2010

2010

பொலிஸ் அகடமி இன்று திறப்பு

police.jpgநீர் கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பொலிஸ் அகடமி இன்று 26ம் திகதி காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவு ள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

கட்டானயிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்குச் சொந்தமான 39 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பொலிஸ் அகடமி புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

புலனாய்வு துறை தொடர்பான பாட நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பொலிஸார் இன்று உத்தியோகபூர்வமாக தமது கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஐ.பி.எல். – சென்னை அணி சாம்பியன்

chenai_super.jpgஐ.பி.எல்.  20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள்  எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.  அதிகபட்சமாக சச்சின் தெண்டுல்கர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள்  எடுத்தார். நாயர் 26 பந்துகளில் 27 ஓட்டங்களும் ராயுடு 14 பந்துகளில் 21 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பொல்லார்டு அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 3 பவுண்டரிஇ 2 சிக்சர்களுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

கட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

கட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

எஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்

நாவலப்பிட்டி வாக்கு மோசடி: ஒழுக்காற்று விசாரணைக் குழு சுதந்திரக் கட்சியால் நியமிப்பு

election_ballot.jpgபொதுத் தேர்தல் வாக்களிப்பு தினத்தில் நாவலப்பிட்டி தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கவென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இந்த குழுவை நியமித்திருக்கின்றார்.

ஐந்து பேரை உள்ளடக்கியுள்ள இந்த ஒழுக்காற்று விசாரணைக்குழுவுக்கு சட்டத்தரணி டப்ளியு. ஜி. கருணாஜீவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் சட்டத்தரணிகள் சாலிய மெத்திவ், சந்ரா பெர்னாண்டோ, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் செயலாளராக சட்டத்தரணி சம்பாணிபத்மசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகவி யலாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கட்சியின் கொள்கைகளையும் ஒழுங்குகளையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தவறியதினாலேயே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்தார்.

IPL : சிறந்த ‌வீரராக டெண்டுல்கர் தெரிவு

sachin.jpgஐபிஎல் இன் சிறந்த சிறந்த துடுப்பாட்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் அறிமுக வீரராக கிரோன் போலர்ட் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக பிரான் ஓயா , சிறந்த வீரராக ஹர்பஜன் சிங்கும், உறுதியான வீரராக ஜக் கலிசும் விருது பெற்றுள்ளனர்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் இன் சிறந்த வீரராக பிரண்டன் மக்லம் தெரிவு செய்யப்பட்டதுடன், 2009ம் சிறந்த வீரராக அனில் கும்ளே விருது பெற்றார். சிறந்த களத்தடுப்பாளர் விருதினை ஏ.பி.டி வில்லியர்ஸ் பெற்றதுடன், சிறந்த மைதானத்திற்கான விருது பெங்களுர் சின்னசுவாமி மைதானத்திற்கும், அனுபவம் வாய்ந்த மைதானத்திற்கான விருதினை மும்பை டிவை பற்றீல் மைதானத்திற்கும் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா காலமானார்

பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரணியகலை விஸ்வநாதன் செல்லையா தமது 81 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். வீரகேசரி, டெய்லிமிரர், ஐலண்ட், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார்.
முன்னாள் அமைச்சர் வீ.குமாரசாமியின் பிரத்தியேக செயலாளராகவும் சிலகாலம் கடமை புரிந்துள்ளார். தினக்குரல் தெரணியகலை செய்தியாளர் நித்தியானந்தனின் தந்தையான இவரின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை தெஹியோவிட்ட பொதுமயானத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமருக்கு இன்று கண்டியில் பெரும் வரவேற்பு

dm-jayaratna.jpgபிரதமர் டி. எம். ஜயரட்னவுக்கு கண்டி மாவட்டத்தின் பிரதான நகர்களில் இன்று 26 ஆம் திகதி பாரிய வரவேற்புகள் அளிக்கப்படவிருக்கின்றன. கடுகண்ணாவ, பிலிமத்தலாவ, பேராதனை, கண்டி மாநகர், கெலிஓயா, கம்பளை உட்பட பல நகர்களில் பிரதமரான ஜயரட்னவுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இன்று காலை 8.00 மணியளவில் இவ்வரவேற்பு வைபவங்கள் கடுகண்ணாவவில் ஆரம்பமாகவிருக்கின்றன. இதேநேரம் காலை 9.30 மணியளவில் தலதா மாளிகையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் பிரதமர் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சந்தித்து ஆசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளார். அத்தோடு இந்து, இஸ்லாம், கிரிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களுக்கும் நேரில் சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை தலதா மாளிகையின் வளாகத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் சர்வதேச பெளத்த நூதனசாலையின் மத்திய நிலையத்திற்கு பிற்பகல் 1.00 மணிக்கு பிரதமர் ஜயரட்ன வைபவ ரீதியாக அடிக்கல் நடவுமிருக்கின்றார்.

