யுத்தத் தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள இலங்கை மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வுக்கு சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் பெ.சந்திரசேகரனை அனுப்பியதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாக கோபியோ (GOPIO) அமைப்பு தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
அண்மைக் காலமாக இலங்கையில் யுத்த அகதிகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி திரட்டுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு அமைச்சர் பெ.சந்திரசேகரனை மலேசியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வு அண்மையில் மலேசியா, பெட்டாலிங் ஜாயாவிலுள்ள பிளான்டேசன் இல்லத்தில் இடம்பெற்றது.
யுத்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி உலகெங்கும் வாழும் மனிதநேயம் கொண்ட மக்களின் உணர்வுகளுடன் மலேசியா வாழ் மக்களின் மனிதநேயம் சங்கமித்ததன் காரணமாக வெற்றிபெற்றுள்ளது. கோபியோ, மலேசியாவில் வதியும் இந்திய தமிழ் வம்சாவளியினர், இலங்கைத் தமிழ் வம்சாவளியினர் மற்றும் மனிதநேயம் மிக்க மலேசியர்கள் ஆகியோர்கள் தமது கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட போது மனிதநேயம் மிக்க மலேசியர்களின் பாரிய பங்களிப்பு காரணமாக இந்நிதி வெற்றிகரமாகத் திரட்டப்பட்டது.
இந்த விருந்துபசாரத்தில் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சர் சிறப்பு விருந்தினராக பிரசன்னமாகியிருந்ததோடு மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி திருமதி டபிள்யூ.எல்.பெரேரா விசேட விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சுமார் 450 பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதன் முதற்கட்டத்தின் போது ஒரு இலட்சத்து இருபதாயிரம் மலேசிய றிங்கிற் திரட்டியுள்ளதுடன் இரண்டாம் கட்டத்தில் இரண்டு இலட்சம் ரூபாவைத் திரட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். நிதி சேர்ப்பதன் நோக்கம் இராப்போசன வைபவத்தின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்பார்ப்பது என்னவெனில் முரண்பாடுகள் நிமித்தம் அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்த வேண்டுமென்பதாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேலே குறிப்பிட்ட முயற்சி மூலம் எங்களது முழு ஆதரவையும் நாங்கள் நல்குவதுடன் இவ்வரிய சந்தர்ப்பத்தை பாவித்து நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கானதோர் நீண்டகால நட்புறவை ஏற்படுத்த விரும்புகின்றோம்.
ஒழுங்கமைக்கப்பட்ட குழுவானது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு முதலீடுகள் மற்றும் பரஸ்பரம் செயற்பாடாக்கக் கூடியதான பொருளாதாரக் கருத்திட்டங்களை இனங்காண்பதற்கான விஜயமொன்றை இலங்கைக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு மேற்கொள்வதென்பதானது மலேசியாவின் முதலீட்டாளர்களின் கோரிக்கைக்கு “கோபியோ’ இணங்குகின்றது. புதிய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு அவர்களின் பரந்த முயற்சியாண்மை உதவியளிக்குமென நம்புகின்றோம்.
இரு நாடுகளுக்குமிடையே புதிய சமூக மற்றும் நல்லுறவுப் பாலத்தை அமைச்சரின் பிரசன்னம் கட்டியெழுப்பியதோடு கோபியோ (GOPIO) மற்றும் பி.ஐ.ஒ. (PIO) ஆகிய அமைப்புகள் வருகைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன. இவ்வாறான முயற்சிகள் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு சினேகபூர்வ உறவுகளை மேலும் வலுவூட்டுமென நாம் திடமாக நம்புவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.