2010

2010

யாழ்.குடாநாட்டில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் மீது நடவடிக்கை! அரசாங்க அதிபர் அறிவிப்பு.

உள்ளுராட்சி சபைகளிடம் உரிய அனுமதிகளைப் பெறாமல் யாழ்.குடாநாட்டில் இயங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் என்பனவற்றை ‘சீல்’ வைத்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக விடுதிகள், தங்குமிடங்களை நடத்துபவர்கள் உள்ளுராட்சி சபைகளிடம் பதிவுகளை மேற்கொண்டு அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைய நடக்க வேண்டும். பொருத்தமான சுற்றாடல், நீர்வழங்கல், கழிவகற்றல் வசதிகளை எற்படுத்தியிருத்தல் முக்கியமானது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் குடாநாட்டில் பல வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்து வருமானமீட்டி வருகின்றனர். பொருத்தமில்லாத இடங்களில் அயலவர்களுக்கு சிரமங்களை எற்படுத்துவதாகவும் இவை அமைகின்றன. இதேவேளை, பல வருடங்கள் வாடகைக்கு இருந்தவர்களை அகற்றிவிட்டு அதிக வருமானம் தேடும் வகையில் தங்கள் வீடுகளை விடுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் பல வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொலைபேசி பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வன்னியில் கணிசமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் தொலைபேசி பாவனைகளும் அதிகரித்துள்ளன. எனினும் கைத்தொலைபேசிகளில் உரையாடுவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியில் பல இடங்களில் தெளிவான தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் வன்னியில் தங்களுக்கான விளம்பரங்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்ற போதும், தெளிவான உரையாடல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வேலைகளை மேற்கொள்வதில் தாமதம் காட்டி வருவதாக கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னியில் பல இடங்களில் இன்னமும் மின்சாரம் வழங்கப்படாதால் தொலைபேசிகளுக்கு மின்னேற்றுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்பிறப்பாக்கிகள் மூலம் சில வணிக நிலையங்கள் பணம் அறவிட்டு பொதுமக்களின் கைத்தொலைபேசிகளுக்கு மின்னேற்றிக் கொடுக்கின்றமையை வன்னியில் பல இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலேயே இன்னும் பல இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படாமலுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாலியல் படங்களில் நடித்த இலங்கை நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் திரைப்படங்களில் நடித்த உள்ளுர் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும், பெண்களுக்கான பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இணையத்தளங்களில் வெளியாகும் பாலியல் படங்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில உள்ளுர் நடிகைகள் நடித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோப் படங்களை வெளியிடும் 180 இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் தினத்தை கொண்டாடத் தயாராகுமாறு குறுந்தகவல் அனுப்பிய யுவதி கிளிநொச்சியில் கைது

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பாக தனது கையடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல்களை (எஸ்.எம்.எஸ்.) வேறு ஆட்களுக்கு அனுப்பியதாகக் கூறி கிளிநொச்சியில் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகும் படியும் அதில் அந்த யுவதி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சிப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பெண் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்

bandula.jpgகல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000 பேருக்கு இன்று (06) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் இடமாற்றங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ஐ. தே. க. எம்.பி. சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 554 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர அழகியற்கலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் போட்டிப் பரீட்சையூடாக ஆசிரியர்களை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3174 அழகியற்கலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒக்டோபர் 9 ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்படும். இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 3000 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ள தோடு, சில பாடசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றார்

உள்ளூராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில்

sri-lankan-parliament.jpgஉள்ளூராட்சி மன்றங்கள் திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சி தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில் உள்ளூராட்சி மன்றங்கள் திருத்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதன் பிரதியை எதிர்க்கட்சித் தலைவர் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பொன்சேகாவின் காலத்தில் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக 5244 இராணுவத்தினருக்கு தண்டனை

சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொன்சேகா தளபதியாக இருந்த போது இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அப்போதும் கையொப்பமிட்டு அனுமதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். அப்போது தண்டனை வழங்கப்பட்டவர்களுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் சரத் பொன்சேகாவுக்காக மாத்திரம் எதிர்க்கட்சிகள் குரல்கொடுப்பது ஏன் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திரத்தில் நடைபெற்றது. ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மேலும் உரையாற்றுகையில்: பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட மேஜர் ஜெனரல் தரங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகித்த மூன்று மேஜர் ஜெனரல்களே பொன்சேகா மீதான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குடாநாட்டில் இளவயதில் தாயாகும் பெண்களின் தொகை அதிகரிப்பு!

Jaffna_Hospitalயாழ். குடாநாட்டில் இளவயதில் தாயாகும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட தாய் சேய் நல மருத்துவர் திருமதி. திருமகள் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு வருடங்களில் இத்தொகை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு இளம் வயதில் காப்பமாகும் பெண்களுக்கு 35 வயதிற்குப்பின் கருப்பைக் கழுத்து புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இளவயது பிரசவங்களால் பிரசவ நேரச் சிக்கல்கள், தாயின் குருதிச்சோகை காரணமாக அதிக இரத்தப்போக்கு, இதனால் தாய் மரணிக்கும் நிலமை, குழந்தையின் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு பல்வேறு சமூகப்பிறழ்வுகளும் ஏற்படக்கூடிய நிலையுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 குடாநாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு 442 பெண்களும், 2009ஆம் ஆண்டு 374 பெண்களும், கடந்த ஆறு மாதக்காலத்தில் 234 பெண்களும் இளவயதில் தாயாகியுள்ளதாக பதிவுகளின் மூலம் தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குக்குலெகம தமிழ் குடும்பங்கள் குடியிருப்பிற்குத் திரும்பின. நட்டஈடு பெற்றுக் கொடுக்க வாசுதேவ நடவடிக்கை.

Vasudeva Nanayakaraஇரத்தினபுரி நிவித்திகலை குக்குலேகம  தோட்டத்தில் வன்முறை அச்சம் காரணமாக வெளியேறிச் சென்ற மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்க இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Ratnapuri_Map_of_SLகுக்குலேகம தோட்டத்தில் கடந்த மாதம் 13ஆம் திகதி பெரும்பான்மை இன்ததைச் சேர்ந்த காவலாளி ஒருவரின் மரணத்தையடுத்து இரவு வேளையில் தமிழ்மக்களின் குடியிருப்புக்கள் தாக்கப்பட்டன. அக்குடியிப்பில் வாழ்ந்த 37 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இரவோடு இரவாக இடம்பெயர்ந்து சென்றனர். பல நாட்கள் அவர்கள் அச்சத்தினால் திரும்பி வராமலிருந்தனர். இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் முயற்சிகளின் காரணமாக தற்போது அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட இக்குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Article:

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் 29 பேர் உயிரிழப்பு! 2,867 பேர் பாதிப்பு.

Kallappu_Battiஇவ்வருடம் கிழக்கு மாணத்தில் 2,867 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண அமைச்சின் பொதுச் சுகாதர சேவைப் பணிப்பாளர் மருத்துவர் ஜே.ஞானகுணாளன் அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளார்.

Kallappu_Battiவருட ஆரம்பத்திலிருந்து இதுவரை திருகோணமலை, கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம், ஆகிய பிரதேசங்களில் 11 பேர் உயிரிந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பிரிவில் கல்முனைத் தெற்கு, வடக்கு, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், ஆகிய பகுதிகளில் 7 பெரும், மட்டக்களப்பு சுகாரார சேவைப்பிரிவில் 11பேரும், அம்பாறை சுகாதர சேவைப் பிரிவில் ஒருவரும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.