பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருவர் மாதிவெல மற்றும் இரத்மலானை பிரதேசத்தில் நேற்றுக் காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆர்மி ரொஷான் என்று அழைக்கப்படும் 36 வயதுடைய கீர்த்தி குமார, பப்பா என்று அழைக்கப்படும் 32 வயதுடைய எம். ரிழ்வான் ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சமயமே இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
64-7836 என்ற இலக்க டொயோடா ரக காரில் ஆர்மி ரொஷானை மிரிஹான பொலிஸின் விசேட பிரிவு நிறுத்தி சோதனையிட்டுள்ளது. அதன் போது அவரது காரில் பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளையும் பொலிஸார் மீட்டெடுத்ததையடுத்து அவரை கைது செய்த பொலிஸார், இவர் மறைத்து வைத்திருந்த மற்றைய ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்றுள்ளனர்.
இவருடன் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்களை இலக்குவைத்து ரொஷான் கைக்குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் ரொஷான் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இரண்டு பொலிஸாரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்மி ரொஷான் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் முக்கியமாக தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இரத்மலானை பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஒரு பாதாள உலக குழுவை பிடிப்பதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தில் பாதாள உலக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குழுவொன்றின் தலைவரான ரிழ்வான் என்பவரின் மறைவிடத்தை அண்மித்த பொலிஸார் அவரை பிடிக்க முற்பட்ட போது பொலிஸாரை ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என்று கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மகேஷ் பெரேரா தெரிவித்தார்.