2010

2010

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் நாடாளுமன்றில் தனித்து இயங்கப்போவது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unp_logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயேற்சைக் குழுவாக இன்னும் சில தினங்களில் இயங்கத் தொடங்குவர் எனவும், இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தனியாக இயங்கப்போவதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் போது கட்சியின் இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் தாங்கள் திருப்தியடையவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சி மறுசீரமைப்புக் குழு ஒரு மாதத்துக்கு முன்னரே சிபார்சுகளை கையளித்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.  கட்சியின் தேசிய மாநாடு யூலை மாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்போடப்பட்டது. இப்பொது டிசெம்பர் மாதத்தில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இயங்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆராய்கிறது

Amnesty_International_Logoபடிப்பினை கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை மேற்கொள்ள சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தாம் எவ்வித முடிவினையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கபட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக  சர்வதேச மன்னிப்பச்சபையின் ஊடக அதிகாரி தோமஸ் யோகோம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் அழைப்பு எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபைக்கும், மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

Chavakachcheri_Jumma_Mosqueயாழில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விபரங்களை நூல் வடிவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவம் யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதமளவில் இந்த நூல் வெளியீடு நடைபெறவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலாமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள். கலை இலக்கியவாதிகள் சகலரும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என குறித்த பள்ளிவாசல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் மேலும் 356 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளன.

வடமராட்சிக் கிழக்கில் முதற்கட்டமாக 356 குடும்பங்களைச் சோந்த 1092; பேர்  மீள் குடியமர்த்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நலன்பரி நிலையங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் மக்கள் மீள்குடியமாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை.

Univercity_of_Paradeniyaகண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 கொழும்பு பல்கலைக்கழக்த்திற்கள் பிராவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களைத் தாக்கினர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரைக் கைது செய்து கொழுப்பு நீதிமன்றில் கறுவாத்தோட்ட பொலிஸாhர் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் மீதான விசாரணைகளின் போது அவர்களை நீதவான் கண்டித்ததன் பின்னர் பிணையில் விடுதலை செய்தார்.

”எமது கழகத்தில் நிதிநெருக்கடி உள்ளது. ஆனால் எமது முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் இதனைப் பெரிது படுத்துகின்றனர்!!!” வசந்தன் கிருஸ்ணன் (பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம்)

BTSL_Logoலண்டனில் தமிழ் விளையாட்டுக் கழகங்கள் லாபத்துடன் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் மிகவும் வெறிறிகரமாகச் செயற்பட்ட பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் (British Tamils Spoerts League – BTSL) தற்போது நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக அக்கழகத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவிக்கின்றன. பந்துகள் வாங்குவதும் நடுவருக்கு கட்டணம் செலுத்துவதுமே பிரச்சினையானதாக மாறியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனை பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம். அவர்களுடைய விளையாட்டுக்குழுவின் சந்திப்பின் பின்னதாக எமது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலம்சென்ற போராளி கேணல் கிட்டுவின் பெரிய படத்துடன் இருந்த அந்தச் சந்திப்பு அறையிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது. தேசம்நெற் சார்பில் நானும் நண்பர் த சோதிலிங்கமும் தமிழர் விளையாட்டுக் கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணன் வணங்கா மண் கப்பலில் பயணம் செய்த ஊடகவியலாளர் உதயணன் மற்றும் இரு உறுப்பினர்களும் இருந்தனர். பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் என்ற வகையில் வசந்தன் கிருஸ்ணனின் கருத்துக்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படுகிறது.

எமது கேள்விகள் பெரும்பாலும் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அதன் அதன் நிதி நிர்வாகம், பிரித்ததானிய விளையாட்டுக் கழகத்தின் எதிர்காலம் பற்றியதாகவே இருந்தது.

இவற்றுக்குப் பதிலளித்த வசந்தன் கிருஸ்ணன் விளையாட்டுக் கழகம் சிறிய அளவில் நிதிநெருக்கடியை சந்தித்து உள்ளதாகவும் ஆனால் அது தங்கள் முன்னேற்றத்தை விரும்பாதவர்களால் பெரிதுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

‘பந்துகள் வாங்குவதற்கு பணம் வழங்கப்படுவதில்லை என்பதெல்லாம் உண்மையல்ல’ எனக் குறிப்பிட்ட அவர் ‘கிரிக்கட் விளையாட்டுக்கள் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெறுவதால் வாங்கிய பந்துகளை குறித்த நேரத்தில் விநியோகிக்க முடிவதில்லை’ எனத் தெரிவித்தார். இதற்கான மாற்று வழியாக விளையாட்டுக் கழகங்களே பந்துகளை வாங்கவும் நடுவருக்கான பணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். ‘அதற்கான செலவை தாங்கள் அவர்களுடைய கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்வோம்’ எனவும் வசந்தன் சுட்டிக்காட்டினார்.

