யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.