August

August

செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது

vote000.jpgஆப்கா னிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை செப்டம்பர் மாதம் 03ம் திகதிக்குப் முன்னர் எதிர்பார்க்க முடியாதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயியும் மற்றொரு வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் அறிவித்துள்ளதால் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

முதல் சுற்றில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக இவ்விருவரும் உரிமைகோரியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் திணைக்களம் இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டியுள்ளதாக அறிவித்துள்ளது முதலாம் சுற்றில் இருவரும் சம அளவான வாக்குகளைப் பெற்றால் அல்லது வெற்றி தெளிவில்லாமல் இருந்தால் மாத்திரமே இரண்டாம் சுற்று எண்ணப்பட வேண்டும்.

தேர்தல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் இவ்விரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும். இதை வைத்து வெற்றி தங்களுக்கேயென இரண்டு வேட்பாளர்களும் உரிமை கோருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்யோக பூர்வ முடிவுகள் வரும் வரை வெற்றிச் செய்திகளை பொது மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டாமென இரு வேட்பாளர்களையும் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கமான நேச நாடுகள் கேட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் (ஜனாதிபதி மாகாண சபை) வன்முறைமிக்கதென்றும் மோசடியானதென்றும் தெரிவித்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்திலுள்ள அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் இது. தலிபானிகளின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியிலும் மக்கள் வாக்களித்துள்ளமை ஆப்கான் வரலாற்றின் முக்கிய மைல்கல் என அவதானிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகளால் பெரும் வன்முறைகள் எழவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

அகதிகளுக்கு உதவியளிக்க மலேசியாவில் நிதிதிரட்டும் நடவடிக்கையில் கோபியோ

IDP_Camp_Aug09யுத்தத் தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள இலங்கை மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வுக்கு சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரனை அனுப்பியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக கோபியோ (GOPIO) அமைப்பு தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அண்மைக் காலமாக இலங்கையில் யுத்த அகதிகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு அமைச்சர் பெ.சந்திரசேகரனை மலேசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வு அண்மையில் மலேசியா, பெட்டாலிங் ஜாயாவிலுள்ள பிளான்டேசன் இல்லத்தில் இடம்பெற்றது.

யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி உலகெங்கும் வாழும் மனிதநேயம் கொண்ட மக்களின் உணர்வுகளுடன் மலேசியா வாழ் மக்களின் மனிதநேயம் சங்கமித்ததன் காரணமாக வெற்றிபெற்றுள்ளது. கோபியோ, மலேசியாவில் வதியும் இந்திய தமிழ் வம்சாவளியினர், இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மற்றும் மனிதநேயம் மிக்க மலேசியர்கள் ஆகியோர்கள் தமது கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட போது மனிதநேயம் மிக்க மலேசியர்களின் பாரிய பங்களிப்பு காரணமாக இந்நிதி வெற்றிகரமாகத் திரட்டப்பட்டது.

இந்த விருந்துபசாரத்தில் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் சிறப்பு விருந்தினராக பிரசன்னமாகியிருந்ததோடு மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி திருமதி டபிள்யூ.எல்.பெரேரா விசேட விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சுமார் 450 பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன் முதற்கட்டத்தின் போது ஒரு இலட்சத்து இருபதாயிரம் மலேசிய றிங்கிற் திரட்டியுள்ளதுடன் இரண்டாம் கட்டத்தில் இரண்டு இலட்சம் ரூபாவைத் திரட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். நிதி சேர்ப்பதன் நோக்கம் இராப்போசன வைபவத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்பார்ப்பது என்னவெனில் முரண்பாடுகள் நிமித்தம் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்த வேண்டுமென்பதாகும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேலே குறிப்பிட்ட முயற்சி மூலம் எங்களது முழு ஆதரவையும் நாங்கள் நல்குவதுடன் இவ்வரிய சந்தர்ப்பத்தை பாவித்து நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கானதோர் நீண்டகால நட்புறவை ஏற்படுத்த விரும்புகின்றோம்.

ஒழுங்கமைக்கப்பட்ட குழுவானது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு முதலீடுகள் மற்றும் பரஸ்பரம் செயற்பாடாக்கக் கூடியதான பொருளாதாரக் கருத்திட்டங்களை இனங்காண்பதற்கான விஜயமொன்றை இலங்கைக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு மேற்கொள்வதென்பதானது மலேசியாவின் முதலீட்டாளர்களின் கோரிக்கைக்கு “கோபியோ’ இணங்குகின்றது. புதிய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு அவர்களின் பரந்த முயற்சியாண்மை உதவியளிக்குமென நம்புகின்றோம்.

இரு நாடுகளுக்குமிடையே புதிய சமூக மற்றும் நல்லுறவுப் பாலத்தை அமைச்சரின் பிரசன்னம் கட்டியெழுப்பியதோடு கோபியோ (GOPIO) மற்றும் பி.ஐ.ஒ. (PIO) ஆகிய அமைப்புகள் வருகைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகள் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு சினேகபூர்வ உறவுகளை மேலும் வலுவூட்டுமென நாம் திடமாக நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கத்திக்குத்துக்கு உள்ளானார்!

