2010

2010

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு; 300 பேர் இன்று பயணம்

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக் கிடைத்துள்ள முதலாவது இலங்கையர் குழு இன்று இஸ்ரேல் பயணமாவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது. இதன்படி 300 இலங்கையர்கள் விவசாயத் துறை சார்ந்த தொழில்களுக்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களுக்கு வீஸா வழங்கும் வைபவம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்றது. 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கையர் குழு அங்கு தொழில்பெற்றுச் செல்வதாகவும் அவர் கூறினார். பயிற்சியின் பின்னர் இவர்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளமாக வழங்கப்படவுள்ளது.

முதற் தடவையாகவே இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இஸ்ரேலில் தொழில் செய்வதற்கு ஏற்றவாறு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறினார்.

ஜனாதிபதியின் பிறந்த தினம், பதவியேற்பு; ஒரு இலட்சம் பேருக்கு காணிகள் அன்பளிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65வது பிறந்தநாள் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு காணியில்லாதவர்களுக்கு காணிகள் மற்றும் காணி உறுதிகளை வழங்க காணிகள் ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாவட்ட செயலகங்கள் ஊடாகப் பதிவு செய்த காணியில்லாதவர்களுக்கே இந்தக் காணிகளும், காணி உறுதிகளும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக காணிகள் ஆணையாளர் ஆர். பி. ஆர். ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் வழங்கப்படவுள்ளன. காணியற்றவர்கள் தமது பிரதேச மாவட்ட செயலகங்களில் பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருப்பதுடன் அரசாங்க காணிகளில் சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என காணிகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையிலுள்ள படை முகாம்கள் அகற்றப்படும்

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக வடக்கு, கிழக்கில் நிலவிய பயங்கரவாதத்தை ஜனாதிபதியின் சிறந்த வழிகாட்டலின் மூலமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது நாட்டில் அமைதி நிலவுகிறது. அதனால்தான் நானும் இப்பிரதேசத்திற்கு வந்து உங்களது கஷ்டங்களையும் குறைகளையும் கேட்டறிகின்றேன் என்றும் பிரதமர் கூறினார்.

கிண்ணியா பெரியபள்ளி வாசலில் திருகோணமலை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் என்ற வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

மேலும் முஸ்லிம் மக்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போன்று தான் முஸ்லிம் நாடுகள் எமது நாட்டுக்கு பல ஆண்டு காலமாக உதவிகளை வழங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு அல்லாஹ் ஆனால் அவர்கள் இன்று பல கூறுகளாக பிரிந்து பிரச்சினையில் இருக்கிறார்கள்.

நாங்கள் போய் சமாதானம் புரிய வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் குர்ஆனில் கூறப்பட்ட மசூரா அடிப்படையில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரிஷானா மீது கருணை காட்டுமாறு சவூதி மன்னருக்கு ஜனாதிபதி கடிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ள இலங்கை பணிப்பெண் ரிஷானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

2005ம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்குச் சென்றிருந்த இலங்கையரான ரிஷானா நபீக் தாம் பணிபுரிந்த வீட்டு எஜமானனின் குழந்தைக்குப் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இதனால் அக் குழந்தையை பணிப்பெண்ணான ரிஷானாவே கொலை செய்ததாக அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில் சவூதி அரேபியாவின் தவாமி மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை ரியாத் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது.

இதனால் மேற்படி தீர்ப்பு தொடர்பாக ரிஷானாவின் குடும்பத்தினர் முன்வைத்த மேன்முறையீட்டு மனு சவூதி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சட்ட ரீதியாக ரிஷானா நபீக்கின் சார்பில் மேலும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையிலேயே இலங்கை பணிப்பெண் ரிஷானா விடயத்தில் கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு 108 பேர் பலி

tsunami.jpgஇந்தோ னேஷியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 108 பேர் பலியாகினர். பெண்கள், குழந்தைகள் என 502 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டனர்.

இந்தோனேசியாவின், மேற்குப் பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவான இந்த நில நடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நில நடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி. மீ. தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன.

இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மல்கோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 அவுஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 1,100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

”எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!” : பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி

George_R_Willyபிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி இலங்கையில் வடமராச்சியில் பருத்தித்துறையை  பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது அமெரிக்காவில் கிளரி கிளிங்டன் அமைச்சில் குடிவரவு பகுதியில் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகராக கடமை ஆற்றி வருகிறார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள்,  ஹ்யூஸ்டன், டெக்சாஸ் நகரில் விருந்துபசாரம் ஒன்றில்  கலந்து கொண்டபோது, ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை. – தமிழில்: ந. சுசீந்திரன் –  

._._._._._.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! இப் பெருநகருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. இங்கிருக்கும் ஓக் மரங்களையும் பிற பறவைகளைப் போல போலிக்குரல் எழுப்பும் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் “இது இலங்கையோ?” என்று நீங்கள் இலகுவில் மயங்கிவிடலாம்.

