September

September

சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 28 ஆம் திகதியே 3 ஆம் தவணைக்கு திறக்கப்படும்

school-girls.jpgபுனித ரமழான் மாத விடுமுறைக்குப் பின்னர் மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்படவிருந்த சப்ரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 28 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் 28 ஆம் திகதியே இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

நோன்புப் பெருநாளைக்கு மறுதினம் ஆரம்பிக்கும் ஆறு நோன்பை நோற்பதற்கு வசதியை கருத்திற்கொண்டு மூன்றாந் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முதலமைச்சின் செயலாளர் ஹேரத், பி.குலரத்ன, மாகாணச் செயலாளர் பீ.கொடிதுவக்கு, சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க முஸ்லிம் சமூகத்தின் சமயக் கடமைகளுக்கு மதிப்பளித்து முதலமைச்சர் இப்பாடசாலைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  இதற்கமைய சப்ரகமுவ மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆர்.அபேசிங்க இப்பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்புக் கடிதங்களை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 4 சனிக்கிழமைகளிலும் இந்தப் பாடசாலைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டுமெனவும் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வே தேர்தல் – நோர்வே நக்கீரா

தேர்தல் 2009 நோர்வேயில் களமாடி 15.09.2009 முடித்திருக்கிறது. இடது, வலது, நடு, சிவப்பு, நீலம், பச்சை, என மக்களைப் பங்குபோட்டுப் பங்குபிரித்து ஜனநாயகமான சனநாயகம் பதில் தந்திருக்கிறது. நாம் எவ்வளவுதான் புலம்பெயர் நிலத்தில் புதைந்தாலும் நாம் பாலர்களாய் தவழ்ந்தபோது நக்கித்தின்ற மண் எமது உடம்பில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சிந்தனை சிறகடிக்க என்நாட்டிலும் இப்படிச் சுதந்திரமாய் மக்கள் வாக்களிக்கும் நிலைவராதா என்ற ஏக்கம் எம் உணர்வுகளை எடைபோடத்தான் செய்கிறது.

norway partiesகட்சிகள்

றோசா பூ: தொழில்கட்சி
நீலத்துண்டு: வலதுசாரிகள்
பச்சை இலை: மத்தியகட்சி
SV: சோசலிச இடதுசாரிகள்
Fr:(அப்பிள்): முன்னேற்றக்கட்சி
Krf: கிறீஸ்தவக்கட்சி
V: இடதுகட்சி

நோர்வேயில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வன்ஸ்திர என்று அழைப்பப்படும் இடக்கட்சி (இடக்கட்சி என்பதற்காக இவர்கள் இடதுசாரிகளாக இருப்பார்கள் என்று எண்ணினால் தவறானது) இம்முறை தேர்தல் தடைவரப்புக்குக் தட்டத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் என்றும் வலதுசாரிகளுடனேதான் கூட்டமைப்பார்கள். தேர்தல் தோல்வியை கருத்திற் கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து லாஸ் ஸ்பூண்கொய்ம் பதவி விலகியுள்ளார்.

பலகாலமாக நோர்வேயில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நாட்டை நல்ல நிலைக்கு முன்னேற்றிய தொழிலாளர் கட்சி சுமார் 35.4 வீதமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 2.7 வீதம் அமோகமான வாக்குக்களைப் பெற்றுள்ளார்கள். ஆளுங்கட்சியில் தொடர்ந்திருக்கும் கட்சிகள் அடுத்தடுத்து வெல்வது கடினம். இந்த உலகம் முழுவதும் ஆடிப்போன பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாய் வென்று, தேர்தலிலும் தம்வெற்றியை நிலைநாட்டிய தொழிலாளர் கட்சிக்கு எம்வாழ்த்துகள்கள். இம்முறை இவர்கள் முக்கியமாக முன்வைத்த விடயங்கள் பாடசாலை, படிப்பு, தொழில் வாய்ப்பு என்பனவாம். ஒவ்வொரு முறையும் தொழிற்கட்சி கூட்டமைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

