2010

2010

யாழ். பெரிய பள்ளி ஜும்ஆவில் நேற்று 5000 பேர் பங்கேற்பு

jaffnamosque.jpgயாழ்ப் பாணம்-பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 20 வருடங்களின் பின்பு நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது ‘குத்பா’ பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 3 மாதகாலமாக புனரமைக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயல் நேற்று இடம்பெற்ற குத்பா பேருரையை அஷ்ஷெய்க் அப்துல் ஹாலித் நிகழ்த்தினார். நாட்டின் நாலாபாகங்களிலிருந்து வருகைதந்த சுமார் ஐயாயிரம் முஸ்லிம்கள் இங்கு குத்பாப் பேருரையிலும் ஜும்ஆத் தொழுகையிலும் கலந்துகொண்டதுடன் ‘கந்தூரி’யிலும் பங்கு கொண்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் குத்பாப் பேருரையையும் செவிமடுத்தனர். பெண்களுக்கென பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்

bazil.jpgநாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலுமுள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியதுடன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

ஐ.தே.க. தலைவர் பதவியிலிருந்து ரணில் உடன் விலக வேண்டும். சென்னையில் காதர் எம்.பி. பேட்டி

carder.jpgஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக சிறந்த நிர்வாகி. அத்துடன் எனது இருபதாண்டு அரசியல் அனுபவத்தில் ராஜபக்ஷவைப் போல மிகச் சிறந்த பண்பாளரை நான் சந்தித்ததில்லை. அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து விடயங்களுக்கும் மிக துல்லியமான தீர்வினை அவர் எடுத்து வருகிறார்.

அவர் எப்போதும் இஸ்லாமியர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகிறார். இதற்குக் கடந்த அமைச்சரவையில் பதினைந்து இஸ்லாமியர்களுக்குத் தமது அமைச்சரவையில் இடமளித்திருந்தமையே சான்றாகும்.

அவருடைய நிர்வாகத்தில் இலங்கை புது பொலிவுடன் வலிமையாகவும் வளமாகவும் மாறி வருகிறது. யாழில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயமாக நான் பங்குபற்றுவேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தடைப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எம்முடைய விருப்பத்தினை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என்றார். முன்னதாக அவர் தமிழக அரசியல் கட்சித் தலைவர் அப்துல் சமதைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடம்புரண்ட ரயில் மீது நக்ஷலைட்டுக்கள் தாக்குதல்; பயணிகள் ரயில் மீது – சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி

naxalattack.jpgமேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக அரவிந்த டி சில்வா நியமனம்

aravinda-de.jpgஇலங்கை கிரிக்கெட் அணித் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமல் சில்வா, ரஞ்சித் பெர்ணாண்டோ, அஸ்கர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குப்பைத்தொட்டியிலிருந்து சிசு மீட்பு; பிரசவித்து வீசிய தாயும் கைது

மஸ்கெலியா – லக்கம் கடை வீதியில் குப்பைத்தொட்டி ஒன்றிலிருந்து நேற்றுக் காலை சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. காலை 5.45 அளவில் கடைவீதியில் குப்பை கொட்டுவதற்காகச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மஸ்கெலியா பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சிசுவை மீட்டெடுத்தனர். சிசு எறியப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு பிறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குப்பைத் தொட்டியில் சிசுவின் அழுகைச் சத்தத்தைக் கேட்டவர் ஏனையவர்களுக்கும் கூறியுள்ளார். எனினும், உயிருடன் கிடந்த சிசுவை காலை 6.45 அளவில் பொலிஸார் வந்து மீட்டு மஸ்கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் சிசு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சிசு தேகாரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தச் சிசுவைப் பிரசவித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்த தாயை நேற்றுக் காலை 9 மணியளவில் பொலிஸார் கண்டு பிடித்தனர். குப்பைத் தொட்டியிலிருந்து குறித்த ஒரு வீடுவரை உதிரச் சொட்டுகள் காணப்பட்டதை அடிப்படையாக வைத்து அந்த இளம் தாய் கண்டறிப்பட்டாள்.

யாழ். பெரிய பள்ளியில் மீண்டும் தொழுகை – அஸ்வர் எம்.பி. மகிழ்ச்சி

ahm-azwar.jpgஇருபது ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெறுவது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு பெரும் மறுமலர்ச்சியென ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாண சீமை- தமிழ் முஸ்லிம் உறவை மேலும் பலப்படுத்தும் முஸ்லிம்களும் தமிழர்களும், அந்நியோன்னிய உறவு பூண்டு நெருங்கிய தோழமை பூண்டு வர்த்தக கல்வித் துறையில் மட்டுமன்றி இன்னும் பல துறைகளில் இந் நாட்டில் ஒரு மகோன்னத இடத்தை பிடித்திருந்தனர். துரதிஷ்டவசமாக யாழ். முஸ்லிம்களை உடுத்த துணியுடன் இரவோடு இரவாக சொந்த மண்ணிலிருந்து புலி பயங்கரவாதிகள் துரத்தியடித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் சிதறுண்டு, அல்லலுற்று அகதி முத்திரையை தம் நெற்றியில் குத்திக்கொண்டவாறு வாழும் நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டனர்.

‘ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிப் பயங்கரவாதத்தை அழித்தொழித்து முழு நாட்டிலும் சமாதானத்தை ஏற்படுத்திய பிறகு யாழ் முஸ்லிம்களின் வாழ்வில் தீனுல் இஸ்லாத்தின் சுடர் இப்போது மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அதான் ஒலியின் இனிய நாதத்தை செவியுறுவதற்கும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபடுவதற்கும் யாழ் முஸ்லிம்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இரத்தினபுரியில் மண்சரிவு அச்சுறுத்தல்

மழை பெய்யாத போதிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

ஐந்து இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!!!

Lancelot_Roadலண்டன் ஹரோ குழுவிற்கும் லண்டன் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவிற்கும் இடையே 2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கி உள்ளது.

இம்மோதலில் ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, டிஎம்எக்ஸ் குழுவைச் சேர்ந்த வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

தண்டனை விபரம்:
அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : 7 ஆண்டுகள்.
வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : நான்கு ஆண்டுகள்.
ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் :  மூன்று ஆண்டுகள்.
மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : இரண்டரை ஆண்டுகள்.
பார்த்திபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் :  குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவீனம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மே முற்பகுதியில் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களும் அவர்களது தண்டனை விபரமும்:
Sepamallai_Arulmuruganஅருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள். சுpறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Paramalingam_Vakeesanவாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Tharmalingan_Iynkaranஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Satchithananthan_Mathusoothanமதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவினம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஜீ. எல். பீரிஸ் – ஹிலாரி இன்று சந்திப்பு

hilary-gl.jpgஅமெரிக் காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.  அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்கத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமையானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இராஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனற்சபை உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.