நோர்வே தேர்தல் – நோர்வே நக்கீரா

தேர்தல் 2009 நோர்வேயில் களமாடி 15.09.2009 முடித்திருக்கிறது. இடது, வலது, நடு, சிவப்பு, நீலம், பச்சை, என மக்களைப் பங்குபோட்டுப் பங்குபிரித்து ஜனநாயகமான சனநாயகம் பதில் தந்திருக்கிறது. நாம் எவ்வளவுதான் புலம்பெயர் நிலத்தில் புதைந்தாலும் நாம் பாலர்களாய் தவழ்ந்தபோது நக்கித்தின்ற மண் எமது உடம்பில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் சிந்தனை சிறகடிக்க என்நாட்டிலும் இப்படிச் சுதந்திரமாய் மக்கள் வாக்களிக்கும் நிலைவராதா என்ற ஏக்கம் எம் உணர்வுகளை எடைபோடத்தான் செய்கிறது.

norway partiesகட்சிகள்

றோசா பூ: தொழில்கட்சி
நீலத்துண்டு: வலதுசாரிகள்
பச்சை இலை: மத்தியகட்சி
SV: சோசலிச இடதுசாரிகள்
Fr:(அப்பிள்): முன்னேற்றக்கட்சி
Krf: கிறீஸ்தவக்கட்சி
V: இடதுகட்சி

நோர்வேயில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி வன்ஸ்திர என்று அழைப்பப்படும் இடக்கட்சி (இடக்கட்சி என்பதற்காக இவர்கள் இடதுசாரிகளாக இருப்பார்கள் என்று எண்ணினால் தவறானது) இம்முறை தேர்தல் தடைவரப்புக்குக் தட்டத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் என்றும் வலதுசாரிகளுடனேதான் கூட்டமைப்பார்கள். தேர்தல் தோல்வியை கருத்திற் கொண்டு கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து லாஸ் ஸ்பூண்கொய்ம் பதவி விலகியுள்ளார்.

பலகாலமாக நோர்வேயில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நாட்டை நல்ல நிலைக்கு முன்னேற்றிய தொழிலாளர் கட்சி சுமார் 35.4 வீதமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது. சென்ற தேர்தலை விட 2.7 வீதம் அமோகமான வாக்குக்களைப் பெற்றுள்ளார்கள். ஆளுங்கட்சியில் தொடர்ந்திருக்கும் கட்சிகள் அடுத்தடுத்து வெல்வது கடினம். இந்த உலகம் முழுவதும் ஆடிப்போன பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமாய் வென்று, தேர்தலிலும் தம்வெற்றியை நிலைநாட்டிய தொழிலாளர் கட்சிக்கு எம்வாழ்த்துகள்கள். இம்முறை இவர்கள் முக்கியமாக முன்வைத்த விடயங்கள் பாடசாலை, படிப்பு, தொழில் வாய்ப்பு என்பனவாம். ஒவ்வொரு முறையும் தொழிற்கட்சி கூட்டமைத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிப்பதைக் காணலாம்.

தொழிலாளர் கட்சியை அடுத்துப் பெரியகட்சியாக வளர்ந்துள்ள முன்னேற்றக்கட்சி (Frp) 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெருங்கட்சியானாலும் எதிர்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பார்களா என்பது கேள்விதான். அவர்கள் நேராகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்களை எதிர்ப்பவர்கள். ஏறக்குறைய துவேசத்தை வளர்ப்பவர்கள் எனலாம். எமது நாட்டைப்போல் வாக்குகளைப் பெறுவதற்காக துவேசத்தை வளர்த்துவிட்டு நாடு என்னவாகி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இந்த வாய்பேச்சு வீரர்கள் அனைவரையும் கூட்டமைப்பாக இயங்க அழைத்தாலும் எந்தக்கட்சியும் இவர்களுடன் இணைய விரும்புவதில்லை. அதற்கு வெளிநாட்டவர்கள் கொள்கையல்ல காரணம். இவர்களிடம் நிரந்தரமான உறுதியான எந்தக் கொள்கையையும் காணவியலாது. அன்று சொன்னோம் உங்களுக்கு இப்பதான் தெரிகிறதா என்று அடிக்கடி கேட்பார்கள். இலகுவாக எதையும் பொறுப்பிலில்லாதபோது பொறுப்பற்றுச் சொல்லலாம். இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவர்களுடன் எந்தகட்சியும் இணைந்து அரசமைக்கவோ எதிர்கட்சியமைக்கவோ விரும்புவதில்லை.

