November

November

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அவுஸ்திரேலியாவிலிருந்து மருந்து

influenza-a.jpgநாட்டில் தற்போது ஏ.எச்1.என்1 என்ற பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால் அதற்கான மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெறுவதற்கு சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த நோயினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம்,  இந்த நோய் பல்வேறு மாவட்டங்களிலும் வேகமாகப் பரவியும் வருவதால் இதற்கான இந்த மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு வந்து சேரவுள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மருந்து இங்கு வந்ததும் நாட்டில் உள்ள சகல ஆஸ்பத்திரிகளுக்கும் அவை விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

யுத்த குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில்

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றதாக அமெரிக்கா விடுத்துள்ள குற்றச்சாட்டு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை அடுத்த மாத (டிசம்பர்) இறுதியளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அமெரிக்காவின் மேற்படி குற்றச்சாட்டு அறிக்கை பத்திரிகை செய்திகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் சமரசிங்க கூறினார்.

அமெரிக்க காங்கிரஸ் இந்த அறிக்கையை இலங்கை அராசங்கத்திடம் கையளித்ததை யடுத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

அசாத்சாலியும் ஜோன்ஸ்டனும் நாளை ஊடகவியலாளர் மாநாடு

sali.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான அசாத்சாலி தெரிவித்தார். இது தொடர்பில் கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி மக்களுக்குத் தெளிவுபடுத்தப் போவதாக அசாத் சாலி கூறினார்.

பொன்சேகாவைத் தோற்கடிக்க வேண்டுமென்ற தமது நிலைப்பாடு குறித்து, பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் தம்முடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், ஐ. தே. க. ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் உண்மை நிலையை விளக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறுதியாக மக்களின் தீர்மானத்தையே ஏற்பதாகவும் அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப்பதானால் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பீர்களா என்று கேட்டதற்குப் பதிலளித்த அசாத் சாலி ‘அவ்வாறென்றால் அதன் மறு பக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து அந்தக் கூட்டத்திலிருந்து அசாத்சாலி வெளிநடப்புச் செய்தார். இதனையடுத்து, அசாத்சாலி ஐ. தே. க. செயற் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதேவேளை ஐ. தே. க. குருநாகல் மாவட்ட எம். பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு ஐ. தே. க. எடுத்த தீர்மானத்தை கண்டித்து செயற்குழுவிலிருந்து வெளியேறியதோடு, ஐ. தே. க. அமைப்பாளர் பதவியையும் இராஜினாமாச் செய்துள்ளார்.

ஜனாதிபத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா

sara-pon.jpgஎதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக ‘அன்னம்’ சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார். அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,”பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார்.மேலும், நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் மாவீரர் தின உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

”பிரபாகரனின் உரைகள் அடங்கிய இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியானதாக உள்ளது. தமிழர்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். தற்போது என்னால் பல விவரங்களை வெளியே கூற முடியாவிட்டாலும் காலம் வரும்போது அனைத்தும் வெளியே வரும். போரின்போது தனக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் தனது உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் தனக்கருகில் போராளிகளை வைத்திருந்தவர் பிரபாகரன். ஆனால், அவரின் உடலை முள்ளிவாய்க்காலில் கண்டெடுத்தோம் என்று இலங்கை அரசு கூறும் கதையை குழந்தைகள் கூட நம்பாது. இலங்கை தென்பகுதி மக்களையும், இந்தியாவையும் நம்ப வைக்க நடத்தப்பட்ட நாடகம் தான் அது.” என்று எஸ். ஜெயானந்தமூர்த்தி பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி

வவுனியா வடக்கு 8 பிரதேச செயலக பிரிவுகளில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgநிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு, மன்னக்குளம், கனகராயன்குளம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கில் இன்னும் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள் ளனர். இங்குட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  இங்கு அரச அலுவலகங்கள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதுடன் கனகராயன் மகா வித்தியாலயம், புளியங்குளம் வித்தியாலயம் ஆகிய இரண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீளத் திறக்கப்படுமென்றும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் புளொட்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல். அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.

நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்குத் தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது.

இப்போது யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் நியாயமான தீர்வொன்றைத் நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக்கூடாது. அதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்க்கூட்டமைப்பு ஆலோசனை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்ணவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டுமென ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் கட்சியினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதோ அல்லது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா மீதோ நம்பிக்கை வைக்கத் தமிழ் மக்கள் தயாரில்லை என்பதால் இவர்கள் இருவரில் ஒருவரை ஆதரிக்க முடியாத நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மீள்குடியேறியோருக்கு மேலும் ரூ.25,000: டிசம்பர் 15க்கு முன் கொடுப்பனவு

badi000000.jpgநிவாரண கிராமங்களிலிருந்து வடக்கில் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேறியபோது இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்ட அனைவருக்கும் மேலும் இருபத்தைந்தாயிரம் ரூபா எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படுமென்று மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். மீள்குடியேறுவோர் தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஏற்கனவே இருபத்தைந்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகை தற்போது ஐம்பதினாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் குடியேறுவோருக்கு இந்தத் தொகை பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், ஏற்கனவே குடியமர்ந்தவர்களுக்கு நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் கூறினார். தமது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர்,

‘மக்கள் இடம்பெயர்ந்தபோது இருந்த நிலையைவிடவும் கூடுதலான வசதிகளுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவித்தே அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்றனர். இரண்டு ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தம்மிடமுள்ள கூடுதலான ஏக்கரில் விவசாயம் செய்ய விரும்பினால் சொந்தச் செலவில் செய்யலாம். ஆனால், அரசாங்கம் இரண்டு ஏக்கருக்கு மாத்திரமே உதவிசெய்யும். மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடி உபகரணங்களும் ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.’ வவுனியா வடக்கில் இன்னும் நான்கு நாட்களில் மீள்குடியேற்றம் மேற் கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதியின் வெற்றிக்காக இ.தொ.கா பரவலான ஏற்பாடு மலையகமெங்கும் அமைப்புகளுக்கு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதுடன் அவரது வெற்றிக்கு உறுதுணையாகப் பாடுபட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகமெங்கும் பரவலாக அறிவித்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த நான்காண்டு பதவிக் காலத்தில் மலையகத்திற்குப் பெரும் சேவையாற்றி யுள்ளாரென்றும், எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்ய உறுதி பூண்டுள்ளா ரென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளர்கள், ஆசிரிய சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஜனாதிபதியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் கல்வி பிரதியமைச்சருமான மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதற்கமைய மாகாணம் மாகாணமாகத் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாக அவர் கூறினார். மலையகத்தில் கல்விக் குறைபாடுகளை நிவர்த்திக்கவும், பொறுப்பாசிரியர்களாக உள்ளவர்களை நிரந்தர அதிபர்களாக நியமிக்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன், கடந்த நான்காண்டுகளில் ஆசிரிய நியமனம், சிற்றூழியர் நியமனம் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு, வைத்தியசாலை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மின்சார விநியோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, மலையகப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

சமூக, பொருளாதார, கல்வி பாதுகாப்பு போன்றவை உள்வாங்கப்பட்டு மலையகத்தை மேம்படுத்த ஜனாதிபதி உறுதிபூண்டுள்ளாரென்றும் அவர் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இரு தினங்களுக்கு முன் கொட்டகலை சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போது மலையகத்திற்குக் கூடுதல் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக பெசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இ. தொ. கா. பிரதியமைச்சர்களின் பிரேரணைகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படு வதாகவும் அவர் கூறியதாக பிரதியமைச்சர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.