2010

2010

ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்டோர் போட்டி – வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் களத்தில் குதிக்கத் தயார்

unp.jpgஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கென நான்குக்கும் மேற்பட்டோர் போட்டியிடத் தயாராக உள்ளதாக ஐ. தே. க. உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக வேறொருவர் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டால், அது ஒரு நான்குமுனைப் போட்டியாக இருக்குமென்று தெரிய வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி ஆதரவாளர் ஒருவரின் கொழும்பு 07 பகுதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை யொன்றில், ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாச முன்வரவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச கட்சித் தலைமைத்து வத்திற்காகப் போட்டியிட்டால், மேலும் இருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் இந் நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரம சிங்கவை நீக்க முடியாத சூழல் உருவாகுமென்பதே கட்சி முக்கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

சஜித் பிரேமதாச தலைமைத்துவத்திற்கு வர முயற்சித்தால் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ரவி கருணாநாயக்க எம். பி. வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். எவ்வாறெனினும் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் இவர் அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகலாம் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதே நேரம், ரவி கருணாநாயக்க போன்றோர் போட்டியிட முன்வரும் பட்சத்தில் சஜித் ஆக பின்னிலைக்குத் தள்ளப்படுவாரென்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் தலைமைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தமது ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தவேண்டும் -வீ.நாராயணசாமி

narayanasamy.jpgதமிழ கத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் வீ நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். பயங்கரவாதம் தமது நாட்டில் எங்கும் பரவாத வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் புகையிரத பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆர்வளர்கள் வெடிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சிகிச்சைபெற அனுமதி – இந்திய மத்திய அரசு அறிவிப்பு

பிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 திகதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்ப¨யில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின் பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.

நிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிகோபர் தீவுகளுக்கு அருகாமையில் பாரிய நில நடுக்கம் , சுனாமி எச்சரிக்கை

tsunami.jpgநிகோபர் தீவுக்கு அண்மையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இவ் நிலநடுக்கமானது 7.7 அளவினைக் கொண்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் எனவே கடற்கரையை அண்டிய பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நேரம் பசுபிக் சுனாமி அவதானிப்பு நிலையமும் இப்பாரிய நிலநடுக்கமானது சுனாமியை ஏற்படுத்தும் என வெளியிட்டுள்ளது.

இச்சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் இலங்கை நேரம் அதிகாலை 1:00 மணியளவில் கொழும்பில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டடங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்தினை உணர்ந்த மக்கள், கட்டிடங்களை விட்டு வீதியில் நின்றதாக கொழும்பு பகுதி மக்கள் தெரிவித்த போதிலும், மட்டக்களப்பிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இருப்பினும், இலங்கையில் சுனாமி ஏற்படாது என தற்போது சுனாமி அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

சுனாமி அலாரம் மூலம் சுனாமி பற்றி உடனுக்குடன் அறியலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் 53 ஜோடிகளுக்கு இன்று திருமணம்

புனர் வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் புலிகள் உறுப்பினர்களுள் 53 ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் இத்திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன.

முதலில் பதிவுத் திருமணம் நடைபெறுவதுடன் இதனையடுத்து மத ரீதியான திருமணமும் நடைபெறும். இந்து, கிறிஸ்தவ குருமார்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்து முறைப்படி நடைபெறும் திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குரிய திருமாங்கல்யங்களை அகில இந்து மாமன்றம் வழங்குகிறது.

புத்தாடைகளையும் பரிசுப் பொருட்களையும் தொண்டர் நிறுவனங்களும் நலன்விரும்பிகளும் வழங்க முன்வந்துள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரா புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். திருமணமான பின்னர் ஒவ்வொரு ஜோடியும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படும் வரை மெனிக் பாம் பகுதியில் தனித்தனியான வீடுகளில் தங்க வைக்கப்படுவர்.