உதாரணமாக; தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தவேளை கட்சித் தலைவர்களின் உரையையும் தொலைக்காட்சியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியின் தலைவி சீவ் என்பவர் மேடையில் அறைகூவல் விடுத்தார்; நாம் ஏனைய வலதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து அரசமைக்க விரும்புகிறோம், இடது கட்சியையும் சேர்த்துத்துத்தான் என்றார். அவவே தன்பழைய தலைவரான கார்ல் ஈ காகனை அழைத்துப் பேசுமாறு கேட்டபோது அவர் இடதுகட்சி வேண்டாம் என்று பேசினார். கட்சித்தலைவி வாய்மூடமுன்னரே மறுதலிப்பு. இப்படியான ஒருகட்சி இம்முறை 22.9 வீதமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் நோர்வேயின் எதிர்காலம் சந்தேகத்துக்குரியதுதான். இவர்களிடம் வெளிநாட்டவர் எதிர்ப்பு என்பதே முன்னுரிமையாக்கப்படும். இவர்கள் கருதும் வெளிநாட்டவர்கள் நிறமனிதர்கள் அதாவது கறுப்பு, மண்ணிநிறங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பழைய தலைவர் கார்ல் தங்குவதே ஸ்பானியாவில்தான். அவருக்கு அங்கே வீடு உண்டென்றும், நோர்வேயை விட அதிகமாக அங்கேதான் தங்குவார் என்றும் அறியப்படுகிறது. இக்கட்சி எவ்வளவுக்கெவ்வளவு நோர்வேயின் சேமிப்புப் பணத்தை எடுத்து தூதாரித்தனம் செய்ய முடியுமோ அதற்கான வரவுசெலவுத் திட்டத்தையே இவர்கள் முன்மொழிவார்கள். அடிப்படை உணவு விலையை விட சிகரெட், வைன், மது போன்றவற்றின் விலையை குறை என்பார்கள்.

norway parlimentகட்சிகளின் வாக்குறுதிகள்

தொழிலாளர் கட்சி :- சமமான பாடசாலை அனுமதி, போதியளவு அரச உடைமைகள், தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல், எல்லோருக்கும் வேலைவாய்பு வயோதிபர் பாதுகாப்பு என்பனவாகும்.

சோசலிச இடதுசாரிகள் :- சுற்றம் சூழல்பாதுகாப்பு, சமமானவரி அல்லது சிறுகுறைப்பு, அரசபோக்குவரத்துச் சேவையை முன்னுரிமைப்படுத்தல், நீதியான வேலைவாய்ப்பு, பாடசாலை, சமூகஉதவி, தனியார் மயப்படுத்தலைத் தடுத்தல்,

வலதுசாரி கட்சி :- வரிக்குறைப்பு, தனியார் மயமாக்கல், தனியால் முதலீடுகளை ஊக்குவித்தல், அரசஉடமைகளை ஏலத்தில் விடுதல், தனியார் பாடசாலைகளை ஊக்குவித்தல், பெருந்தெருக்கள் அமைத்தல், வீதிப்பராமரிப்பு.

முன்னேற்றக்கட்சி :- அகதிகளைக் குறைத்தல், வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்துதல், முல்லா கிரேக்கார் எனும் குறுடிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதத் தலைவனை நாட்டை விட்டு வெளிறேற்றல், அரச உடமைகளை தனியார் மயமாக்கல், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் முகமாக முதலாளிகளுக்குச் சலுகைகள், மாணவர்களின் படிப்புக்கான வங்கிக்கடனை நிறுத்துதல், பெருந்தெருக்கள், வீதிகள் அமைத்துப் பாதுகாத்தல், மது, சிகரெட்டுகளின் விலையைக் குறைத்தல்.