‘விளையாட்டுக் கழகம் கிரிக்கட் போட்டிகளை ஆரம்பித்த காலங்களில் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலித்தது’ என்றும் அதனால் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட நட்டமே இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழர் விளையாட்டுக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 10 வருடங்களுக்கு மேலாக யாழ் இந்தக்கல்லூரிப் பழைய மாணவர் எஸ் ஸ்கந்தமூர்த்தி என்பவர் கிரிகட் போட்டிகளை ஆண்டு தோறும் நடாத்தி வந்தார். இவருடைய லீக்கில் இருந்த விளையாட்டுக் கழகங்களைக் கவருவதற்காகவே பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மிகக் குறைந்த கட்டணத்தை அறவிட்டது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால் அதுவே இப்போதைய நெருக்கடிக்கு காரணமாகவும் அமைந்துள்ளது என வசந்தன் கிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

‘ஸ்கந்தமூர்த்தி உருவாக்கிய விளையாட்டுக் கழகத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள்  அதிருப்தியடைந்து வெளியேறியவர்கள். அவர்கள் தாயகப் பற்றுடையவர்கள்’ எனக் கூறும் வசந்தன் கிருஸ்ணன் ‘இறுதியில் வெளியேறி தங்களுடன் இணைந்தவர்கள் வேறு வழியின்றியே தங்களுடன் இணைந்தனர்’ எனக் கூறினார். ‘பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் பெரும்பாலான கழகங்கள் இணைந்த நிலையில் ஸ்கந்தமூர்த்தியினால் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த முடியாது போனமையினால் ஏனைய கழகங்கள் விரும்பமின்றி விளையாட்டுப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே வந்து இணைந்தனர்’ என்றும் வசந்தன் கிருஸ்ணன் விபரித்தார். இவ்வாறான விளையாட்டுக் கழகங்களே தற்போது சிறிய விவகாரங்களையும் பெரிதுபடுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய விளையாட்டுக் கழகம் தனது கணக்கு விபரங்களை ஏன் இதுவரை வெளியிடவில்லை எனக் கேட்கப்பட்ட போது, ‘கழகங்கள் விரும்பும்பட்சத்தில் அதனைப் பார்வையிட முடியும்’ எனத் தெரிவித்தார் வசந்தன் கிருஸ்ணன். ‘அண்மையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதில் கணக்கு விபரங்களை வெளியிட்டோம். ஆனால் பல கழகங்கள் அதில் சமூகமளிக்கவில்லை’ எனவும் வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். உங்கள் விளையாட்டுக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்தியே உறுப்பினராக உள்ளனர். ஆகவே நீங்கள் கணக்கு விபரத்தை அவர்களுக்கு மின் அஞ்சலூடாக அனுப்ப முடியும் அல்லது உங்கள் இணையத்திலேயே பிரசுரிக்க முடியுமே எனக் கேட்ட போதும் ‘நாங்கள் கணக்கு வழக்கை காட்டத தயாராக உள்ளோம். விரும்பியவர்கள் எங்களை அணுகலாம்’ எனப் பதில் தரப்பட்டது.

தங்களுக்கு உள்ள நிதிநெருக்கடிகளை தாங்கள் ஓரளவு சமாளித்து வருவதுடன் கழகங்களிடம் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்தி வருவதாக வசந்தன் கிருஸ்ணன் தெரிவித்தார். இன்னும் சில ஆயிரம் பவுண்களே கடன்கள் இருப்பதாகத் தெரிவித்த வசந்தன் கிருஸ்ணன் இன்றுள்ள அரசியல் சூழலால் பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டுக் கழகத்தில் ஒரு கண் வைத்துள்ளதாகவும் இதனால், தான் உள்முரண்பாடுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானதாகவும் கூறினார்.

எவ்வாறான நெருக்கடிகள் சிக்கல்கள் தோண்றிய போதும் பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் தனது பயணத்தை உறுதியுடன் தொடரும் என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார். தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் மேவி வரும் என்ற நம்பிக்கையுடன் அவர் எமக்கு விடைதந்தார்.

._._._._._.

லண்டன் குரலில் வெளியான செய்தி:

100,000 பவுண் நிதிப்புரள்வு – 45,000 பவுண் லாபம் ஈட்டக் கூடிய அமைப்பு! 5 வருடங்களாக கணக்கு வழக்கு இல்லை! பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் !

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்தின் எதிர் காலம் கேள்விக் குறியாகி உள்ளது. ஆண்டுக்கு 50 000 பவுண்களை வரை லாபமீட்டக் கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் கணக்கு வழக்குகளில் நட்டம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

துடுப்பாட்ட விளையாட்டுக்கான பந்துகள் வழங்கப்படவில்லை, நடுவர்களுக்கு திகதியிடப்படாமல் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்புகின்றன, சில போட்டிகளுக்கு மைதானமே ஏற்பாடு செய்யப்படவில்லை. சில இடங்களில் பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்திற்கு மைதானங்களை வழங்க உரிமை நிறுவனங்கள் மறுக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தாயகத்தில் இருந்து வந்த வசந்தன் கிருஸ்ணன் என்பவர் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவர் மட்டுமே பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தின் அறியப்பட்ட பொறுப்புடைய ஒருவராக உள்ளார். இவரைத்தவிர அந்த அமைப்பில் வேறு எவரையும் 1200 விளையாட்டு வீரர்களும் 60 விளையாட்டு கழகங்களும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த வசந்தன் என்ற பொறுப்பாளரின் பின்னால் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதி சேகரிப்பு விடயங்களுடனும் தொடர்புடைய தனம் என்பவர் இயங்குவதாக லண்டன்குரலுக்குத் தெரியவருகிறது.

