலம் அவரை சர்வதேச சமூகத்துடன் கட்டி போடல். ராஜபக்சேயுடன் இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவருக்கு அழுத்தம் கொடுப்பதோடு வெளிநாடுகளிலும் இந்த அழுத்தம் மிகவும் அவதானமாகவும் செய்யப்படவேண்டும். இந்த நாடுகடந்த தமிழ் ஈழ அரசு திட்டத்தை( இது ஒரு கேலிக்கூத்து என்பது வேறு விடயம்) ஒரு பேச்சுவார்த்தைக்கான ஊக்குவிக்கும் கருவியாக பாவிக்கலாம்.

ராஜபக்ச தனது வெற்றியுடன் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பார் என்று கனவு காணமுடியாது, ஆனால் ஆயுத குழுக்களை இல்லாமல் செய்வார் என்பதை நம்பலாம். இருப்பினும் ஜனாதிபதி முறை மாற்றப்படாமல் இலங்கையில் சிறுபான்மையினர் பிரச்சினைக்கு பரிகாரம் இல்லை என்றால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாக இருக்க முடியாது. ஆக சிறுபான்மையினர் (தமிழர், சோனகர்) ஒன்றுபடாமலும், சிங்கள நேச சக்திகளை எம்முடன் சேர்க்காமலும், சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமலும் அவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் பரிகாரம் இல்லை என்பதை உணராமல், பழிவாங்கல் ஒன்று மாத்திரமே இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரின் குறி என்றால் நாம் இன்னும் ஒரு 60 வருடங்களுக்கு பழி வாங்கிக்கொண்டு, நாமும் அழிந்து நம் நாட்டையும் அழித்த பெருமையை பெற்றோராவோம்.

நன்றி- முகம்மது நிஸ்த்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்னக் காவடி : எஸ் ஜெயராஜா (பிரான்ஸ்)

voteஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரை பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதில் இரண்டு முக்கிய வேட்பாளர்களும் அவர்களுடன் வாக்குகளை பிரிக்க என்றுமாக, 22 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.

ஜனாதிபதி எந்தக் கட்சியாக இருந்தாலும் அல்லது கட்சியற்ற பொன்சேகா பதவிக்கு வந்தாலும் தன்னந் தனியனாக நிர்வாகம் நடத்துவதில்லை. தனது கட்சி உறுப்பினர்கள், அல்லது தனக்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்கள் என்று அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை வைத்தே நிர்வாகம் செய்யப்படும்.

இதில் மூன்றாம் நபராக உள்ள விக்கிரமபாகு கதைக்கின்ற சுயநிர்ணயம் கேட்க நல்லாகத்தான் இருக்கிறது.  சாத்தியமா என்பதற்கான விளக்கம் இல்லை. அத்தோடு இவர் சார்ந்த கட்சி ஒரு பலமான கட்டமைப்பை கொண்ட கட்சியுமல்ல. இவருக்கு வாக்களித்து எமது மக்களின் அடிப்படை, அத்தியாவசியமான பிரச்சினைகளை இவரால் தீர்க்க முடியாது.

இரண்டாம் நபர் சரத் பொன்சேகா. இவருக்கு கட்சி இல்லை. இவரை ஆதரிக்கின்ற இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. தங்களுடைய இன்றைய தேவைகளுக்கே இவரை ஆதரிக்கின்றனர். இவரோ ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன் என்கிறார். கட்சியும் இல்லை, ஜனாதிபதியும் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்யப் போகிறார். அன்னப்பறவையில் அன்னக் காவடியா?

மற்றையது இவர் ஒரு இராணுவ உயர் அதிகாரி. சீருடையைக் கழட்டியதால் மட்டும் இவரிடம் உள்ள இராணுவமாயை அகன்று விட்டது என்பது அல்ல.

