உள்ளுராட்சி சபைகளிடம் உரிய அனுமதிகளைப் பெறாமல் யாழ்.குடாநாட்டில் இயங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் என்பனவற்றை ‘சீல்’ வைத்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக விடுதிகள், தங்குமிடங்களை நடத்துபவர்கள் உள்ளுராட்சி சபைகளிடம் பதிவுகளை மேற்கொண்டு அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைய நடக்க வேண்டும். பொருத்தமான சுற்றாடல், நீர்வழங்கல், கழிவகற்றல் வசதிகளை எற்படுத்தியிருத்தல் முக்கியமானது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் குடாநாட்டில் பல வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்து வருமானமீட்டி வருகின்றனர். பொருத்தமில்லாத இடங்களில் அயலவர்களுக்கு சிரமங்களை எற்படுத்துவதாகவும் இவை அமைகின்றன. இதேவேளை, பல வருடங்கள் வாடகைக்கு இருந்தவர்களை அகற்றிவிட்டு அதிக வருமானம் தேடும் வகையில் தங்கள் வீடுகளை விடுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் பல வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.