100 000 பவுண் நிதி வருமானத்தையும்  45 000 செலவு தவிர்ந்த லாபத்தையும் பெறக்கூடிய பிரித்தானிய தமிழ் விளையாட்டக் கழகம் நட்டத்தில் உள்ளதாகக் கூறி விளையாட்டுக் கழகங்களின் பல்லாயிரக் கணக்கான பணத்தை காணாமலாக்கி உள்ளது.

1200க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆண்டுக்கு 100 000 பவுண்கள் வரை நிதியைப் பெற்றுக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் (British Tamil Sports League) தற்போது நிதிப் பிரச்சினையில் சிக்கி உள்ளது. தங்களுடைய பொறுப்பு ”to develop such a sports organization and leagues set-up where sports and sportsmanship is truly developed and sustained at the same time”, என்று தங்கள் இணையத்தில் தெரிவித்துள்ள அமைப்பின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

அண்மைக் காலமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தன்னுடைய உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் இருந்தும் கடமையில் இருந்தும் தவறியுள்ளது. விளையாட்டு வீரர்களிடம் இருந்தும் விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் குறித்த காலத்தில் நிதியை வசூலித்த பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத்தவறியுள்ளது.

வாரம் தோறும் விளையாட்டுக் குழுக்களிடையே நடைபெறும் போட்டிகளை ஒழுங்கமைப்பதில் பல தவறுகள் விடப்பட்டு உள்ளது. கிரிக்கட் விளையாட்டில் தேவையான பந்துகள் வழங்கப்படவில்லை. நடுவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணம் வழங்கப்படாததால் நடுவர்கள் கடமைக்கு வரத் தவறியுள்ளனர். சில போட்டிகளுக்கு மைதானமே பதிவு செய்யப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டு வீரர்கள் வெறுப்படைந்து போயுள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டு கழகத்தில் 40 துடுப்பாட்ட கழகங்களும் 20 உதைபந்தாட்டக் கழகங்களுமாக 60 விளையாட்டுக் கழகங்கள் 1200 விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கு பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
விளையாட்டு வீரரின் உறுப்புரிமைக் கட்டணம் 10.00 பவுண்
விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக் கட்டணம் 605.00 பவுண்
Twenty – 20 துடுப்பாட்ட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டனம் 170.00 பவுண்
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான அம்பயருக்கான கட்டணம் 360.00 பவுண் (ஒரு போட்டிக்கு ஒரு கழகம் 20 பவுண் செலுத்த வேண்டும் 18 போட்டிகளுக்கு)
18 துடுப்பாட்ட போட்டிகளுக்கான 18 பந்துகளுக்கான கட்டணம் 180.00 பவுண் (ஒரு பந்து 10.00 பவுண்)

இவ்வாறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு இவற்றுடன் மைதானங்களுக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விளையாட்டுக் கழகமும் 1500 பவுண்கள் வரை கட்டணமாகச் செலுத்தி இருந்தனர்.

கட்டணங்களை ஆர்வமுடன் வசூலித்தவர்கள் அதற்கான சேவையை வழங்கவில்லை. இது பற்றி அறிய பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள் முயற்சித்த போதும் அது வெற்றியளிக்கவில்லை. (லண்டன் குரல் பதிப்பிற்குச் சென்ற பின் வசந்தன் கிருஸ்ணனுடன் தொடர்புகொள்ள முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய அலுவலகம் சென்று வசந்தன் கிருஸ்ணனைச் சந்தித்தோம். அதன் விபரம் மேலுள்ளது.)

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தின் பொறுப்பற்ற செயல் விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வசந்தன் விளையாட்டுக் கழகங்களுக்கு யூலை 10, 2010ல் ஒரு மின்அஞ்சலை அனுப்பி இருந்தார். இம்மின் அஞ்சல் லண்டன் குரலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அந்த மின்அஞ்சலில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ”As you all aware, we have come across with some logistical problems in our 5th year Cricket league in 2010”, என வசந்தன் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு தீர்வாக விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களில் இருந்து
1.    Organisation committee
2.    Team selecting committee
3.    Decision making committee
ஆகிய மூன்று குழுக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இவ்வாறான குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியாது என லண்டன் குரல் தொடர்புகொண்ட விளையாட்டு கழகங்கள் தெரிவித்தன.

அம்பயர் (நடுவர்)களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இன்றித் திரும்பின. அதனால் நடுவர்கள் வராமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. பந்துகளும் வழங்கப்படுவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நடுவருக்கான கொடுப்பனவையும் பந்துகளை வாங்கும் பொறுப்பையும் கழகங்களுக்கே விட்டுவிடுவதாக வசந்தன் தன் மின் அஞ்சலில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால போட்டிகளில் நடுவருக்கான பணத்தைக் கட்டியும் நடுவர் வராது இருந்திருந்தால் அத்தொகையை அடுத்த ஆண்டு கண்டனத்தில் கழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாண்டு நடுப்பகுதியில்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும் அதற்காக விளையாட்டுக் கழகங்கள் 500 முதல் 1500 பவுண் வரை முற்பணமாகச் செலுத்தினால் யூன் 20 2010 ரூனமன்ற் முடிவில் அப்பணம் கையளிக்கப்படுவதுடன் அடுத்த ஆண்டு அவர்கள் கட்ட வேண்டிய லீக் கட்டணத்தில் அவர்கள் செலுத்திய தொகை கழிக்கப்படும் எனவும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் சார்பில் வசந்தன் கேட்டு இருந்தார்.  இதற்கு சில விளையாட்டுக் கழகங்கள் செவிசாய்த்து பணத்தைச் செலுத்தியும் இருந்தன.