இந்திய இராணுவம் வந்தபோதும் எமது மக்கள் கும்பம் வைத்து ஆலாத்தி எடுத்து தான் வரவேற்றார்கள். அதற்காக அவர்கள் கங்கையில் குளித்து விட்டு வந்த காந்திகள் அல்ல. அவர்களின் இயல்பான குணாம்சம் தானாகவே வந்து சேரும். பாக்கிஸ்தானைப் பார்த்த பின்புமா நாங்கள் திருந்தவில்லை. மகிந்தாவிற்கு சவாலாக ஒருவரை உருவாக்க சரத் என்ற தெரிவு விஷப்பரீட்சை. புலி ஆதரவாளர்கள், புலி ஊடகங்கள் ஏன் சரத்தை ஆதரிக்க வேண்டும். இவர்தானே அவர்களின் அழிவிலும் பங்காற்றியவர். மீண்டும் இலங்கையில் அமைதியின்மையை உருவாக்கி அதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் கடைவிரிக்க ஆதரிக்கிறார்கள். மகிந்த கட்சிக்கு சவாலாக எதிர்க்கட்சி உருவாகலாம். அது ஆரோக்கியமானது. மீண்டும் ஒரு குண்டு வெடிப்போ ஆயுதக்கலாச்சாரமோ எங்கள் சந்ததிக்கு வேண்டவே வேண்டாம்.

இன்று உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை முகாம்களில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டியதும், வெளியே வந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தலுமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிற விடயம். இதை யாருமே குழப்பக் கூடாது. இன்று வட கிழக்கில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும் ஒரு இயல்பு நிலை தோன்றியுள்ளது. கடந்த முப்பது வருடங்களைப் பின்னோக்கிப் பாருங்கள். 2008 2007 2006 …….. இப்படியே பின்னோக்கிப் போய் ஒவ்வொரு ஜனவரியிலும் நடந்த கொலைகளைப் பாருங்கள். இந்த ஜனவரியில் அவ்வாறு எத்தனை நடந்தள்ளது? குண்டு வெடிப்புகளும் இல்லை. குண்டுத் தாக்குதல்களும் இல்லை. செல் வீச்சுகளும் இல்லை. வெள்ளை வான் கடத்துவதில்லை. பொட்டு வைக்க பொட்டர் இல்லாததால் ஒரு ஜயரோ, பேராசிரியரோ, பல்கலைக்கழக மாணவனோ தனது சொந்தக் கருத்தை முன்வைக்கக் கூடிய நிலைமையுள்ளது.

அதற்காக நிபந்தனை அற்ற ஆதரவு என்கிற பதத்தை நாம் தவிர்க்க வேண்டும். மக்களுடன் சேர்ந்து இயங்கும் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மகிந்தவின் முன் நிபந்தனைகளை வைத்து ஆதரவளிக்க வேண்டும். அதற்காக மதகு கட்டவும், வோட்டு போடவும் தான் நாங்கள் போராடப் புறப்பட்டோம் என்பதல்ல. 36 வருடமாக நன்றாக இருந்த மதகுக்கு குண்டுவைத்தும், ஒழுங்காக இருந்த ரோட்டில் கண்ணி வெடி வைத்தும் நாங்கள் கண்டதென்ன? அன்று நவீன சந்தை கட்டிய துரையப்பாவை போட்டுத்தள்ளாமல் இருந்திருந்தால் இன்று சீனப்பெருஞ்சுவரே கட்டியிருக்கலாம்.
பிரச்சினையும் தீர்வும் அந்த மக்களுக்கு தான். இங்கு ரிவி க்கு முன் கோட்டு போட்டு வந்து ஆய்வு செய்பவர்களுக்கோ, வெள்ளவத்தையிலும் பம்பலப்பிட்டியிலும் சொகுசாக வாழ்ந்து கொண்டு பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர்களுக்கோ அல்ல. எல்லாவற்றையும் தொலைத்துப்போட்டு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்குத்தான் தீர்வு.

