23

23

ஏ9 பாதை பஸ் சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்

bus.jpgஏ9 வீதியூடாக கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ் சேவையை நடத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஏ9 வீதியூடாக போக்குவரத்து செய்ய பாதுகாப்பு தரப்பினர் அனுமதி கிடைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஏ9 பாதையூடாகச் செல்வதற்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இவர்களுக்கு ஏ9 பாதையூடாகச் செல்ல பாதை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
 

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

kamal.jpgவன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசுரியவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார். அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது அலுவலகத்துக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார். இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரத்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கி வந்தார். இராணுவத்தினர் நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று மேற்கொண்ட கள நடவடிக்கைகளுக்கு இவர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2010 ஜனவரியில் மற்றொரு சூரிய கிரகணம் யாழ், வல்வையில் 10 நிமிடங்கள் பார்க்க முடியும்

sun.jpg2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும் என்று கொழும்பு பல்கலைக்கழ கத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இச்சூரிய கிரகணம் யாழ்ப்பாண நகரிலும் வல்வெட்டித் துறையிலும் முழுமையாகத் தென்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி ஏற்படும் சூரிய கிரகணத்தை இலங்கையின் யாழ்ப்பாண நகரிலும், வல்வெட்டித்துறையிலும் சுமார் பத்து நிமிடங்கள் பார்க்க முடியும். ஏனைய பிரதேசங்களில் அதற்குக் குறைவான நிமிடங்களே பார்க்க கூடிய தாக இருக்கும். ஏனைய பிரதேசங்களில் அதுபகுதியாகவே தென்படும்.

இச்சூரிய கிரகணத்தை யாழ்ப்பாண நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் பார்க்க முடியும். முழுமையான சூரிய கிரகணத்தை இலங்கையர் நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு இதுவேயாகும். இச்சூரிய கிரகணம் மிகவும் ஒளிர்விட்டு மாணிக்கம் போல் பிரகாசிக்கக் கூடியதாக இருக்கும்.

சந்திரனில் கால்பதித்த விண்வெளி வீரர்களுக்கு பராக் ஒபாமா பாராட்டு!

moon.jpgநாற்பது வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் முதன் முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங்,  எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்ததாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இந்த மூன்று விண்வெளி வீரர்களும் புரிந்த சாகஸத்தை ஜனாதிபதி ஒபாமா பாராட்டியுள்ளார். ஆம்ஸ்டே;ராங் நிலவில் கால் பதிக்கும்போது தனக்கு 7 வயது எனக் குறிப்பிட்ட ஒபாமா,  இந்த வரலாற்றுச் சாதனையாளர்கள் மூவரையும் ஒன்றாகச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரனில் மனிதன் கால்பதித்து 40 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலவுக்கும் பின்னர் செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் நாஸாவின் முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் இணங்க வேண்டுமென அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்துறை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கெளரவத்துடன் கடமையை நிறைவேற்ற வழிவகை செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்

ஊடக அடக்குமுறையை நோக்காகக் கொண்டு பத்திரிகை பேரவையை மீண்டும் அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பத்திரிகைப் பேரவையின் ஊடாக பத்திரிகைகளுக்கோ, பத்திரிகை ஆசிரியர்களுக்கோ எதிராக செயற்படுவதும் அரசின் நோக்கமல்ல என்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசாங்கம் பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக, ஊடக அடக்கு முறையை அரங் கேற்ற முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்தார்.

சபாநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார்.

1973 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பத்திரிகைப் பேரவைச் சட்டத்தினூடாக ஊடகவியலாளருக்கு தண்டனை வழங்கவும், சிறைத் தண்டனை வழங்கவும் ஏதுவாக இருக்கிறது என சுட்டிக்காட்டினார். இதனை மீண்டும் கொண்டு வருவதே அரசின் நோக்கமாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பேசும் போது, 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பத்திரிகைப் பேரவை சட்டத்தின் கீழேயே பத்திரிகைப் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த பேரவைக்கு உறுப்பினர்களை நியமி க்காமல் விட்டதனால் பத்திரிகைப் பேரவையை இயங்கவிடாமல் செய்தது. அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. வினர் செயற்பட்டனர்.

ஆனால், தொடர்ந்து வந்த எல்லா அரசுக ளும் பத்திரிகை பேரவையை ஒழிக்க செயற்படவில்லை. பல வருடங்களாக பேரவை செயற்படாமல் இருந்தது. இருப்பினும் சுமார் 20 பேர் பேரவையின் நிரந்தர சேவை யில் இணைக்கப்பட்டிருந்தனர். வருடக் கணக்காக அவர்களுக்கு எந்த கடமைப் பொறுப்புகளும் வழங்கப்படாமல் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. பேரவை செயற்படாமல் இருந்த போதும் 209 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளோம்.

இந்த விடயம் தொடர்பாக கணக்காய்வுகள் நடத்தப்பட்ட போதும் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு மீண்டும் பத்திரிகை பேரவையை இயங்கச் செய்யுமாறு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையிலேயே பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயக்கச் செய்ய முடிவு செய்தது.