இது தொடர்பாக மகாஜநாக் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்துடன் தொடர்பு கொண்ட போது தாங்கள் கழகமாக பணம் செலுத்தவில்லை என்றும் தங்களுடைய இரு விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு 750 பவுண் வழங்கி 1500 பவுண்களை பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகத்திற்கு செலுத்தியதாக புவனேந்திரன் தெரிவித்தார். வேறு சில கழகங்களும் இவ்வாறு முற்பணத்தைச் செலுத்தி இருந்தனர். ஆனால் யூன் 20 ரூனமன்ற் நிறைவு பெற்று இரு மாதங்கள் ஓடிய நிலையிலும் இப்பணம் திருப்பி வழங்கப்படவில்லை. அதுவே வசந்தன் மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் வசந்தன் இதனை நடுவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஒரு 20 பவுண் பிரச்சினையாக உண்மையை மறைத்துள்ளார்.

வசந்தனுடைய மின் அஞ்சலுக்கு கடுமையான பதில்களை சில விளையாட்டு கழகங்கள் அனுப்பி வைத்தள்ளன. அவற்றில் சில லண்டன்குரலின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருந்தது. யூலை 12 2010ல் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக கார்த்திக் இவ்வாறு எழுதி இருந்தார். ”Hi Vasanthan, We are also in the same position, Just give us the money back and we have no intention of playing in your league for next year”.
 
இது பற்றி RLSSC விளையாட்டுக் கழகம் சார்பில் ரஞ்சன் எழுதிய மின் அஞ்சலில் ”Hi Vasanthan, Our club not accepting all this rubbish after five years. What happened to our money we already paid to you?” எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைக்க லண்டனை தென்கிழக்கு, தென்மேற்கு வடகிழக்கு வடமேற்கு எனப் பிரித்து நால்வரை நியமித்துள்ளனர். அவர்கள் விபரம்
Southeast – Para (Lewshiam CC)
Southwest – Ragulan (Bloomfield CC)
Northeast – Sugumar (Five Star CC)
Northwest – Gobi (Tamil Union CC)

இவர்களில் லூசியம் விளையாட்டுக் கழகம் பரா, ஃபைவ் ஸ்ரார் விளையாட்டு கழகம் சுகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இவர்கள் பிரித்தானிய தமிழர் விளையாட்டு கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை உறுதிப்படுத்தினர். தங்கள் பகுதிகளில் உள்ள கழகங்கள் அதிருப்தி அடைந்துள்ளதையும் தெரியப்படுத்தினர்.

கடந்த ஐந்த ஆண்டுகளில் எப்போதாவது கணக்கு விபரங்கள் விளையாட்டு கழகங்களுக்கு காட்டப்பட்டதா எனக் கேட்ட போது பராவும் சுகுமாரும் இல்லையென்றே பதிலளித்தனர்.
பரா தனது பதிலில் ‘முதல் மூன்று வருடமும் பிரச்சினைகள் எதுவும் எழவில்லை. இப்போது தான் பிரச்சினைகள் எழுந்தள்ளது’ என்றார். அவர் மேலும் கூறுகையில் ‘எனக்கும் இந்த பண நிர்வாக விடயங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒரு உதவியாக போட்டிகளை ஒழுங்குபடுத்தக் கேட்டார்கள் செய்கிறேன்’ என்றார். ‘இந்த வருடமே பணக் கஸ்டம் என்றால் ஏற்கனவே சில கிளப்புகளிடம் பணம் பெற்றுள்ளதால் அடுத்த வருஸம் எப்படி இருக்குமோ தெரியாது?’ என்றும் பரா சந்தேகத்தை வெளியிட்டார்.