தொழிலாளர் கட்சியை அடுத்துப் பெரியகட்சியாக வளர்ந்துள்ள முன்னேற்றக்கட்சி (Frp) 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெருங்கட்சியானாலும் எதிர்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பார்களா என்பது கேள்விதான். அவர்கள் நேராகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்களை எதிர்ப்பவர்கள். ஏறக்குறைய துவேசத்தை வளர்ப்பவர்கள் எனலாம். எமது நாட்டைப்போல் வாக்குகளைப் பெறுவதற்காக துவேசத்தை வளர்த்துவிட்டு நாடு என்னவாகி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இந்த வாய்பேச்சு வீரர்கள் அனைவரையும் கூட்டமைப்பாக இயங்க அழைத்தாலும் எந்தக்கட்சியும் இவர்களுடன் இணைய விரும்புவதில்லை. அதற்கு வெளிநாட்டவர்கள் கொள்கையல்ல காரணம். இவர்களிடம் நிரந்தரமான உறுதியான எந்தக் கொள்கையையும் காணவியலாது. அன்று சொன்னோம் உங்களுக்கு இப்பதான் தெரிகிறதா என்று அடிக்கடி கேட்பார்கள். இலகுவாக எதையும் பொறுப்பிலில்லாதபோது பொறுப்பற்றுச் சொல்லலாம். இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவர்களுடன் எந்தகட்சியும் இணைந்து அரசமைக்கவோ எதிர்கட்சியமைக்கவோ விரும்புவதில்லை.

உதாரணமாக; தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தவேளை கட்சித் தலைவர்களின் உரையையும் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியின் தலைவி சீவ் என்பவர் மேடையில் அறைகூவல் விடுத்தார்; நாம் ஏனைய வலதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க விரும்புகிறோம், இடது கட்சியையும் சேர்த்துத்துத்தான் என்றார். அவவே தன்பழைய தலைவரான கார்ல் ஈ காகனை அழைத்துப் பேசுமாறு கேட்டபோது அவர் இடதுகட்சி வேண்டாம் என்று பேசினார். கட்சித்தலைவி வாய்மூடமுன்னரே மறுதலிப்பு. இப்படியான ஒருகட்சி இம்முறை 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் நோர்வேயின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதுதான். இவர்களிடம் வெளிநாட்டவர் எதிர்ப்பு என்பதே முன்னுரிமையாக்கப்படும். இவர்கள் கருதும் வெளிநாட்டவர்கள் நிறமனிதர்கள் அதாவது கறுப்பு, மண்ணிநிறங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பழைய தலைவர் கார்ல் தங்குவதே ஸ்பானியாவில்தான். அவருக்கு அங்கே வீடு உண்டென்றும், நோர்வேயை விட அதிகமாக அங்கேதான் தங்குவார் என்றும் அறியப்படுகிறது. இக்கட்சி எவ்வளவுக்கெவ்வளவு நோர்வேயின் சேமிப்புப் பணத்தை எடுத்து தூதாரித்தனம் செய்ய முடியுமோ அதற்கான வரவுசெலவுத் திட்டத்தையே இவர்கள் முன்மொழிவார்கள். அடிப்படை உணவு விலையை விட சிகரெட், வைன், மது போன்றவற்றின் விலையை குறை என்பார்கள்.

norway parlimentகட்சிகளின் வாக்குறுதிகள்

தொழிலாளர் கட்சி :- சமமான பாடசாலை அனுமதி, போதியளவு அரச உடைமைகள், தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல், எல்லோருக்கும் வேலைவாய்பு வயோதிபர் பாதுகாப்பு என்பனவாகும்.

சோசலிச இடதுசாரிகள் :- சுற்றம் சூழல்பாதுகாப்பு, சமமானவரி அல்லது சிறுகுறைப்பு, அரசபோக்குவரத்துச் சேவையை முன்னுரிமைப்படுத்தல், நீதியான வேலைவாய்ப்பு, பாடசாலை, சமூகஉதவி, தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல்,

வலதுசாரி கட்சி :- வரிக்குறைப்பு, தனியார் மயமாக்கல், தனியால் முதலீடுகளை ஊக்குவித்தல், அரசஉடமைகளை ஏலத்தில் விடுதல், தனியார் பாடசாலைகளை ஊக்குவித்தல், பெருந்தெருக்கள் அமைத்தல், வீதிப்பராமரிப்பு.

முன்னேற்றக்கட்சி :- அகதிகளைக் குறைத்தல், வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்துதல், முல்லா கிரேக்கார் எனும் குறுடிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதத் தலைவனை நாட்டை விட்டு வெளிறேற்றல், அரச உடமைகளை தனியார் மயமாக்கல், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமாக முதலாளிகளுக்குச் சலுகைகள், மாணவர்களின் படிப்புக்கான வங்கிக்கடனை நிறுத்துதல், பெருந்தெருக்கள், வீதிகள் அமைத்துப் பாதுகாத்தல், மது, சிகரெட்டுகளின் விலையைக் குறைத்தல்.