திருமணத்திற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகம் ஒரு தொகை நிதியை இவர்களுக்கு வழங்கும் என்றும் அரச அதிபர் திருமதி வீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். இத்திருமண வைபவத்தில் உற்றார், உறவினர் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

”இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Douglas_D_and_Rajaparksa_Mஜனாதிபதி தலைமையிலான இந்தியப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதி செவ்வாய் கிழமை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகினர். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இக்குழுவினரோடு சென்றிருந்தார். இக்குழுவினர் நேற்று (Jun 11 2010) நாடு திரும்பியுள்ள நிலையில், இப்பயணம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பம் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், இவற்றில் மீள்குடியேற்றம், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டதாகவும், நடைமுறைச்சாத்தியமான விடயமாக தாம் வலியுறுத்தி வரும் 13வது திருத்தச்சட்டத்துடன் மேலதிக அதிகாரங்கள் அடங்கியதான தீர்வுத்தட்டம் ஒன்றையே இந்தியாவும் விரும்புகிறது எனவும்,  இந்தியப் பிரதமர் இதனை ஜனாதிபதிடமும் வலியுறுத்தியபோது  ஜனாதிபதியும் அதனை ஒப்புக் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரதிபா பட்டீல், காங்கிரஸ் கடசியின் தiலைவி திருமதி சோனியா காந்தி. ஏதிர்கட்சியினர், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஆகியோருடனான சந்திப்பகளில் பல விடயங்களை  அவர்கள் எற்றுக்கொண்டுள்ளனர். வடமாகாணத்தில் புகையிரத பாதை அமைப்பதற்கு இலகு கடனாக 800மில்லியன் அமெரிக்க டொலர்களையும். காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் ஆகியவற்றின் புனரமைப்பு, யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், யாழில் கலாசார மண்டம் ஒன்றை அமைத்தல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.  நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மக்களுக்கு 50 ஆயிரம் விடுகளை அமைக்க ஆயிரம் கோடி ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நூறு வீடுகளை அமைக்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உதவி.

red-cross.jpgகிளி நொச்சியில் 50 வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணிகளுக்காக தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசப் பிரிவில் நூறு வீடுகளை அமைப்பதற்கு செஞ்சிவைச்சங்கம் திட்டமிட்டுள்ளது. இவை கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள விவேகானந்தநகர், அனந்தபுரம்,  கணேசபுரம்  ஆகிய கிராமங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலி தமிழகத்தில் குண்டுத்தாக்குதல்

track.gifவிடுதலை புலிகளின்  ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தமிழ் நாட்டின் விலுபுரம் மாவட்டத்தில் உள்ள புகையிரத தண்டவாளம் ஒன்றில் குண்டு வெடிக்க செய்துள்ளனர். இச்சம்பவம்  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பு காரணமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கான விஜயம் மேற்கொண்டமையை கண்டித்தே இக்குண்டு வெடிப்பு  இடம்பெற்றதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரம் அப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குண்டு வெடிப்பு காரணமாக சென்னைக்கான பல புகையிரத சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன

வடமாகாண சபை அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைக்க ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

cha.jpgவட மாகாணசபை அலுவலகத்தை கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது திருகோணமலையில் இயங்கிவரும் இந்த அலவலகம் வடமாகாணத்தின் மையப்பகுதியில் அமைக்கப்படுவதே பொருத்தமானது என கருதப்படுவதால்ää கிளிநொச்சி நகருக்கும் இரணைமடுச்சந்திக்கும் இடைப்பட்டää ஏ-9 விதிக்கு மேற்காக அமைந்துள்ள அறிவியல்நகர் இதற்குப் பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் முன்னர் விடுதலைப்பலிகளால் அமைக்கப்பட்டுள்ள பல கட்டடங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிமாவட்டங்களில் தற்காலிகமாக வசிக்கும் கிளிநொச்சி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர அழைப்பு.

நிவாரண முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிமவாட்டங்களில் வசித்துவரும் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் சோந்த மக்களும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்வதற்கான ஆயத்தநிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவுகளை உரிய பகுதிகளில் நீக்கம் செய்து விட்டு எதிர்வரும் 21, 22 அகிய திகதிகளில்  கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வருகை தந்து மீள் குடியமர்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

மேலும் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சிää சிவிக்சென்ரர், மாயவனூர்,  இராமநாதபுரம்ää ஆகிய கிராமசேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களிலுள்ள பதிவுகளை நீக்கிவிட்டு எதிர்வரும் 22ம் திகதி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கள் பதிவகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.