பாடசா லைகளில் வகுப்பறை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பாவிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தினை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன் வேண்டுகோள் வித்துள்ளார். அண்மையில் மலையக கல்வி வளர்ச்சியில் எதிர்நோக்கப்படும் புதிய பிரச்சினைகள் என்ற தலைப்பில் அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; பிரிடோ நிறுவனத்தால் சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு அறிவூட்டல் நிகழ்வுகளின் போது வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியில் பேசுவது தங்களின் கல்விக்கு பெரிதும் தடையாக இருப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகள் வந்தால் சில ஆசிரியர்கள் அத்துடன் பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவதாக குறைகூறும் மாணவர்கள் இதனால் கல்வி பெறுவதற்கானதமது உரிமை மறுக்கப்படுவதாக் கூறிவருகிறார்கள். இந்த பின்னணியில் அண்மையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனும் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிப் பாவனை மாணவர்களின்கல்வியை பாதிப்பதால் வகுப்பு நேரத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையை தடை செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்தத் தீர்மானத்துக்குப் பிரிடோ நிறுவனம் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் இத்தடையை உடனடியாக உத்தியோகபூர்வமாக அமுல்நடத்துமாறு அமைச்சரிடம் கோரவிருக்கிறது.
கையடக்கத் தொலைபேசிகள் இன்று தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால், பாட நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதோ அல்லது அவற்றிற்கு பதில் சொல்வதோ ஆசிரியரின் கருத்தூன்றிக் கற்பிக்கும் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாணவரின் கவனத்தையும் திசை திருப்புகிறது. பல்லாண்டுகளாக பின்னடைவுக்குள்ளாகியிருந்த மலையக கல்வி பலசிரமங்களுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேற முயற்சிக்கும் அதேவேளையில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப்பிரிவில் கல்வி வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்களும் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில் ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசிப்பாவனை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.
பொதுவாக ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைக்களங்கள் என்பன நடைபெறும் போது கூட அவை முடிவடையும் வரை கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் பங்குபற்றுவோரிடம் கோருகிறார்கள். பல அரசு காரியாலயங்களுக்கு உள் நுழையும் போதும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அந்த கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதாரண கூட்டங்களின் போது கூட இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது மாணவரும் ஆசிரியரும் ஒருமித்த கவனத்தோடு ஈடுபட வேண்டிய குறுகிய நேர பாடவேளையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கூடாது என்ற கோரிக்கையை எவரும் அநீதியானது என கூற முடியாது.
ஆசிரியர் தங்கள் பாட வேளைக்குப் பின்னர் அல்லது இடைவேளைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் கூட பாட வேளைக்குப்பின்னர் அவற்றிற்குப்பதில் அளிக்கக் கூடிய வசதியிருப்பதால் எதுவித பாதகமும் ஏற்பட வழியில்லை. இது விடயத்தில் ஆசிரியர்களே சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் வைத்திருக்க முன்வருவதே சிறந்தது. ஆசிரியர் இதை செய்யாத போது மாணவர்கள் அது தொடர்பாக அதிபருக்கோ அல்லது அதிகாரிக்கோ முறைப்பாடு செய்யும் நிலை ஏற்படும். இதேவேளையில் பாடநேரத்தில் ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பது ஒரு சமூக விரோதச்செயலாக கருதும் மனப்பாங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
எனினும், இது விடயத்தில் வெறும் நல்லெண்ணத்தால் மட்டும் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாததால் மலையக சமூகத்தின் கல்விஅபிவிருத்தி நலன்கருதி வகுப்பு நேரத்தில் கையடக்க தொலைபேசிப் பாவனைக்கு உத்தியோகபூர்வ தடையை உடனடியாக கொண்டு வருமாறு பிரிடோ நிறுவனம் கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறது. இது பின்தங்கிய சமூகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு விடுக்கப்படும் இந்த வேண்டுகோளை ஆசிரியர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.