Sivarajah_N_Drயாழ்ப் பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரும் உலக சுகாதார நிறுவனத்தின் வடக்கு இணைப்பாளருமான என். சிவராஜா இன்று பல்கலைக்கழகத்தில் வைத்து கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் தவறிய மாணவர் ஒருவரே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில் தப்பியோடிய மாணவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கு உள்ளான விரிவுரையாளர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

டொக்டர் சிவராஜா நூலகவியலாளர் என் செல்வராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்

lttelogoதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்குச் சொந்தமான, குறித்த கப்பல்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிட்டியுள்ளன.குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணகளின் போது இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக திவயின செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சில கப்பல்கள் இன்னமும் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பல்கள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

கச்சதீவில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

கச்சத் தீவில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்ட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேரை இராமேஸ்வரம் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இராமேஸ்வரத்துக்கு அருகேயுள்ள கச்சதீவில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் விதத்தில் சீனாவின் உதவியுடன் கண்காணிப்புக் கோபுரம் அமைப்பதைத் தடுத்துநிறுத்தவும், இழந்த உரிமையை மீட்கும் பொருட்டும் கச்சதீவில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட இந்து மக்கள் கட்சியினர் தீர்மானித்திருந்தனர்.

அதன்படி இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் அண்ணாதுரை தலைமையில், தென் மண்டல பொதுச்செயலர் குமரசேன், மாநில தொழிற்சங்கச் செயலர் திருப்பதி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், விநாயகர் சிலையுடன் நேற்று இராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு வந்தனர். இக் குழுவை இராமேஸ்வரம் டி.எஸ்.பி. கமலாபாய் தலைமையிலான பொலிஸார் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர்.

பன்றி காய்ச்சல் பலி- இந்தியாவில் 70 ஆக உயர்வு

10092009.jpgஇந்தியா வில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு பெங்களூரில் ஒரு பெண் பலியானதை அடுத்து கர்நாடகாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை கவலை அடைந்துள்ளது.
 

தேசம்நெற் – சிந்தனைவட்டம் நூல்விநியோகத் திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் பரீட்சையில் தோற்றினர்

sri-lankan-students.jpgலண்டனில் தேசம்நெற் இலங்கையில் சிந்தனைவட்டம் இணைந்து மேற்கொண்ட கல்வி முயற்சியில் பயன்பெற்ற 4800க்கும் அதிகமான மாணவர்கள் நேற்று ஓகஸ்ட் 23ல் நடைபெற்ற புலமைப் பரிசுப் பரீட்சையில் தோற்றினர்.

நாடு முழுவதும் 70 000 மாணவர்கள் தோற்றும் பரீட்சையில் வவுனியா மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரத்து 831 மாணவர்கள் தோற்றினார்கள் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்தார். 42 பரீட்சை நிலையங்கள் நிவாரண கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 5731 மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். ஏனைய பாடசாலை மாணவர்கள் 2100 பேர் 27 பரீட்சை நிலையங்களில் தோற்றினார்கள்.

சுமார் 300 பரீட்சை மேற்பார்வையாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் பரீட்சைக்கு பொறுப்பான பிரதேச ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்தார். மாணவர்களுக்குத் தேவையான பாட உபகரணங்களை சில அமைப்பினர் வழங்கினார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சை நேற்று ஓகஸ்ட் 23 ஞாயிறு காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணிக்கு முடிவடைந்தது. பொலிஸார் பரீட்சை மண்டபங்களுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பரீட்சைக்கு முந்திய தினங்களில் ஏற்பட்ட மழையும் அதனால் பலர் தங்கள் வதிவிடங்களை மாற்ற வேண்டி இருந்ததும் மாணவர்களின் கல்வி முயற்சியைப் பாதித்து இருந்தது. மேலும் தொடர்ச்சியாக முகாம்களில் காணப்படுகின்ற அவலங்களும் அசௌகரியங்களும் எவ்வகையிலும் மாணவர்களின் கல்வி முயற்சிக்கு உதவவில்லை.

முகாம்களில் தடுத்தவைக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் கல்வி முயற்சிக்காக தேசம்நெற் உம் சிந்தனை வட்டமும் 15000 பவுண் செலவில் நூல் விநியோகத்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இத்திட்டத்திற்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் அமைப்பு லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் மற்றும் சில தனிநபர்கள் உதவிகளை வழங்கி இருந்தனர். இவை பற்றிய முழுமையா கணக்கு விபரம் விரைவில் வெளியிடப்படும்.

வன்னியில் கைது செய்யப்பட்ட நான்கு மருத்துவர்கள் பிணையில் விடுதலை

court222.jpgதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட வன்னியில் பணியாற்றிய வைத்திய மருத்துவ தரப்பினர் நால்வர், இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி பி சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

வடபகுதி கடலில் மீன்பிடிக்க மாலை 6 மணிக்கு முன் சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்பே கரை திரும்ப முடியும்

வடபகுதிக் கடலில் மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன் கடலுக்கு சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்பே கரைக்குத் திரும்ப வேண்டுமென்று தெரிவித்துள்ள வடபிராந்தியக் கடற்படைத் தளபதி இரவு நேரங்களில் எவரும் கடலுக்கு செல்வதற்கோ அல்லது திரும்பி வருவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்களென்றும் தெரிவித்துள்ளார்.