நான் இலங்கையில் பிறந்தவன். என்  தாயும் என் மனைவி சாந்தியின் தந்தையும் தாயும் மற்றும் எங்களது பாட்டன்கள் பாட்டிகள் யாவரும் அங்கேதான், என் அத் தாய்த்திரு நாட்டின் புனித மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நான் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து என் பத்தாவது வயதில்தான் கொழும்பு வந்தவன். என் மனைவி பதுளையைச் சேர்ந்தவள். அவள் தந்தை தியத்தலாவையில் மதிப்புமிக்கதொரு  கப்டன் என்பதால் அவள் அங்கேயே வளர்ந்தவள். நான் யாழ்ப்பாணத்தின் வேப்பமரங்களின் இன்சுவை முகர்ந்தவன். கொழும்பில் பாடசாலை செல்லும் வழியில் செக்கச் சிவந்த  ஜம்புப் பழம் தின்று அதன் சிவப்புக் கொட்டை விழுந்து என் சட்டை கறைபடிந்ததுண்டு. மரத்தில் பழுத்த பலாப்பழத்தை காக்கைகள் கொத்தித் திறந்துவிடுகையில் கவர்ந்திழுக்கும்  நறுமணத்தை நன்றே தெரிந்தவன். வெசாக் திருநாளின் மிகைவர்ண அலங்காரப் பந்தல்கள் தோரணங்களைக் கண்டும் ஏழைகளுக்கு உணவிடும்  அன்னசத்திரங்களில்  கூச்சமின்றிச் சென்று உணவுண்டும் கோவில்களில் ஒலிக்கும் மந்திர உச்சாடனங்கள் தோத்திர பஜனைகள் கேட்டும்  மல்லிகைப் பூக்களினதும் சந்தனக்குச்சிகளினதும் நறுமணங்களை அனுபவித்தும்  சர்வ புனிதர்களின் தேவாலய மணியோசைகேட்டும் அங்கு நடைபெறும்  திருப்பலிப் பூசையில் பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஹேரத் அவர்களுக்குத் திருப்பணி செய்துமிருகிக்கிறேன்.
 
ஆனால் 1975 இல் நான் இலங்கையை விட்டு வெளியேறிய நாளில் இருந்து வேதனையும் துன்பமும் கொடூரமுமே அங்கே மிஞ்சின. வழக்கமாக நன்செய் நிலங்களின் நெல்வயல்களுக்கு தன் புனித நீர் பாச்சிய வலிய ஜீவநதி மகாவலி கங்கையில் சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் செங்குருதியோடியது. என் முந்தையோர் வாழ்ந்து மடிந்த தாய் நிலம் சுவர்க்கத்தில் இருந்து நரகத்தின் அதல பாதாளத்தில் வீழ்வதை  அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தில் இங்கிருந்தபடி கண்ணுற வேண்டியவனானேன். இதற்கு யாரை நோவதென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாதுள்ளது. அன்றியும் நொந்து குற்றங்காண்பற்கான காலமும் என்றோ கடந்துவிட்டது.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்களோ துட்ட காமினியின் பரம்பரை. என் மக்கள் எல்லாளன் பரம்பரை. கந்துல என்ற தன் யானையில் இருந்து துட்ட காமினி எவ்வாறு எல்லாளனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்றான் என்பதை எண்ணிப்பாருங்கள். முதன் முதலில் ஐக்கிய இலங்கையொன்றினை உருவாகியதற்காக நிச்சயமாக துட்ட காமினி இன்றும் நினைவுகூரப்படுகின்றான். ஆனால் அவன் வேறொன்றுக்குமாகவும் நினைவுகொள்ளப்படுகின்றான்.