வலதுசாரிகளின் கண்களில் சுற்றம் சூழல் என்பது ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லையோ. மேலும் 2009 தேர்தலில் துவேசக்கட்சியை விழுத்துவதற்காகவே இடதுசாரிகளுக்குப் பல வெளிநாட்டவர்கள் தமது வோட்டுக்களை இட்டார்கள்.

சோசலிச இடதுசாரிகளின் ஒரு பிரதிநிதிதான் எரிக் சூல்கெய்ம். இவர்தான் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தடிகொடுத்து ஓடியவர். இவர் தன்கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சோசலிச இடதுசாரிகளை புறக்கணிக்குமாறும் கம்யூனிஸ்கட்சிக்கு (கம்யூனிஸ்கட்சி/ Red / RV ) வாக்களிக்குமாறும் ஒரு தமிழ்குழு வேண்டுகோள் விடுத்தது. இது சரிதானா என்பதை அலசிப்பார்ப்பது முக்கியமானது.

இந்த கம்யூனிஸ்கட்சி அதி கூடுதலாக ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார். கடைசி காலங்களில் பல ஆண்டுகளாக அவர்கள் நாமமே பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இக்கட்சிக்கு வாக்களிப்பதூடாக எம்தமிழர்களின் வாக்குகள் பெறுமதியற்று விட்டன. காரணம் இக்கட்சியில் ஒருவர் கூட நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லை. இத்தமிழர்களின் வாக்குகள் மற்றைய இடதுசாரிகளுக்கு விழுந்திருந்தால் குறைந்தபட்சம் வாக்குவீதமாவது இடதுபக்கமுள்ள ஒரு கட்சிக்குக் கூடியிருக்கம் அல்லவா? இன்னும் அரசியலில் நாம் தீர்க்க தரிசனமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.

நோர்வேயில் இடதுசாரிகள் கூடுதலாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், வலதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளுக்கும் தம் வாக்குக்களைப் போடுவார்கள். சுமார் 1 அல்லது 2வீதமான மக்கள் மட்டுமே இடதுசாரிகளா? வலதுசாரிகளா ஆட்சியில் அமர்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம்:- தொழிலாளர் கட்சி 2.7 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதேவேளை சோசலிச இடதுசாரிகள் 2.6 வீதத்தால் குறைந்துள்ளார்கள். ஆக 0.1வீதம் மட்டுமே தம்வாக்குக்களை மாறிப் போட்டிருக்கிறார்கள். இதே போன்றே வலதுசாரிகளிலும் 0.9 வீதமானவர்கள் மட்டும் தம்வாக்குக்களை மாறிப் போட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 0.1 சதவீதமான மக்களே தேர்தல் முடிவகளைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மேலும் துவேசக்கட்சியான முன்னேற்றக் கட்சியின் அபரீதமான முன்றேற்றம் நாட்டை போரொன்றிற்கோ கலவரம் ஒன்றிற்கோ இட்டுச்செல்லும் என எண்ணத் தோன்றுகிறது. இலங்கையில் 70கள் போல் துவேசப்பின்னணி தலைதூக்கும் போது அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தூக்கிய நிலை கண்முன் விரிகிறது. வெளிநாட்டவர்களின் அதிக வரவு இக்கட்சிக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. அதிலும் வெளிநாட்டவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர் வருகை அதிகரிப்பும் துவேசத்தை அதிகரிக்கிறது. ஐரோப்பியர் பார்வைக்கு வெள்ளையர்களாய் இருப்பதால் அவர்களை வெளிநாட்டவர்கள் என்று இக்கட்சி கணிப்பதில்லை. இந்த கிழக்கு ஐரோப்பியரே முக்கியமான பெரிய சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள். இக்கட்சி எதை எடுத்தாலும் கறுப்பு வெளிநாட்டவர்களையே தாக்குவார்கள். முக்கியமாக முஸ்லீம்களே இவர்களின் சத்துருக்கள்.

இக்கட்சியின் வளர்ச்சி எம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்கு நாகரீகத்தில் இருந்து மனிதவதை வரை நாம் முன்னோடிகளே. எமது சுவடுகளைதான் இவர்கள் தொடர்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பெரும்பான்மை வாக்குக்களை ஏன் தொழிற்கட்சி பெற்றது என்றால்; இப்பொருளாதார நெருக்கடியிலும் நாட்டை உடையவிடாது வங்கி வட்டிகளைக் குறைந்து மக்களிடையே பணப்புழக்கத்தை சீர்படுத்தியதும், துவேசக்கட்சியை நிறுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் தொழிற்கட்சி தெரிவுசெய்ததும், வலது பக்கத்தவர்களிடையே நிரந்தமில்லாத கூட்டுத்தலைமை என்பதெல்லாம் தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இத்தொழிற்கட்சி வரி உயர்த்துவது வழக்கம்.