அமைச்சரவையின் எண்ணிக்கை 42ஆக அதிகரிக்கப்படலாம்- புன்னியாமீன்

sl-par.bmpஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அமைச்சரவையை மேலும் சில உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 37 பேரும், பிரதியமைச்சர்கள் 39 பேரும் நியமிக்கப்பட்டனர்.பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள், நெடுஞ்சாலை அமைச்சுப் பொறுப்புகள் ஜனாதிபதி வசமுள்ளன. கடந்த அரசில் அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என 109 பேர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஆட்சிக் கால அமைச்சரவையை நோக்குமிடத்து இவ்வெண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும்கூட,  இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வெண்ணிக்கையும் அதிகமானதே என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் ஆட்சிப்பலத்தை தக்கவைத்துக் கொள்ள அமைச்சரவை எண்ணிக்கையை எல்லையில்லாது அதிகரித்துச் சென்றது. கடந்த அரசாங்கத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அமைச்சர்களே என்ற நிலை காணப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவை எண்ணிக்கை ஓரளவு குறைக்கப்பட்டாலும்கூட,  ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அந்த பதவிகளையும்,  வசதி வாய்ப்புக்களையும் எதிர்பார்த்து அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் இடமுண்டு. இருப்பினும்,  இந்நெருக்கடிகள் அரசாங்க அறுதிப் பெரும்பான்மையை குறைப்பதாக அமைந்துவிடக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும்,  கடந்த அரசாங்கத்தில் முக்கியமான பங்களிப்பு வழங்கிய ஒரு சிலர் விடுபட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக புதிய அரசியலமைப்பொன்றை முன்வைக்க வேண்டுமென்பதில் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வந்த பேராசிரியர் திஸ்ஸவிதாரணவை குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புமிடத்து இவரை அமைச்சராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தமொன்று ஜனாதிபதிக்கு ஏற்படலாம்.

மேலும். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு. ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்டட போதும்கூட,  கண்டி மாவட்டத்தில் பிரதான 1 இலட்சம் விருப்பு வாக்குகளுக்கு மேல் பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல,  மஹிந்தானந்த அலுத்கமகே,  எஸ்.பி. திசாயநாயக்க ஆகியோருக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் முக்கிய செயற்பாட்டு உறுப்பினராக காணப்பட்ட சரத் அமுனுகமவுக்கு இதுவரை அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மீள் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று நடவடிக்கை முடிவடையும் வரை கண்டி மாவட்டத்தில் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், இவ்விசாரனை முடிவடைந்த பின்பு கண்டி மாவட்டத்துக்கு சில அமைச்சரவை பொறுப்புக்களை ஜனாதிபதி வழங்க வேண்டியேற்படும்.

அதேபோல மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏதாவொரு வகையில் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளாமையினால் ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சுப் பதவிக்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இவருக்கும் அமைச்சுப் பொறுப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே,  அமைச்சரவையின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பது ஜனாதிபதிக்கு தவிர்க்க முடியாதவொரு விடயமாகவே காணப்படும்.

மறுபுறமாக ஆளும்.ஐ.ம.சு.முன்னணி 144 உறுப்பினர்களை தற்போது தன்வசம் வைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் 6 உறுப்பினர்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு தேவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அறுதிப் பெரும்பான்மை பலத்திற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கோ இடையில பாரிய வித்தியாசம் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் சேரக்கூடிய உறுப்பினர்களுக்கும் கௌரவத்திற்காக சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் ஊகங்கள் கூறுகின்றன.

எவ்வாராயினும் இ.தொ.கா.வைச் சேர்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான், கலாநிதி சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வல, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியவர்களில் 5 பேர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவர்களில் ஒருவர் பிரதியமைச்சராகலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. எனவே, எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடிய நிகழ்தகவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆறுமுகன் அமைச்சுப் பதவி ஏற்பதில் இன்னும் முடிவில்லை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பி, அமைச்சுப் பதவி ஏற்பது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லையெனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அமைச்சரவையில் வகித்த அமைச்சுப் பொறுப்புகள் இந்தமுறை எவருக்கும் மீள வழங்கப்படாததால், இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அமைச்சைப் பெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் எம். பிக்குக் கால் நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர் ஏற்கவில்லையெனத் தெரிய வருகிறது. இந் நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இன்று அல்லது நாளை தொண்டமான் அமைச்சர் பதவி ஏற்பார் எனத் தெரிய வருகிறது.

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமான பாராளுமன்றம்

parliament.jpgமூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஸ்திரமான ஒரு பாராளுமன்றம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர். 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்திரமான அரசாங்கத்தை நடத்தக் கூடிய அரசியல் சூழல் இருக்கவில்லை என்று கூறிய அவர்கள், இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கென சிறந்ததோர் பாராளுமன்றம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மாற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை நல்லதோர் அணுகுமுறையாகுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சம்பந்தன் ஆற்றிய உரை அவர்களின் அரசியல் செல்வழியில் புதிய அணுகுமுறையைப் புலப்படுத்துவதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சந்திப் புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐ.ம.சு. முன்னணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பூட்டானில் நடைபெறவுள்ள 16ஆவது ‘சார்க்’ உச்சிநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் கூறினார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச்சந்திப்புக்குப் பின்னர் இலங்கையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவாகியிருப்பது ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகுமென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

“1931ஆம் ஆண்டின் முதலாவது சட்ட சபையில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் துரைசாமி சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் 1965 முதல் 1970 ஆண்டு வரை உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்த மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவிருந்தார். அதற்குப் பின் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரகுமார் முருகேசு குழுக்களின் பிரதித் தலைவர் பதிவிக்குத் தெரிவாகியுள்ளார். இது ஒரு நாள் அரசியல் மாற்றம்” என்றும் அமைச்சர் விபரித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளமை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்குமென்றும் முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோரே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.