சுகுமார் பதிலளிக்கையில் ‘அப்போது பணம் ஊருக்கு அனுப்பப்படுவதாகச் சொன்னார்கள். நாங்களும் யாரும் கணக்கு கேட்க விரும்புவதில்லை. இப்போது அங்கு பணம் அனுப்ப இவர்களுக்கு வழியில்லை. என்ன நடக்கிறது என்று கேட்கிறார்கள். பாஸ்ட் இஸ் பாஸ். இனி சரியாகச் செய்ய வேணும் என்று கேட்கிறார்கள். சில கிளப்புகள் கடுமையாக இருக்கிறார்கள். தாங்கள் அடுத்த வருடம் விளையாட வர மாட்டார்கள் என்கிறார்கள்’ என்றார். ‘இந்த வருசம் கிளப்புகள் பணம் செலுத்திவிட்டினம். அடுத்த வருஸம் அவர்கள் குறைந்த தொகையே கட்ட வேண்டி இருக்கும். அடுத்த வருஸம் எப்படிச் சமாளிப்பார்கள் என்று தெரியாது’ என சுகுமாரும் பரா போன்றே சந்தேகம் எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிக்கான செலவுகள் அனைத்தும் 60 விளையாட்டுக் கழகங்களிடம் இருந்தும் பெறும் வேறுவேறு கட்டணங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் விளையாட்டுவிழா நுழைவுக் கட்டணம் செவனியர் மூலம் திரட்டப்படும் விளம்பரப் பணம், ஸ்பொன்சேர்ஸ் என்று பன்முகப்பட்ட வருவாய்கள் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உண்டு. இவற்றைவிடவும் விளையாட்டுக் கழகத்தின் நுழைவுக்கும் விளையாட்டு வீரர்களின் உறுப்புரிமைக்கும் பெறப்படும் கட்டணம் 750 பவுண் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு உரியது. அதாவது ஆண்டுக்கு 45000 பவுண் செலவு தவிர்ந்த பணம்.  இந்நிலையில் பிரித்தானிய விளையாட்டுக் கழகம் நிதிப் பிரச்சினைக்கு உள்ளானதற்கான காரணங்கள் மர்மமானதாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தெரியாத நிலையிலேயே உறுப்புரிமை செலுத்திய விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

லண்டனில் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு முன்னரேயே இதில் தேர்ச்சி பெற்ற அமைப்புகள் இருந்தன. கிழக்கு லண்டனில் ஸ்கந்தமூர்த்தி கிரிக்கட் கழகங்களை இணைத்து விளையாட்டுப் போட்டிகளை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடாத்தி வந்தார்.

தாயக மக்களுக்கு உதவுகின்றோம் தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் அனுமதிக்கப்பட முடியாது என்ற விடயங்களை முன் வைத்து பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழகங்களை தன் பக்கம் வளைத்தப் போட்டது. அதன் பின்னர் தங்கள் விதிமுறைகளை தேவைக்கு ஏற்ப வளைத்தனர். தமிழ் கழகங்களில் வேறு இனத்தவர்கள் இருக்கலாம் ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் தாய் அல்லது தந்தை தமிழராக இருக்க வேண்டும் என்ற செருகல்கள் அனைத்தும் புகுத்தப்பட்டது. இருந்தும் தாயக மக்களுக்கு சில உதவிகள் கிடைக்கும் என பல விடயங்களும் பொறுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிலைமை முற்றாக மாறி உள்ளது.

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுக் கழகம் (Tamil Schools Sports Association – TSSA) கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இது பற்றி அவ்வமைப்பின் தலைவர் ந கெங்காதரன் லண்டன்குரலுக்குத் தெரிவிக்கையில், ‘TSSA என்றுமே விளையாட்டு விழாக்களை போட்டிகளை நடாத்தி நட்டப்பட்டதில்லை’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு அறிக்கை கழகங்களின் பார்வைக்கு இருக்கும். பெறப்பட்ட லாபத்தில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படும். அதனை அவர்கள் தங்கள் பாடசாலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தவார்கள். மூன்றில் ஒரு பங்கு TSSA இன் வளர்ச்சிக்கு அதன் வைப்பிலிடப்படும்’ எனத் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் விளையாட்டுக் கழகம் போட்டிகளை நடாத்திய அதே காலப்பகுதியில் தனிப் பாடசாலையாக தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி தங்கள் 150 ஆண்டு விழாவைக் குறிக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விளையாட்டுப் போட்டிகளிலும் தாங்கள் சில ஆயிரம் பவுண்களை யாவது லாபமீட்டியதாக அக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். தங்கள் வரவு செலவுக் கணக்கு வரும்போது உண்மையான தொகை தெரியவரும் எனத் தெரிவித்த அவர், பாடசாலையின் 150வது விழா என்பதால் தாங்கள் செலவுகளை சற்று அதிகமாகவே மேற்கொண்டதாவும் கூறினார்.

லண்டன்குரலுக்கு கிடைக்கின்ற தகவல்களும் ஏனைய விளையாட்டுக் கழகங்களின் அனுபவங்களும் பிரித்தானிய தமிழ் விளையாட்டுக் கழகத்தில் பாரதூரமான நிதி நிர்வாகச் சீர்கேடுகள் இடம்பெற்றிருப்பதையே காட்டி நிற்கின்றது.

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

Linganathan_giving_speechவவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.

மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.

செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்.  இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.

நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.

போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையும் – விவாதங்களும். : ரதிவர்மன்

Pope_Benedict_XVI_1945_WorldWar2Pope_Benedict_XVI_1977_ProfessorPope_Benedict_XVI_2009நாளைக்கு (16.09.10) கத்தோலிக்கர்களின் புனிதத்தலமான வத்திக்கன் நகரின் 265வது மதத்தலைவரான கத்தோலிக்க புனித தந்தை போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் அவர்கள் பிரித்தானியாவுக்கான தனது முதலாவது வருகையை மேற்கொள்கிறார். 1982ம் ஆண்டில் அன்று போப்பாண்டவராகவிருந்த புனித தந்தை, மதிப்புக்குரிய 2வது போல் அவர்கள் இங்கிலாந்துக்கு வருகைதந்தார். அப்போது ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அவரை மிகவும் உற்சாகமாக வரவேற்றார்கள். உலகின் மனிதத் தொகையில் 17 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க மதத்தைந் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பில்லியன் உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள்.