இன்னும் நாலு வருடங்களின் பின்னரும் தேர்தலில் துவேசக்கட்சி இதைவிடப் பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிலவேளை கூட்டமைக்காமலே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த மீண்டும் இன்று கைது

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கிஇ சேதம் விளைவித்ததாக  தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம  மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.

கடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் கடும் நிலநடுக்கம்

அஸ்ஸாமில் இன்று பிற்பகல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக ஷில்லாங் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அஸ்ஸாமில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், இன்று மதியம் 2.23 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்திக்கு வடமேற்கே 125 கி.மீ தொலையில், பூமிக்கடியில் 7.2 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஒபாமா முன் ஐ.நாவில் உரையாற்றும் லக்னோ சிறுமி

21-yugrathna.jpgநியூ யார்க்கில் அமெரிக்க அதிபர்  ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுப்புற சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்றுப் பேசவுள்ளார். அவரது பெயர் யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா. லக்னோவில் உள்ள புனித பிடலிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாளை நடக்கும் கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக புவி வெப்பமாதல் குறித்து பேசவிருக்கிறார்.ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறார் யுக்ரத்னா.

இந்த கூட்டத்துக்கு ஐநா பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.

ஜனாதிபதி நாளை வாகரைக்கு விஜயம்

slpr080909.jpgஐரோப்பிய யூனியனின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வாகரை மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை வைபவ ரீதியாக திறந்து வைக்கவிருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மகா வித்தியாலய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை அங்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

2004ஆம் ஆண்டு சுனாமியின் போது வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதிகள் சேதமடைந்திருந்தன. சுனாமி மீள் கட்டுமான திட்டத்தின் கீழ் இவ்வித்தியாலய புனரமைப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்க ஐரோப்பிய யுனியன் முன்வந்திருந்தது.

புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு இணைந்து ஐரோப்பிய யுனியனின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலை கட்டிடத் தொகுதி,  நவீன தொழில் நுட்பத்துடன்,  மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முன்மாதிரி பாடசாலையாக அமைந்துள்ளது என ஐரோப்பிய யுனியன் தெரிவிக்கின்றது.

இம்மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கல்வி பயிலும் 700இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள். முழுமையான வசதிகளுடன் நூலகம்,  விஞ்ஞான ஆய்வு கூடம், கணினி பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம்,  விளையாட்டு மைதானம் ஆகியன வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வித்தியாலக் கட்டிடத் திறப்பு விழாவில் ஐரோப்பிய யுனியனின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ்கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,  மத்திய தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்

ஐ.நா. கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் – பிரதமர் ரட்னசிறி சனியன்று உரை

1509sri-lankan-prime-minister.jpgஐ. நா. பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் நாளை நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. இதில் இலங்கையின் சார்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு கலந்துகொள்ளும்.

பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 26ம் திகதி பொதுச் சபையில் உரையாற்றுவார். சர்வதேச சமாதானம்,  பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்துவதும் எனும் தலைப்பில் பிரதமர் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின்போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேசவுள்ள பிரதமர்,  நியூயோர்க்கில் ஆசிய சமூகத்தினரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கை முன் உள்ள சவால்கள்: புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின் சமாதானத்தை உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் ஆசிய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார். பிரதமருடன் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தின்போது கலந்துகொள்கின்றனர்

விடுதலை கோரி நளினி சாகும் வரை உண்ணாவிரதம்

nalini-111.jpgதன்னை விடுதலை செய்யக் கோரியும், தனது விடுதலை கோரிக்கையைப் பரிசீலிக்கும் சிறை ஆலோசனைக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும் நளினி வேலூர் மகளிர் சிறையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன் தூக்குத் தண்டனை பெற்று ஆடவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கருணை மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய முறையில் பரிசீலிக்குமாறும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிய ஆலோசனைக் குழுவை அரசு அமைத்தது. ஆனால் அந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டும். தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நளினி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா

21-somdev.jpgடேவிஸ் கோப்பைடென்னிஸ்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் உலக பிரிவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ்  தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.

இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய்,  வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா  நுழைந்துள்ளது.

ஐ.நா.சபையின் பிரதிநிதி கெலின் நாளை இலங்கை விஜயம்

210909walter-kalin.jpgஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு இடம்பெயர் முகாம் நிலைமைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
வவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களுக்கு சென்று நிலைமைகளை அவர் நேரில் பார்வையிடுவார் என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது வோல்டர் கெலின் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.