2010

2010

பிரகாஷ்ராஜ் – போனி வர்மா திருமணம்.

prakash-marriage.jpgநடிகர் பிரகாஷ்ராஜ் – போனி வர்மா திருமணம்  இன்று மும்பையில் நடந்தது.

தமிழ், தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். காஞ்சீவரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். பிரகாஷ்ராஜூம் அவரது முதல் மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர். பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர். போனியைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார் பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளையாட்டு மைதான அரங்கில் திருமணம் நடந்தன.  வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து பிரகாஷ் ராஜுக்கு நெருக்கமான இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

உள்ளூர் தயாரிப்பு பி.ரி.ஐ.பக்றீரியாவை வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தம்

images.jpgஉள் நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை நேற்று திங்கட்கிழமை குறிப்பிட்ட இப்பகுதிகளில் வெளியிடவிருந்த போதும் அது பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இதனை வெளியிடுவதாக இருந்தபோதும் அது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார பிரதியமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த பக்றீரியாவானது ஏதாவது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பரிசோதனை செய்யவேண்டியிருப்பதாகவும் பிரதியமைச்சர்
அமரவீர கூறியுள்ளார். அவர்கள் பூரண அறிக்கையொன்றை சமர்ப்பித்த பின்னரே பி.ரி.ஐ. பக்றீரியாவை வெளியிடமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பை அழிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பி.ரி.ஐ. பக்றீரியாவை கொழும்பில் மூன்று இடங்களில் நேற்று வெளியிடத்திட்டமிடப்பட்டிருந்தது.நாளை புதன்கிழமையும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பசில் தலைமையில் தூதுக்குழு இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய பிரதமரின் விசேட தூதுவரது விஜயம் தொடர்பாக புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனத் தெரிவித்த அரசாங்கம், இதேவேளை இலங்கையின் மூவரடங்கிய தூதுக்குழு இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பெற்றோலிய,பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் விசேட தூதுவர் இவ்வாரத்தில் கொழும்பு வரவிருப்பதாகவும் அதிகாரி மட்டத்தில் ஒருவர் அனுப்பப்படலாமென முன்னர் கூறப்பட்டாலும் இப்போது அரசியல் மட்டத்திலான ஒருவரே அனுப்பப்படலாமெனவும் அதில் சிதம்பரம், பாலு ஆகிய இருவரது பெயர்களும் அடிபடுவதாக வார இறுதிப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருப்பதாக செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியதாவது; இந்தியப் பிரதமர் தனது விசேட தூதுவரை அனுப்ப விருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் அறிவித்திருப்பது மட்டுமே எமக்குத் தெரியும். யார் அனுப்பப்படுகின்றார். எப்போது அவர் வருவார் என்பது பற்றிய எந்த விபரமும் புதுடில்லியிடமிருந்து எமக்கு உத்தியோக பூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்திய பிரதமரின் விசேட தூதுவர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.அவருக்கு வடக்கு, கிழக்கு உட்பட எங்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் சுதந்திரமாக சென்று வர இடமளிக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரமே ஜயந்த தெரிவித்தார்.

ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர

sangakkara.jpgஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ9 வீதியால் செல்வதற்குத்தடை இல்லை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9 பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவியிருந்தன.

எனினும் அவ்வாறான புதிய விதிமுறைகள் எதுவும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லையென தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இது பற்றி லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகையில் “அவ்வாறான எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் செல்லத் தரை வழியைப் பயன்படுத்த முடியும். எனினும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். அதை விடுத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அத்துடன் இது பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல இது பற்றி தெரிவிக்கையில்; “உத்தியோகபூர்வமாக அவ்வாறான எந்தத் தடை உத்தரவும் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்குச் செல்வதற்குச் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் கூறும் காரணத்திற்கு ஏற்ப அவர்களை எந்த வழியில் அனுமதிப்பதென அமைச்சு தீர்மானிக்கும். எனவே ஆதாரமற்ற தகவல்களில் குழப்பமடையத் தேவையில்லை என்று கூறினார்.

யாழ்.குடாநாடு செல்லும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை கொண்டோர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை கொழும்பு காலி முகத்திடல் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் நுழைவாயிலுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேர்வின் சில்வா

mervyn.jpgசமீபத்தில் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.

அன்பளிப்புப் பொருட்களுடன் அவர் அங்கு சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அவர் நாட்டிலுள்ள பல பௌத்த ஆலயங்களுக்கு சென்று அங்கு வர்ணம் தீட்டும் பணிக்கு அனுசரணை வழங்கியதாகவும் இப்பணியின் சில அரச தரப்பு உறுப்பினர்களும் பங்கேற்றதாகவும் அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேர்வின் சில்வா ராமாவில் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிலையத்திற்குச் சென்றதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை களனிய விகாரையில் வர்ணம் தீட்டும் நடவடிக்கைக்கு அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தனது மக்களுக்காக பணியாற்றும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மிருகங்கள் பலி சத்தியாக் கிரக போராட்டம்

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவதனை தடுப்பதற்காக சத்தியாக் கிரக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.

உருளை கிழங்குகளுக்கு புதிதாக 30 ரூபாய் வரி

potatoes.gifஇறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் உருளை கிழங்குகளுக்கும் புதிதாக 30 ரூபாய் வரி விதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சு செயலாளரிடம் பணித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருமலை நகர சபை பதில் தலைவராக செல்வராஜா

திருகோணமலை நகர சபையின் பதில் தலைவராக கே.செல்வராஜா நேற்று திங்கட்கிழமை காலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை நகரசபையின் உபதலைவராகப் பணியாற்றிவரும் இவரைப் பதில் தலைவராக கிழக்குமாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்திருந்தார்.

நகரசபைத் தலைவராகப் பணிபுரிந்த எஸ்.கௌரிமுகுந்தனை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பதவி நீக்கம் செய்து விட்டு, அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை பதில் தலைவராகப் பணிபுரியும் படி உபதலைவரான செல்வராஜாவை முதலமைச்சர் நியமித்தார். அதற்கிணங்கவே உபதலைவர் செல்வராஜா, பதில் தலைவராகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்ப தடை

sri-lankan-maids.jpgஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வேலைவாய்ப்பிற்காக பணிப்பெண்களை ஜோர்தான் நாட்டிற்கு அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.