வலதுசாரிகளின் கண்களில் சுற்றம் சூழல் என்பது ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லையோ. மேலும் 2009 தேர்தலில் துவேசக்கட்சியை விழுத்துவதற்காகவே இடதுசாரிகளுக்குப் பல வெளிநாட்டவர்கள் தமது வோட்டுக்களை இட்டார்கள்.

சோசலிச இடதுசாரிகளின் ஒரு பிரதிநிதிதான் எரிக் சூல்கெய்ம். இவர்தான் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குத் தடிகொடுத்து ஓடியவர். இவர் தன்கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி சோசலிச இடதுசாரிகளை புறக்கணிக்குமாறும் கம்யூனிஸ்கட்சிக்கு (கம்யூனிஸ்கட்சி/ Red / RV ) வாக்களிக்குமாறும் ஒரு தமிழ்குழு வேண்டுகோள் விடுத்தது. இது சரிதானா என்பதை அலசிப்பார்ப்பது முக்கியமானது.

இந்த கம்யூனிஸ்கட்சி அதி கூடுதலாக ஒருவர் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார். கடைசி காலங்களில் பல ஆண்டுகளாக அவர்கள் நாமமே பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. இக்கட்சிக்கு வாக்களிப்பதூடாக எம்தமிழர்களின் வாக்குகள் பெறுமதியற்று விட்டன. காரணம் இக்கட்சியில் ஒருவர் கூட நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லை. இத்தமிழர்களின் வாக்குகள் மற்றைய இடதுசாரிகளுக்கு விழுந்திருந்தால் குறைந்தபட்சம் வாக்குவீதமாவது இடதுபக்கமுள்ள ஒரு கட்சிக்குக் கூடியிருக்கம் அல்லவா? இன்னும் அரசியலில் நாம் தீர்க்க தரிசனமாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.

நோர்வேயில் இடதுசாரிகள் கூடுதலாக இடதுசாரிக் கட்சிகளுக்கும், வலதுசாரிகள் வலதுசாரிக் கட்சிகளுக்கும் தம் வாக்குக்களைப் போடுவார்கள். சுமார் 1 அல்லது 2வீதமான மக்கள் மட்டுமே இடதுசாரிகளா? வலதுசாரிகளா ஆட்சியில் அமர்வது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். உதாரணம்:- தொழிலாளர் கட்சி 2.7 வீதத்தால் உயர்ந்துள்ளது. அதேவேளை சோசலிச இடதுசாரிகள் 2.6 வீதத்தால் குறைந்துள்ளார்கள். ஆக 0.1வீதம் மட்டுமே தம்வாக்குக்களை மாறிப் போட்டிருக்கிறார்கள். இதே போன்றே வலதுசாரிகளிலும் 0.9 வீதமானவர்கள் மட்டும் தம்வாக்குக்களை மாறிப் போட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 0.1 சதவீதமான மக்களே தேர்தல் முடிவகளைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மேலும் துவேசக்கட்சியான முன்னேற்றக் கட்சியின் அபரீதமான முன்றேற்றம் நாட்டை போரொன்றிற்கோ கலவரம் ஒன்றிற்கோ இட்டுச்செல்லும் என எண்ணத் தோன்றுகிறது. இலங்கையில் 70கள் போல் துவேசப்பின்னணி தலைதூக்கும் போது அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கி தூக்கிய நிலை கண்முன் விரிகிறது. வெளிநாட்டவர்களின் அதிக வரவு இக்கட்சிக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது. அதிலும் வெளிநாட்டவர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகள், முக்கியமாக கிழக்கு ஐரோப்பியர் வருகை அதிகரிப்பும் துவேசத்தை அதிகரிக்கிறது. ஐரோப்பியர் பார்வைக்கு வெள்ளையர்களாய் இருப்பதால் அவர்களை வெளிநாட்டவர்கள் என்று இக்கட்சி கணிப்பதில்லை. இந்த கிழக்கு ஐரோப்பியரே முக்கியமான பெரிய சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார்கள். இக்கட்சி எதை எடுத்தாலும் கறுப்பு வெளிநாட்டவர்களையே தாக்குவார்கள். முக்கியமாக முஸ்லீம்களே இவர்களின் சத்துருக்கள்.