அந்த மக்களுக்கு இன்று செய்ய வேண்டியது என்ன?. வன்னியிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை ஓடி முகாம்களில் இருந்து சொல்லொணாத் துன்பங்களை தாங்கி நின்ற போது, அவர்களைக் காப்பாற்றாமல் புலிகளைக் காப்பாற்ற பாடுபட்ட கூட்டமைப்பு – தங்கள் தலைவர்களை கொன்றவர்களுடன் கை கோர்த்த கூட்டமைப்பு – மூன்று மாதமாக முடிவு எடுக்கத் தெரியாத கூட்டமைப்பு – இலங்கைத் தேர்தலில் லண்டன் வந்து விளக்கம் சொல்லும் கூட்டமைப்பு – எந்த முகத்துடன் வோட்டு கேட்க முடியும். இவர்களுடன் ஒப்பிட்டால் சிறீதரனும் சித்தார்த்தனும் எவ்வளவோ மேல்.

எனவே வடக்கிலும் கிழக்கிலும் மக்களோடு நின்று தங்களால் முடிந்ததை அந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கும் தலைமைகள் யாருக்கு வோட்டு போடச் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கே வோட்டுப்போட்டு இந்த ஆறு மாதம் போல் இன்னும் 6 வருடம் கழிந்தால் அவர்களும் அத்தியாவசியப் பிரச்சினையிலிருந்து நீங்கி கொஞ்சம் நிமிர்ந்து வாழ்வார்களே! அதுதான் இன்றைய தேவை!!.

சந்தர்ப்பத்திற்கேற்றவாறு முடிவெடுக்கத் தெரியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திண்டாடுகிறது

வட,கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கிருந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்குமே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பேரம் பேசும் சக்தியாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்டிக்காத்தார். எனினும் இப்போது அது திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுக்கத் தெரியாத நிலையில், அக்கட்சி திண்டாடுகின்றது. மர்ஹும் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்குப் பின் அதன் போக்கே மாறியுள்ளது.

இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியும் வீடமைப்பு அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மக்கள் தோட்ட முகாமைத்துவப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.அம்ஜித் தலைமையில் மருதமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.உவைஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய ஆலோசகர் இசட், ஏ.எச்.ரஹ்மான், முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா, முன்னாள் பிரதிமேயர் அசாத்சாலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பேரியல்; யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்திய பின்னரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமூகத்தைக் காட்டிக் கொடுத்து சுயநலம் கருதிய நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது.

79 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுதலை; அடுத்த வாரம் மேலும் 200 பேர் விடுதலையாவர்

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரத்திற்குள் மேலும் 200 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 48 பேரில் 17 பேர் விடுதலை செய்யப் பட்டுள்ளதுடன் 13 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பாக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 200 பேரை அடுத்த வாரத்திற்குள் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் வவுனியா, தெல்லிப்பழை, வெலிக்கந்த ஆகிய இடங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் 11 ஆயிரம் பேரில் 700 பேர் அண்மையில் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றங்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 பேரும் படிப்படியாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விடுதலை தொடர்பாக ஆராயவென சட்டமா அதிபர் திணைக்களம் 10 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்றை நியமித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்குவது என்றாலும் கூட நன்கு ஆராய்ந்தே விடுதலைப் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். யுத்த காலப் பகுதிகளில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டார்கள். இவ்விடயத்தில் அமைச்சு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிந்த பின்னரும் கூட வெறுமனே தடுத்து வைத்திருப்பதில் பலனில்லை. எவ்விதத்திலேயேனும் அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சரணடைந்தவர்கள் தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை வெறுமனே வெளி யில் விடாமல் அவர்களது பெற்றோருடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கவும், சுயதொழில் செய்வதற்கு தேவையான உதவிகளையும் பெற்றோரிடம் கலந்தா லோசித்து பெற்றுக் கொடுக்கவுள்ளோம். எனவே இவ்விடயத்தில் எவரும் அரசியல் இலாபம் தேடக்கூடாது. அரசாங்கமும் அமைச்சும் இளைஞர்களின் விடுதலை தொடர்பான தேவையான சகல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.