எல்லாளனைத் தோற்கடித்து அவனைக் கொன்றபின் அந்தச் சிறப்புமிக்க எதிரி எல்லாளனை மதித்து நினைவுச் சின்னம் எழுப்பியவன் அவன். அதன் முன்னே நாட்டு மக்கள் அனைவரும்  நின்று சிரந்தாழ்த்தி மதிப்பளிக்க  வேண்டுமென்று சட்டம் பிறப்பித்தவன். அதன் மூலம்  தான் பெருங்கண்ணியவான் மட்டுமல்ல சிறந்த அரசியல் சாணக்கியன் என்பதயும் நிரூபித்துக் காட்டினான். எல்லாளனைத் தோற்கடித்தபின் தமிழர்களையும் தானே ஆளவேண்டுமென்பதை அவன் தெளிந்தே வைத்திருந்தான்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, வாய்ப்பும் விதியும் மற்றும் உங்களது மாபெரும் அரசியல் ஆளுமையும் வரலாற்றில் ஒர் தனித்துவமான இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்றிருக்கின்றது. முன்னே பலபேர் முறியடிக்க முயன்று தோற்ற   25 ஆண்டுகால அரசியற் கிளர்ச்சியினை இறுதியில் அடக்கியவன் மகிந்த ராஜபக்‌ஷ என்ற பெயருடைய மாவீரன்  என்று இனிவரும் எதிர்காலச் சிறார்கள் சரித்திர நூல்களில் தங்களது பாடம் படிப்பார்கள். 21 ஆம் நூற்றாண்டின் துட்ட காமினி என்று அவர்கள் உங்களைச் சொல்லக்கூடும்.  ஆனால் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே துட்டகாமினியின் அதே மேலாடையை நீங்கள் போர்த்திக்கொள்ள விரும்பினால் நீங்களும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். அது டகோபாவாகவோ அல்லது வேறெந்தத் தூபிகளாகவோ  அல்லாது  நிறைவேற்றுச் சட்டவலுவுள்ள புதிய கொள்கையொன்றாக இருக்க வேண்டும். 58 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை மூட்டிய அதே தவறினை நீங்களும் செய்யவேண்டாம். பல்கலைக் கழகம் செல்ல நினைக்கும்  தமிழ் இளைஞர்களை இனியும் தடுத்துவிட வேண்டாம்.  தமிழர்கள் தாம் இந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமகனாக எண்ணிக்கொண்டிருக்க இடந்தர வேண்டாம். அவர்களது மத நம்பிக்கையினைப் புண்படுத்தாது  அவர்களது மொழியினை மதித்து நடவுங்கள்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு அவர்களது மொழி வழிபடும் தெய்வம். உலகில் அவ்வாறு தம் மொழியை வழிபடும்  கலாசாரங்கள் மிகச் சிலவே.  நீங்கள் ஒரு சட்டத்தரணியாகப் பயிற்றப்பட்டவர். உங்கள் ஆரம்பகாலத்தில்  நீங்கள் ஒரு கடும் மனித உரிமைப் பாதுகாவலனாக கீர்த்தி பெற்றிருந்தீர்கள். இப்போது உங்களுக்குப் பேரும் புகழும் வந்துவிட்டது.

படைநடத்திச்சென்று சமராடி  ரோமாபுரிக்குத் திரும்பிவரும் ஜூலிய சீசரைப் போல அதிகாரம் படைத்த மகாவீரனாகிவிட்டீர்கள். நீங்கள் கேட்பதை மறுப்பவர் இல்லை. சட்டக் கல்லூரியில் படித்தபோது  நீங்களும் நானும் கற்றுக்கொண்ட சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட சரத்துக்களை மீண்டும் அங்கீகரிக்குமாறு பாரளுமன்றத்திடம் கேளுங்கள். என் உதவி வேண்டுமானால் இங்கே குழுமியிருக்கும் அனேகரைப்போல் நானும் இலவசமாகவே அதனைச் செய்து தருவேன். தங்களுக்கென்றொரு இடமிருக்கின்றது என்று நீங்கள் உறுதிமொழி சொல்வீர்கள் என்று தமிழர்கள் ஏதிலிகளாக உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர். உங்களுக்கு அந்த இடம் இருக்கின்றது என்பதை அவர்களுக்கு நீங்கள் உறுதிசெய்யுங்கள். ஒரு பிரபாகரனைக் கொன்றீர்கள். அப்படி இன்னொருவன் வளர இடம்வைக்கக்கூடாது. வாளோடும் துப்பாக்கியோடும் இன்னொருவன் தோன்றுவதை முற்காத்துக் கொள்ள உங்களால் முடியாது.  மனதாலும் மகத்தான அறிவாலும் மட்டுமே அதனைத் தடுக்க முடியும். புத்தரிடமிருந்து கற்றுக்கொண்ட கருணை, உண்மை, நீதி என்ற ஆயுதங்கள் மட்டுமே அதற்குத் தேவை. பகைமையைப் பகைமையால் ஒருபோதும் அழிக்கமுடியாது. அன்பினால் மட்டுமே  பகமையை இல்லாதொழிக்கலாம் என்பது ஒரு புராதன நியதி.“ என்று தம்மபதத்தில் புத்தர் சொல்லியிருக்கின்றார்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது,   நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் தவிர வேறொன்றுமில்லை  என்பதையும் வேப்பமரத்தில் தொங்குவது நான் முகர்ந்த வேப்பம் பழங்களல்லாது வேறொன்றுமில்லை என்பதையும் எனக்குச் சத்தியம் செய்து தாருங்கள். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!      
எங்களை மீண்டும் சுவர்கத்திற்கு கூட்டிச் செல்லுங்கள்!