பத்திரிகைப் பேரவையை மீண்டும் இயங்கச் செய்வதன் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று ஊடகவியலாளர்களை அடக்குவதற்காக அல்ல என்பதை நான் பொறுப்புடன் கூறுவேன். பேரவையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் ஊடகங்களுக்கு தடைகளை போடுவதும் அல்ல.

பேராசிரியர் சோமரட்ன பாலசூரிய, பேராசிரியர் சுனந்த மகேந்திர, லங்காதீப ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியர் ஆரியநந்த தொம்பகஹவத்த, சட்டத்தரணி பிரசாத் சூரியஆராச்சி, உழைக்கும் பத்திரிகையா ளர் சங்கத்தின் பிரதிநிதி உட்பட இன்னும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். தகவல் திணைக்களத்தின் தலைவரும் பேரவையின் உறுப்பினராக இருப்பார்.

பத்திரிகைப் பேரவையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் தொடர்பாக நோக்கும் போதும் இந்த உறுப்பினர்கள் ஒருவரும் ஊடக அடக்கு முறைக்கு ஆதரவு வழங்குபவர்களாக வும், தொடர்புடையவர்களாகவும் தெரியவில்லை.

ஊடகவியலாளர்களுக்குத் தேவையான பயிற்சிகள், வழிகாட்டல்கள், அவர்களது கடமைகளை நிறைவேற்றக் கூடியவாறு ஒத்துழைப்புகள், வழங்குதல் போன்ற விடயங்களுக்காகவே பத்திரிகைப் பேரவை செயற்படவுள்ளது.

ஊடகவியலாளர்கள் கெளரவத்துடன் தங்களது கடமையை நிறைவேற்றுவதற்கு வழிவகைகளை செய்து கொடுப்பதே அரசின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதும் 18 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் – பாராளுமன்றத்தில் நிமல் சிறிபால

sri-cub.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து 18030 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வருடத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 190 பேர் டெங்கு நோய் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

டெங்கு நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாடு பூராகவுமுள்ள சகல வைத்தியசாலைகளிலும் விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு 23 இரத்தப் பரிசோதனை இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் 4035 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதோடு 16 பேர் மரணமடைந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்நோய் காரணமாக இறந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

தன்னை தூக்கிலிட வேண்டும் என்கிறார் கசாப்

இந்தியாவில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பாகிஸ்தான் ஆயுததாரியான அஜ்மல் கசாப், தான் மரண தண்டனைக்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தன்மீது கருணை காட்டக்கூடாது என்றும், தன்னை தூக்கிலிடவேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணையின் போது, அஜ்மல் கசாப் நீதிபதியிடம் கூறினார்.

தாக்குதல்களில் பங்கெடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தாம் வழிநடத்தப்பட்டவிதம் குறித்த முழுமையான விபரங்களையும் நேற்று வழங்கியுள்ளார்.

மரண தண்டனையை தவிர்ப்பது மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய, பாகிஸ்தானிலுள்ள ஏனைய சூத்திரதாரிகளை பாதுகாப்பதுமான தனது கோரிக்கையை கசாப் கைவிட்டுள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் : ஹிலாரி

hillary_clinton.jpgவீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூகியை விடுதலை செய்யாவிட்டால் ‘ஆசியான்’ அமைப்பிலிருந்து மியான்மர் நாட்டை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். தாய்லாந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மியான்மரில் மனித உரிமைகள் நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஒருவர் சந்தித்துப் பேசியது தொடர்பான விவகாரத்தில் சூகி மீது மியான்மர் இராணுவ அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இது மியான்மரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆசியான் அமைப்பிலிருந்து மியான்மரை வெளியேற்ற வேண்டும் என்று ஹிலாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு 7 பேர் கைது;பெருமளவு கஞ்சாவும் மீட்பு

மரக்கறி பயிர்களை உற்பத்தி செய்யும் இடங்களில் கஞ்சா தோட்டங்களை பயிரிட்ட 7 பேரை கைது செய்ததுடன், பெருந்தொகையான கஞ்சாவையும் சூரியவௌ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பேகமுவ காட்டிலே இக்கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,கஞ்சா பயிரிடுவதற்கென பயன்படுத்தப்பட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியான உபரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலமன்வில,அம்பேகம,பலஹருல காட்டுப்பகுதிகளில் பல இடங்களில் கஞ்சா பயிரிடப்படுவதாகவும் அவற்றை விரைவில் கண்டுபிடித்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சூரிய வௌ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாணக்க சுமண சிறி தெரிவித்தார்.

சொந்த மகள்மீது பாலியல் வல்லுறவு கொண்ட தந்தைக்கு 15 வருட கடூழியச் சிறை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

images000.jpgபதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.  வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில், சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவர் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டார். பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இது தொடர்பான வழக்கு எதிரியான செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாக சிறுமி தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் பாலியல்வல்லுறவு தொடர்பானவை.

குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராதமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்