இக்கட்சியின் வளர்ச்சி எம்பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களுக்கு நாகரீகத்தில் இருந்து மனிதவதை வரை நாம் முன்னோடிகளே. எமது சுவடுகளைதான் இவர்கள் தொடர்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பெரும்பான்மை வாக்குக்களை ஏன் தொழிற்கட்சி பெற்றது என்றால்; இப்பொருளாதார நெருக்கடியிலும் நாட்டை உடையவிடாது வங்கி வட்டிகளைக் குறைந்து மக்களிடையே பணப்புழக்கத்தை சீர்படுத்தியதும், துவேசக்கட்சியை நிறுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் தொழிற்கட்சி தெரிவுசெய்ததும், வலது பக்கத்தவர்களிடையே நிரந்தமில்லாத கூட்டுத்தலைமை என்பதெல்லாம் தொழிற்கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இத்தொழிற்கட்சி வரி உயர்த்துவது வழக்கம்.

இன்னும் நாலு வருடங்களின் பின்னரும் தேர்தலில் துவேசக்கட்சி இதைவிடப் பெரும்பான்மையைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. சிலவேளை கூட்டமைக்காமலே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • john
    john

    புலிகள்தான் அரசியலில் சாணக்கியம் இல்லாது போனார்கள் என்றால் புதிதாகத் தலைதூக்குபவர்களும் இதையே செய்கிறார்கள் என்பது வேதனைக்குரியதே.//

    புதிதாகத் தலைதூக்குபவர்களும் என்று நீங்கள் குறிப்பிடுபவர்களும் புலிகளின் எச்சசொச்சங்கள்தான். பிறகு அரசியலில் சாணக்கியம் எங்கிருந்து வரப்போகுது. அது இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அரங்கேறியிருக்குமா??

    Reply
  • Kusumbo
    Kusumbo

    கொஞ்ச நெஞ்ச வருசங்களா? 30வருடங்கள் என்பது சும்மாவா? எப்படி இச்சமூகம் எப்ப திருந்தும். என்று புத்திஜிவிகளைப் போட்டுத்தள்ள தொடங்கினார்களோ அன்றே ஜனநாயகமும் அரசியலும் செத்துவிட்டது எனலாமா?

    Reply
  • Nackeera
    Nackeera

    தமிழ்செய்திகளில் சில நோர்வேயியச் செய்திகள்
    http://tamilseithi.wordpress.com/

    Reply
  • palli
    palli

    //புதிதாகத் தலைதூக்குபவர்களும் என்று நீங்கள் குறிப்பிடுபவர்களும் புலிகளின் எச்சசொச்சங்கள்தான். பிறகு அரசியலில் சாணக்கியம் எங்கிருந்து வரப்போகுது. அது இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அரங்கேறியிருக்குமா??/

    கண்டிப்பாக அரங்கேறி இருக்கும் ஆனால் அது முள்ளிவாய்காலாக இருக்காது; முறிகண்டியோ அல்லது முழங்காவிலாக இருந்திருக்கும் இதுவே எமது சாபக்கேடு;

    Reply
  • Kusumbo
    Kusumbo

    அரசியல் சாணக்கியமும் சரியான கெரில்லா முறையும் இருந்திருந்தால் போர் அனுராதபுரத்திலோ: அம்பாறையிலே:வில்பத்திலோ அல்லது கொழும்பிலோ நடந்திருக்கும். புலிகள் இறுதிக்காலத்தில் எங்கு சரியான கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தார்கள்? மரபுவழிப்போராட்டம் மண்ணாங்கட்டி என்று பங்கர்களுக்குள் உடம்பு வளர்த்தது தான் மிச்சம்.

    Reply