August

August

அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு கசப்பான அனுபவம்!

shahrukh_khan1.pngஅமெரிக் காவின் நியூயார்க் விமான நிலையத்தில் தன்னிடம் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான். சிகாகோவில் இந்திய சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுள்ள ஷாருக்கானிடம்,  விமான நிலையத்தில் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பிடிஐ செய்தியாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் ஷாருக்கான் மேற்கண்டவாறு கூறினார்.

தங்களிடம் நடத்தப்பட்ட சோதனைக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டதற்கு, அதெல்லாம் தேவையில்லை என்றார் அவர். விமான நிலையத்தில் என்னிடம் நடத்தப்பட்ட சோதனை வழக்கமான நடவடிக்கை என்றால் அதில் ஒன்றும் தவறில்லை. அதை பின்பற்றுவது அவசியமான ஒன்று என்றும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  ஷாருக்கானின் பெயரில் “கான்’ என்பது முஸ்லிம் பெயர் என்பதால் அமெரிக்காவில் அந்த பெயர் பொதுவான சோதனை பட்டியலில் உள்ளது. இதனால்தான் அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தெளிவுபடுத்தும் வகையில் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விமான பயணிகளுடன் அவர்கள் கொண்டுவரும் பொருள்களையும் சோதனை நடத்துவது வழக்கம். ஷாருக்கான் விமானத்தைவிட்டு இறங்கி சோதனை செய்யும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடமைகள் அடங்கிய பை சற்றுத் தாமதமாகக் கொண்டுவரப்பட்டது. இதனால் அவர் காத்திருக்க வைக்கப்பட்டார். மற்றபடி அவரிடம் நீண்டநேரம் சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும் அமெரிக்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் விமான நிலையத்தில் சனிக்கிழமை ஷாருக்கானிடம் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடந்ததாகவும்,  பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் தலையீட்டின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை ஷாருக்கானும் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். அந்தப் பேட்டியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கோபமாகவும் அவர் பேட்டியளித்திருந்தார்.

இலங்கையின் சுகாதார மேம்பாட்டுக்கு உலக வங்கி இலகுக் கடன்

world_bank0000.jpgஇலங் கையின் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கென 2760 மில்லியன் ரூபாவை மேலதிக இலகு கடனாக வழங்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் நிதி அமைச்சின் செயலாளர் சுமித் ஜயசிங்கவும்,  உலக வங்கியின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி நம்பகோ இஷினியும் கடந்த வெள்ளியன்று கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிதியில் 1380 மில்லியன் ரூபா வடக்கு,  கிழக்கு அரசாங்க சுகாதார சேவையை மேம்படுத்தவும்,  இதர 1380மில்லியன் ரூபா ஏனைய மாகாணங்களின் சுகாதார சேவையையும் மேம்படுத்தவும் செலவிடப்படவிருக்கின்றது.  இதேவேளை, உலக வங்கி 2004 ஆம் ஆண்டில் இந்நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 5760 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியது.

இந்நிதி மாகாண மற்றும் மாவட்ட மட்ட சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தவென வழங்கப்பட்டது. இருப்பினும் இந்நிதியின் ஒருபகுதி சுனாமி நிவாரண நடவடிக்கைகளுக்கும் பறவைக்காய்ச்சல் தவிர்ப்பு செயற்பாடுகளுக்குமென செலவிடப்பட்டன.

இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையிலேயே இந்த மேலதிக தொகையை இலகு கடனாக வழங்க உலக வங்கி முன்வந்திருக்கிறது. நாட்டின் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலான இந்த வேலைத் திட்டங்களை 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி பூர்த்தி செய்யத் திட்;டமிடப்பட்டிருக்கிறது.
 

இந்திய பயணத்தை தவிர்க்குமாறு சுகாதரா அமைச்சு கோரிக்கை!

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் இலங்கையர்கள் மும்பாய் மற்றும் புனெய் பிரதேசங்களுக்குச் செல்லவேண்டாமென இலங்கை சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பன்றிக் காய்சல் தொற்று பரவாமல் தடுத்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 சதவீதத்தினர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்தவர்களாவர். ஏனையோர் நோயாளிகளுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தப் பன்றிக் காய்ச்சல் பற்றிய விபரங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் 011 2695112,  011 2681548,  011 4740490-1 என்ற தொலைபேசி இலங்கங்களின் மூலம் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தவிர 011 2411284 என்ற இலக்கத்துடன் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரி அதிகாரிகளை 24 மணி நேரத்திலும் தொடர்பு கொண்டு இந்நோய் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கௌ;ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானிலும் தாய்வானிலும் இன்று பயங்கர நிலநடுக்கம்

ஜப்பானிலும் தாய்வானிலும் இன்று திங்கட்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோளில் 6.8 ஆக பதியப்பட்டுள்ளது.

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள இசிகாதி தீவு அருகிலும், தாய்வானின் கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி காலை 9.11 மணிக்கு பூமியின் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் சேதங்கள் ஏற்படவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்

flood1111.jpgநாட்டின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்துவருவதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம் அதிகரித்துவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவித்துள்ளது. களுகங்கையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:00 மணிக்கு 3 அடிகள் அதிகரித்த நீர் மட்டம் இரவு 11:00 மணிக்கு 18 அடிகள் அதிகரித்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குகுலே கங்கை தேக்கத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில் தாழ்ந்த நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

100 மீ., ஓட்டம்- 9.58 வினாடிகளில் உசைன் போல்ட் சாதனை

17-husain-bolt222.jpg100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய சாதனை முறியடித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் நடந்த ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் மின்னல் வீரர் என்று தடகள ரசிகர்களால் அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட், அவரது போட்டியாளர்களாக கருதப்படும் ஜமைக்காவின் அசெபா பாவெல், அமெரிக்காவின் டைசன் கே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் 9.69 வினாடிகளில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்ற போல்ட் நேற்றும் அசத்தினார். அவர் 9.58 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தனது உலக சாதனையை தானே முறியடித்தார்.

