1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.
அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.
தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.
இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.
குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும் அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.
இந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.
அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.
இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.
ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.
ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.
குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான் தமிழினத்தின் மூளைகளாம்.
அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.
அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.
அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம் சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.
தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?