நன்றி : இனி டென்மார்க்

பிரபா – பொட்டு ஆகியோரின் மரணத்தை இந்திய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை இந்திய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அவ்வமைப்பின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் என்கின்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டு உள்ளது.

இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழங்கிய தகவலின் அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்தள்ளது.

ரஜீவ்காந்தி கொலைவழக்கின் 01ஆவது குற்றவாளியான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் 02ஆவது குற்றவாளியான சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர்மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக ரஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரணை செய்துவரும் சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளின் இறப்புகளுக்குப் பின்னர் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Pirabaharan_Still_Alive‘இந்தியா இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை’ ஆகவே அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற கதைகளை புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் இன்னமும் பரப்பி வருகின்ற நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்துள்ளது. தமிழக வர்த்தகப் பத்திரிகைகளும் இத்தலைவர்கள் உயிருடன் உள்ளதாக பரபரப்புச் செய்திகைள வெளியிட்டு வருகின்றமை தெரிந்ததே.

13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சாட்சியம்

sitharthan.jpg13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (ஒக்ரோபர் 25 2010) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

த சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியதாவது, ”யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புளொட் சர்வதேசக் கிளைகளின் மாநாடு : புளொட்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு இம்மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெறவுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்நாள் நிகழ்வுகளாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.

படிப்பனைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை மூன்று தினங்கள் ஒன்பது இடங்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் அமர்வு ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு மக்களுக்காக புனித அந்தோனியார் தேவாலயத்திலும், வேலணை மக்களுக்காக மண்கும்பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கரைநகர் மக்களுக்காக குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் மக்களுக்காக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் நடைபெறும்.

இரண்டாம் நாள் அமர்வுகள் கோப்பாய் பிரதேச மக்களுக்காக நீர்வேலி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்திலும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச மக்களுக்காக அளவெட்டி மகாஜன சபை மண்டபத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை மக்களுக்காக நெல்லியடி முருகன் கோவிலிலும் நடைபெறும்.

மூன்றாம் நாள் அமர்வுகள் மருதங்கேணி மக்களுக்காக குடத்தனை தேவாலயத்திலும், சாவகச்சேரி மக்களுக்காக சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க இதுவரை 366 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத, சாட்சியமளிக்க விரும்பும் எவரும் முன்வந்து ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் குளத்தில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் ஒருவன் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள் கிழமை இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனியார் கல்வி நிலையமொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இம்மாணவனை சைக்கிளில் பலாத்காரமாக பிடித்து ஏற்றிச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத அம்மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்து விட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் பின்னர் நேற்று திங்கள் கிழமை அம்மாணவன் கானகாம்பிகைக் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயத்துடன், வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மடாவட்ட நீதவான் சிவகுமாரின் உத்தரவின் பேரில் இம்மாணவனின் சடலம் வவனியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் நபரொருவரால் கடத்தப்பட்ட நிலையில் குளத்தில் சடலமாக மீடக்கப்பட்டதான செய்தி கிளிநொச்சி பெற்றொர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பாரதிபுரம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த ‘தேசம் நெற்’ அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவரிடம் கேட்ட போது இச்சமபவம் குறித்து வெளியாகியுள்ள விடயங்கள் பெற்றோர்கள் மத்தியில் வீணான பதற்றத்தையும் சந்தேகங்களையும் எற்படுத்தியுள்ளதாகவும், குறித்த மாணவன் பாடசாலை அல்லது தனியார் கல்விநிலையத்திற்கு சென்று வரும் வழியில் கனகாம்பிகைக் குளத்தில் மீன்பிடிப்பதை பொழுது போக்காக கொண்டவன் எனவும், இதன் போது அம்மாணவன் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.