இங்கிலாந்தில் 61 கோடி மக்களில், பல தரப்பட்ட  கிறிஸ்தவ (கத்தோலிக்க அங்கிலிக்கன் போன்ற) தேவாலயங்களுக்கும் 4 விழுக்காடு மக்கள் மட்டும்தான் பிரார்த்தனைக்குச் செல்வதாக் கணிப்பீடுகள் சொல்கின்றன. கத்தோலிக்க மத குருமார்கள் 21ம் நூற்றாண்டின் யதார்த்தமான வாழ்க்கை முறையைப்புரிந்து கொண்டு பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காததால் போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையை ஒட்டிப் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
1982ம் ஆண்டு புனித தந்தைக்குக் கொடுத்த வரவேற்புக்கு எதிர்மாறக, இப்போது, பல தரப்பட்ட குழுக்கள் போப்பாண்டவரின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.

2005ம் ஆண்டு போப்பாண்டவராகப் பதவி பெற்ற புனித தந்தை பெனடிக்ட் போப்பாண்டவராக முதலே, தனது பழமையான கத்தோலிக்கக் கருத்துக்களால், பொது மக்கள், அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள், மதத் தலைவர்கள் என்ற மட்டங்களில் பல விவாதங்களை உருவாக்கி விட்டவர்.

Pope_Benedict_XVI_1945_WorldWar21927ம் ஆண்டு பவேரியா என்ற இடத்தில் பிறந்த போப்பாண்டவரின் இயற் பெயர் யோசேவ் அலோயிஸ் ரட்சிங்கர் என்பதாகும். இவர் தனது 14வது வயதில் ஹிட்லரின் இளைஞர் படையில் (1941ல்)  சேர்ந்தார். ஹிட்லரின் திட்டத்தின்படி ஆயிரக்கணக்கான ஊனமற்ற மக்கள் கொல்லப்பட்டார்கள் இவர்களின் குடும்பத்தில் உள்ள மூளை வளர்ச்சி குறைந்த ஒருவரும் ஹிட்லரால் கொல்லப்பட்டார். இவரின் தந்தையார் நாஷிகளின் எதிரியென்று குறிப்பிடப்படுகிறது. போப்பாண்டவர் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர்ந்தாலும் கட்சிக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் 16வது வயதில் ஹிட்லரின் போர்ப் படையிற் சேர்ந்தார் போர் முடிந்ததும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்குத் தப்பியோடினாலும் அமெரிக்கராற் பிடிக்கப்பட்டுச் சிறைவைக்கப் பட்டார்.

மிகவும் பழைமைவாதக் கருத்துகளுடன் வாழும் போப்பாண்டவர் பூனைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். வத்திக்கான் மாளிகையில் மிருகங்கள் வைத்திருக்ககூடாது என்ற சட்டம் இருப்பதால் தனது இரு பூனைகளையும்,  தனது தனிப்பட்ட வீட்டில் வைத்திருக்கிறாராம். இவரது தாய் மரியா ஒரு காலத்தில் செய்து கொடுத்த  பஞ்சடைத்த விளையாட்டுப் பொருளான பூனையை இன்னும் தன்னோடு வைத்திருக்கிறாராம்.  இசையில் மிகவும் மிகவும் பிரியமுள்ள புனித தந்தை பியானோ வாசிப்பாராம் அத்துடன் பேத்தோவன், மோஷார்ட் போன்றோரின் இசையை விரும்பிக்கேட்பாராம். புத்தகங்களில் மிகவும் ஆர்வமுள்ள போப்பாண்டவர் நிறைய வாசிப்பது மட்டுமன்றி நிறையப் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். புத்தகங்கள் உலகம் பரந்த கத்தோலிக்கரால் கோடிக்கணக்காக வாங்கப்படுகிறது, முற்போக்குச் சமுதாயவாதிகளால் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது.

Pope_Benedict_XVI_1977_Professorஇரண்டாவது உலக யுத்தத்தின்பின் சமயப் படிப்பில் இறங்கிய ரட்சிங்கர் அவர்கள் தனது கலாநிதி பட்டத்திற்கான மேற்படிப்புக்களை முடித்தபின் சமயப் பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களிற் பணியாற்றினார். இவரது பழைமைசார்ந்த சமயக் கருத்துக்களைப் போகுமிடம் எல்லாம் போதித்தார். முற்போக்கு கொள்கைளை எதிர்த்தார். உதாரணமாக 1968ம் ஆண்டுகளில் பாரிஸில் மாணவர் நடத்திய சமுதாயப் போராட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