வட கடலில் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைகளை வடபிராந்திய கடற்படைத் தளபதி யாழ்.அரச அதிபருக்கு அறிவித்திருக்கின்றார். இந்த நிபந்தனைகளை கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்திய யாழ்.அரச அதிபர் அவற்றைத் தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக யாழ். அரச அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடகடல் பகுதியில் மீன்பிடித்தல் சம்பந்தமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து வடபிராந்தியக் கடற்படைத் தளபதி அறிவித்திருக்கின்றார். இப் பிரதேசத்தில் கீழ்வரும் நடைமுறைகளுக்கு அமைவாகவே பகலிலும் இரவிலும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும். கடலுக்குச் செல்லும் இடம், திரும்பி வரும் இடம் என்பன ஏற்கனவே கடற்படையினராலும் இராணுவத்தினராலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.அந்தந்த இடங்களிலிருந்து மாத்திரமே கடலுக்குள் செல்லவோ வெளியே வரவோ முடியும்.

மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன்பாகச் சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்னரே தாங்கள் புறப்பட்டுச் சென்ற அதே இடத்திற்குத் திரும்பி வர வேண்டும். இரவு நேரங்களில் மீன்பிடிக்கச் செல்வதற்கோ கடலிலிருந்து திரும்பி வருவதற்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது.

பகலில் மாத்திரம் மீன்பிடிக்கச் செல்வோர் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டுச் சென்று இரவு 7 மணிக்கு முன்பாக கரைக்குத் திரும்பிவிட வேண்டும். சகல மீன்பிடிக் கலங்களும் இரவில் வெளிச்சத்துடன் தரித்து நிற்க வேண்டும். வழமையான மரக் கலங்களில் வெளிச்சக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளை மீன்பிடி நீரியல்வளத்துறை அமைச்சு செய்து கொடுக்க வேண்டும்.

வெளியிணைப்பு இயந்திரமாக 15 வரையான குதிரை வலுவுடைய இயந்திரங்கள் மாத்திரமே பாவிக்க முடியும். அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் கடற்றொழில் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது விமான ஓடுபாதை, விமான இறங்கு பாதை உள்ள அணுகும் பிரதேசங்கள் (Air Corridor) போன்றன உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பிரதேசங்களில் உள்ள கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்குரிய எல்லைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இரு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட விடயம் உரிய சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் – மனோகணேசன் எம்.பி.

girl2222.gifமஸ்கெ லியாவைச் சேர்ந்த இரு சிறுமிகள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையை சேர்ந்த எம்.எம்.பஷால், யூ.எல்.பௌசிக் என்பவர்களின் வீட்டு வேலையாட்களாக பணியாற்றிய வேளயில் கடந்த சனிக்கிழமை இந்த வீடுகளை அடுத்த கழிவு நீர் கால்வாயில் இரு சிறுமிகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் வழக்கு விசாரணையை அடுத்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. கூறியதாவது; சட்டவல்லுனர்கள் மூலம் இது தொடர்பிலான நியாயமான தீர்பை நாம் நீதிமன்றத்தின் மூலம் பெற்றக்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.

இதன் காரணமாக கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட இச்சிறுமிகளின் பெற்றோர்களிடமிருந்து மனித உரிமை இல்லத்தை சார்ந்த வழக்கறிஞர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர். இத்தகவல்கள் வழக்கின் மேல் விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்படும். சிறுமிகளின் மரணம் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க இயலாது.

ஆனால், மரணங்களுக்கு அப்பால், குறைந்த வயது கொண்ட சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படக்கூடாது என்ற சட்டம் மீறப்பட்டுள்ளது. மரணமடைந்த சுமதி என்ற சிறுமியின் பிறந்த திகதி 22.09.1994 ஆகும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்க்கப்பட்டபொழுது அவரது வயது 14 ஆகும். ஜீவராணி என்ற சிறுமியின் பிறந்த திகதி 27.12.1995 ஆகும். இவ்வருடம் வேலைக்கு சேர்க்கப்பட்டப்பொழுது அவரது வயது 13 ஆகும். இங்கே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாத வயதெல்லை தொடர்பிலான சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது குற்றம் சாற்றவில்லை.

குழந்தைகளின் வயது தமது விசாரணையின்போது வெளியாகவில்லையென கறுவாத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கபில பிரேமதாஸ என்னிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவ்வார ஆரம்பத்தில் ஊடகங்களில் வெளியான மரணமடைந்த சிறுமிகளின் வயது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்த தகவல்கள் தவறானவை என ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

எனவே எனது பணிப்புரையின் பேரில் தற்சமயம் பெற்றோர்களிடமிருந்து வாக்கு மூலங்களை தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஜகத் வெள்ளவத்த பெற்றுக் கொண்டுள்ளார். எனவே சட்டத்தை மீறியவர்கள் தொடர்பிலே இந்த ஆணையம் சட்ட நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது.