01

01

முகாம்களிலுள்ளோரை 6 மாதங்களுக்குள் மீளக்குடியமர்த்த இலங்கை அரசு இணக்கம்- பாராளுமன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

முகாம்களில் இருக்கும் தமிழர்கள் 6 மாதங்களுக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு குறித்து இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: “இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு 500 கோடி ரூபா வழங்குவதாக இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது. இன்னும் என்னென்ன உதவி தேவைப்பட்டாலும் அளிப்பதாக சமீபத்தில் எகிப்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்

இலங்கை பாகிஸ்தான் இன்று 2 வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம்.

cricket1.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

இலங்கைப் பத்திரிகைகளுக்கு தற்போது புதிய சவால்

இலங்கை யுத்தம் முடிவிற்கு வந்து 2 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் யுத்த சம்பந்தமான செய்திகளை அதிகளவில் பிரசுரித்து வந்த இலங்கைப் பத்திரிகைகள் எதனைத் தற்போது செய்தியாக வெளியிடுவதென்ற புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளன.

யுத்தச் செய்திகள் மறைந்துள்ள நிலையில் வாசகர்களை எவ்வாறு கவர்வது என்பது தொடர்பாகவும் புதிய செய்திகளை எவ்வாறு பிரசுரிப்பது என்பது குறித்தும் பத்திரிகைகள் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றன. 25 வருடங்களாக மோதல் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வந்த இப்பத்திரிகைகள் இப்போது புதிய செய்திகளைக் கொடுப்பது தொடர்பாக திண்டாடுவதாக யூ.ஏ.ஈ.செய்திச்சேவையின் வெளிநாட்டு நிருபர் பைசல் சமத் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆங்கிலமொழி பத்திரிகைகளிலும் பார்க்க சிங்கள தமிழ் பத்திரிகைகளே இந்த விடயத்தில் அதிகளவிற்கு திண்டாடுகின்றன. பத்திரிகையாளர்கள் பாரிய சவாலை இது தொடர்பாக எதிர்நோக்குவதாக சிங்களப் பத்திரிகையான ராவயவின் ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்திருக்கிறார். விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பன இப்போது யுத்தத்தில் இருந்து இதர விடயங்களுக்கு மாறியிருப்பதாகவும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு, கல்வி, அகதிகள், இன அரசியல், போக்குவரத்து, பாராளுமன்றம், தேர்தல் முறைமைகள், நீதித்துறை போன்ற விடயங்களுக்கு செய்திகள் இப்போது கவனம் செலுத்துவதில் மாற்றம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு? எச்சரிக்கிறார் தலைமை நீதிபதி இப்திகார்

musharap.jpg‘பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப், நாடாளுமன்றில் ராஜதுரோகக் குற்றம் சாட்டப்படுவார்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 99ம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்து ஜனாதிபதியானவர் முஷாரப். தலைமை நீதிபதி இப்திகார் அலி சவுத்ரி உள்ளிட்ட 60க்கும் அதிகமான நீதிபதிகளை பணிநீக்கம் செய்து 2007ம் ஆண்டு அவசர நிலை பிறப்பித்தார்.

முன்னாள் பிரதமர்கள் பெனசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீப்பும் இணைந்து பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்ததன் விளைவாக, முஷாரப் ஆதரவு கட்சிகள் தோல்வியைத் தழுவின. பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக முஷாரப் பதவி விலகினார். முஷாரப் ஆட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு பழி வாங்கப்பட்ட இப்திகார் அலிசவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் அவசர நிலையை கொண்டு வந்ததை எதிர்த்தும் நீதிபதிகளை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹமீத் கான் சார் பில் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் மனுசெய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முஷாரப்பிற்கு இந்த நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டிருந்தது. முஷாரப் தற்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் யாரும் நீதிமன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி இப்திகார் அலிசவுத்ரி கூறியதாவது:

அவசர காலத்துக்கு பிறகு முஷாரப்பால் உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தங்கள் அனைத்தையும் பார்லிமென்ட் ரத்துச் செய்யும் நிலை ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள முஷாரப், நாடாளுமன்றில் ‘தேசத்துரோகி’ என குற்றம் சாட்டப்படும் நிலை ஏற்படும். இந்த வழக்கில் நீதிமன்றம் யாருக்கும் தண்டனை கொடுக்க முடியாது. அவசர நிலையை பிறப்பித்து முஷாரப் எடுத்த 41 நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது. முஷாரப்பால் அமுல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய ஒன்றரை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு இப்திகார் அலிசவுத்ரி கூறினார்.

ஆனால், அதே சமயம் ராஜதுரோகக் குற்றச் சாட்டை அமுல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே கூட்டணி அரசில் சிக்கல், தலிபான் தொந்தரவு ஆகியவைகளால் சிரமப்படும் சூழ்நிலையில் இது தேவையற்றது என்று கூறினார். அதே சமயம், லண்டனில் இருந்து கொண்டு சம்மன் அனுப்பியும் வராமல் இருக்கும் முஷாரப் மீது ஏன் இலண்டனிலே வழக்கு தொடரக்கூடாது என்ற கருத்தும் பேசப்படுகிறது. மேல் நீதிமன்றில் ஆஜராகாமல் தவிர்க்கும் முஷாரப் மீது மேல்நீதிமன்றம் ராஜதுரோகக் குற்றம் சாட்டுமோ என முஷாரப்பின் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தீர்ப்பின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும் என்பதால், அவர் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.