டைசன் கே (9.71 வினாடி) வெள்ளியும், அசெபா பாவெல் (9.84 வினாடி) வெண்கலமும் கைப்பற்றினர்.

194 ஓட்டங்கள்: உலக சாதனையை சமம் செய்த ஜிம்பாப்வே வீரர்

17-charles-coventry222.jpgபங்களா தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் உலக சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் பங்களாதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று புலவாயோ நகரில் நடந்தது.

இதில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. ஆரம்ப வீரர் வெர்மூலன் 5 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது வீரராக சார்லஸ் கவன்ட்ரி வந்தார். அதிரடியாக துடுப்பாட்டம் செய்த இவர் வரிசையாக சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். இவருக்கு மட்சிகின்யெரி (37 ) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.

மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும்படி துடுப்பெடுத்து ஆடவில்லை. என்றாலும் கவன்ட்ரி தொடர்ந்து துடுப்பெடுத்தாடி  7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 156 பந்தில் 194 ஒட்டங்கள் எடுத்து,  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்தார்.

இதையடுத்து ஜிம்பாப்வே 50 ஓவரி்ல் 8 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் எடுத்தது.

கடின இலக்கை நோக்கி துடுப்பாட்டம்  செய்த பங்களாதேச அணிக்கு தமிம் இக்பால் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இவர் 154 ஒட்டங்கள்  எடுத்து அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார். சித்திக் 38, ஹசன் 35, மகமூத்துல்லாஹ் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.

பங்களாதேசம் 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பங்களாதேசம் 3-1 என தொடரை கைப்பற்றியது.

கிளிநொச்சி, ஒட்டுச்சுட்டான், முல்லை வரையான நூறு கி.மீ. தூரத்துக்கு மின்சார விநியோகம்

electricity.jpgமாங் குளத்திலிருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஓட்டுசுட்டான் வரை யான 100 கிலோ மீட்டர் தூர பிரதேசத்துக்கு தேசிய மின்சார கட்டமைப்பினூடாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது.

இதற்காக 300 மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் – கிளிநொச்சி, மாங்குளம் – முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் – ஓட்டு சுட்டானுக்கிடையில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.  இந்தப் பணிகள் 2 மாதத்தினுள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

வடக்கிலுள்ள சகல கிராமங்களுக்கும் 2 வருடங்களுக்குள் மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – கிளிநொச்சி ஊடாக சுன்னாகம் வரை 132 கிலோ வோர்ட் மின் விநியோகத் திட்ட மொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் ஜெய்கா நிறுவனம் நிதி உதவி வழங்கியுள்ளது.

வவுனியாவிலிருந்து ஓமந்தையூடாக மாங் குளம் வரை 3 மின்மாற்றி கோபுரங்கள் அமைக்கவும் மாங்குளத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பு வழங்கவும் மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியது.

இதேவேளை வீதி விளக்குகள் அமைக்கவும் சேதமடைந்த மின் கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் அறிவிக்கப்படுகிறது.

வடக்கின் 3 மாவட்டங்களில் 280 மீன் விற்பனை நிலையம் – திட்டத்தை செயல்படுத்த ரூ. 30 மில். ஒதுக்கீடு

fisherman.jpgவடக்கின் மூன்று மாவட்டங்களில் புதிதாக 280 மீன் விற்பனை நிலையங்களை அமைக்க மீன்பிடித் துறை மற்றும் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தை செயல்முறைப்படுத்துவதற்காக அமைச்சு 30 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக அமைச்சின் செயலாளர் ஜி. பியசேன தெரிவித்தார்.

யாப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இம்மீன் விற்பனை நிலையங்களை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மீன்பிடி ‘சீசன்’ ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வட மாகாண மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் இம் மீன் விற்பனை நிலையங்களை அமைக்குமாறு மீன்பிடித் துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா வழங்கிய பணிப்புரைக்கமையவே இச்செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் வட மாகாணத்தில் உள்ள மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்துக்கான மீன்பிடி உதவிப் பணிப்பாளர்களின் வழிகாட்டலுடன் இம்மீன் விற்பனை நிலையங்களை அமைத்து வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ள மக்களனைவரும் மீளக்கூடியமர்த்தப்பட்ட பின்னரும் இம்மீன் விற்பனை நிலையங்கள் நிரந்தரமாக செயற்படுமென தெரிவித்த அமைச்சின் செயலாளர், இவ்விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சு பின்னர் நடவடிக்கை எடுக்குமெனவும் கூறினார்.

இதேவேளை வடக்கில் பிடிக்கப்படும் மீன்களில் அம்மாகாணத்தின் நுகர்வுத் தேவை போக எஞ்சியவை கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படு மெனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

குளவி கொட்டி 70 உல்லாசப் பயணிகள் காயம்

000images.jpgசீகிரிய குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பிரயாணிகளை குளவிகள் கொட்டியதில் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (15) நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்த சுமார் 34 பேர் தொடர்ந்து சிகிரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சிகிரிய குன்றின் மேல் இருந்த பார்வையாளர்களை திடீரென குளவி கொட்டியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு தரப்பிற்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி விமானப் படையினர் ஸ்தலத்துக்கு விரைந்து காயமடைந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் சிகிரியாவுக்கு வந்த பார்வையாளர்களை குளவி கொட்டியமை குறிப்பிடத்தக்கது.