எயிட்ஸ் நோய் பரவியபோது அதைத் தடுக்கப் பாலுறவின்போது ஆணுறையைப் பாவிக்க வேண்டும் என்று அகில உலக சுகாதார சபை அறிக்கை விட்டபோது அதை எதிர்த்தார். எயிட்சைத் தடுக்க ஒரேயோரு வழி பொதுமக்கள் பாலியல் உறவுகளை வைத்திருக்காமற் தடுப்பது என்பது இவரது வாதம். அத்துடன் உலகில் இன்று பெருகிவரும் சனத்தொகைகையைக் கட்டுப்படுத்தவும் வறுமையைத் தடுக்கவும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் தேவை என்பதையும் புனிதத் தந்தை எதிர்த்துப் பலரை விரோதித்துக் கொள்கிறார். அவரின் கருத்துப்படி ‘படைத்த கடவுள் உணவு கொடுப்பான், இயற்கை விதிகளை மீறக் கூடாது’ என்பதாகும். வளர்ந்து கொண்டுபோகும் மனிதப் பெருந்தொகைக்குத் தேவையான வாழ்க்கை முறைக்கு உலகத்தினில் போதிய உணவோ, நிலமோ கிடைக்காது என்ற வாதத்தை இவர் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

இவரின் இப்படியான கருத்துக்களுக்கு உலகப் பொருளாதார நிபுணர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அத்துடன், ‘குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது, எங்கள் சொந்த விடயங்களில் தலையிடப் போப்பாண்டவருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று பெண்ணியவாதிகள் புனித தந்தைக்கு எதிரான பதாகைகளுடன் புறப்படுகிறார்கள்.

அத்துடன், போப்பாண்டவர் ஓரினச் சேர்க்கை உறவுக்கு எதிரானவர். இந்த மாதிரியான ‘இயற்கைக்கு உதவாத’ உறவுகள் வளராமல் கத்தோலிக்க மதம் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஓரினபாலுறவு சட்டமயமாக்கப் பட்டிருக்கிறது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், அன்பு என்பதற்கு சமயம் வரைவிலக்கணம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாது என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடுகிறார்கள். போப்பாண்டவரின் இங்கிலாந்து வருகையின்போது ஓரினச்சேர்க்கையாளரின் போப்பாண்டவர் எதிர்ப்பு பதாதைகள் உயர்த்தப்படும் என்று ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்பாளர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாகக் கத்தோலிக்க பாதிரிமார்கள், தங்களின் தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு வந்த அறியாப் பருவத்திலுள்ள சிறுவயது ஆண் பெண் குழந்தைகளுக்குச் செய்த பாலியற் கொடுமைகளை புனித தந்தை பெனடிக்ட் அவர்கள்  சரியாக விசாரிக்கவில்லை, குறிப்பிட்ட பாதிரிகைளைப் பதவிகளிலிருந்து உடனடியாக நிறுத்தவில்லை, இந்தக் கொடிய பாலியல் வன்முறைச் செய்திகளைப் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்ற பல தரப்பட்ட  கோபங்களில் பலர் போப்பாண்டவர் வரவை எதிர்ப்பதாக பிபிசி ‘பனராமா’ டொக்குயுமென்றரி 13.09.10 இரவு எடுத்துக்காட்டியது.

அத்துடன், பெண்களைக் கத்தோலிக்க ஆலயங்களில் பாதிரியார்கள் போன்ற மேற்பதவிகளில் வைக்கவும் புனித தந்தை எதிர்க்கிறார் என்பதும் அவருக்கு எதிராக வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டாகும்.

இவைக்கும் மேலாகச் சமய ரீதியிலும் போப்பாண்டவர் மற்ற சமய மக்களின் மனதைத் துன்பப் படுத்தியிருக்கிறர் என்றும் சொல்லப்படுகிறது.

ஹிட்லரால் ஆறு கோடி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஊனமுற்றோர், ஹிட்லருக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்கள என்று பல தரப்பட்டோர் கொல்லப்பட்டார்கள். முக்கியமாகக் கொல்லப்பட்டவர்கள் – இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் யூத மக்களாகும். ஆனால், ஹிட்லரின் படையிலிருந்த போப்பாண்டவர் இதுவரையும் ஹிட்லரால் யூத மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமையை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை என்று யூதமக்கள் பொருமுகிறார்கள்.

யூத மக்களால் மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும், துருக்கிய முஸ்லிம் மன்னர்கள் பற்றிப் போப்பாண்டவர் சொன்ன கருத்துக்கள் கோபத்தை உண்டாக்கியிருக்கின்றன. 12.09.2006ம் ஆண்டு, அவர் பேசும் போது கிறிஸ்தவ மன்னரான மானுவல் 2வது பாலுலாக்கஸ்ஸைத் துருக்கிய மனனர் 1391ல் கொன்ஸ்ரான்ரினோப்பிளில் வெற்றி கொண்ட பின்  கிறிஸ்தவ மக்களைத் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி மதம் மாறச்செய்தார் ஏன்று குறிப்பிட்டதும் முஸ்லிம் அதிகாரம் வன்முறையானது என்றதொனியில் பேசியதும் பல முஸ்லிம் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.

போப்பாண்டவர் அவர்கள் பொதுவுடமை நாடான சைனாவின் பரம எதிரியான தலாய்லாமாமைச் சந்தித்ததால் 2007ல் சீனாவின் கண்டிப்புக்கும் ஆளாகினார்.

கொலப்பஸ் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தபின்தான் மனிதப் பண்பாட்டை மேன்படுத்தும் கிறிஸ்ரியானிட்டியால் மக்கள் நன்மையடைந்தார்கள் என்று சொன்னதால், தங்களது ஆதிகால வணக்க முறைகளைப் போப்பாண்டவர் அவமதித்ததாக வெனிசுவேலாவின் அதிபர் சவாவோசின் கண்டனத்துக்கம் ஆளானார் புனித தந்தை.

உலகின் பல நாடுகளிலுமுள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களிற் பணி புரிந்த போதகர்களால்  பாலியற் கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள்; இருக்கிறார்கள். குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பல ஊடகத்துறைகள் மூலம், கத்தோலிக்கப் பாதிரிமார் தங்களுக்குச் செய்த பாலியல் கொடுமைகளை விபரிக்கிறார்கள். ஜேர்மனியில் ரடசிங்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்தபோது (1977) பீட்டர் குலமன் என்ற பாதிரி செய்த கொடுமையைப் போப்பாண்டவர் சரியாக விசாரிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் ஓக்லாண்ட் கத்தோலிக்கப் பாதிரிகளின் நடத்தையை, அக்கால கட்டத்தில் (1998) வத்திக்கானில் கார்டினலாகவிருந்த ரடசிங்கரிடம் அறிவித்தும் அவர் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி பனராமா செய்தியிற் சொன்னார்கள்.

Pope_Benedict_XVI_2009புனித தந்தை அவுஸ்திரேலியா சென்றிருந்து போதும், அமெரிக்கா சென்றிருந்த போதும் கிறிஸ்தவ பாதிரிகளாற் பாலியற் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினார். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, பெல்ஜிய நாட்டில் உள்ள கிறிஸ்தவ பாதிரிகளால் பாலியற் கொடுமைகளுக்காளாளவர்களின் வாக்கு மூலங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் தங்களுக்க நன்மை செய்யும் மதத்தைத் தழுவுவது என்றும் நடந்து கொண்டிருக்கிறது அத்துடன் அரசியல் காரணங்களால் பலர் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் இந்து மத அடிப்படையின் சாதிக் கொடுமையால் துன்புறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் மதம் மாறுகிறார்கள். வெளிநாட்டிலும் இலங்கையிலும், இலங்கைத் தமிழர்களில் சிலர் இன்று தங்களின் பழைய வாழ்க்கை பிடிக்காமல் புதிய சமயங்களைத் தேடுகிறார்கள். கிறிஸ்தவர்களாகி வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போவதால் இவர்கள் மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிக்கொண்டு தாங்கள் புலம் பெயர் நாடுகளின் அங்கிகாரத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள கத்தோலிக்கர்களாக மாறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளிலிருந்த கத்தோலிக்க மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. மிகவும் பண வசதியுள்ள சமயம் கத்தோலிக்க மதமாகும். உலகில் மிகவும் செல்வாக்கான மனிதர்களில் ஒருத்தராகப் போப்பாண்டவர் கருதப்படுகிறார். வளரும் நாடுகளில் பாதிரிமாரின் செல்வாக்கு அளப்பரியது. அவர்களால் தேவாலயங்களில் பாலியற்கொடுமைகள் நடந்தாலும் யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

பல நாடுகளில் கிறிஸ்தவ சமயக் குருமார்கள் பணத்தில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக செல்வாக்கிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் மட்டுமல்லாது அரசியற் தலைவர்களும் கேட்டுப்பணிகிறார்கள். அவர்களின் சமயப்பணிகள் பிரச்சினை நடக்கும் நாடுகளில் அதிவேகமாகப் பரவுகிறது. இலங்கையில் தொடர்ந்த போரின் கடைசிக் கால கட்டத்தில் ‘தேசியத் தலைவர்’ பிரபாகரனும், கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என்ற வதந்திகள் பரவின.  மேற்கத்திய கிறிஸ்தவ தலைவர்களைச் (ஜோர்ஜ் புஷ், ரோனி பிளேயர்?) சந்தோசப்படுத்தவும் போப்பாண்டவர், கார்டினல்ஸ், போன்ற கிறிஸ்தவத் தலைமையின் உதவியை நாடவும், அத்துடன் இன்று வேகமாகக் கிறிஸ்தவ சமயம் பரவும் ஆபிரிக்க நாடுகளின் மூலம் ‘ஈழத்தமிழகத்திற்கு’ ஆதரவு பெறவும் அவர் சமயம் மாறியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் அடிபட்டது. இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் பெரும்பாலான தமிழர்கள் சமயம் மாறுவதற்கு, ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறியது ஒரு காரணமா அல்லது வெளிநாடு வந்த தமிழர்கள் கத்தோலிக்கர்களாக மாறி வசதியாக வாழ்வதால் அவர்களைத் திருப்திப்படுத்தத் ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறினாரா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்படலாம். ஆனாலும்,  லண்டனில் நடக்கும் போப்பாண்டவர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் புதிதாகச் சமயம் தழுவிய தமிழர்கள் தொகை பெரிதாகவிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இன்று கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களும், விதை நெல்லும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்சவினால் இவை வழங்கப்பட்டன. இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புகளுக்கு 101 இரு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும். விதைநெல் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். அபிவிருத்தித்திட்ட மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.