பதினாறு வயது நிரம்பாத தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக இருந்த இவருக்கு நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில், சட்டமா அதிபரினால் பதினாறு வயதுக்குக் குறைந்த தனது மகள் மீதான பாலியல்வல்லுறவு தொடர்பில் 3 குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி தனது கணவர் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை நேரில் கண்டதாகக் குறிப்பிட்டார். பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து இது தொடர்பான வழக்கு எதிரியான செல்வராஜா சற்குணலிங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. தனது தந்தை பல தடவைகள் தன்மீது பாலியல் குற்றம் புரிந்ததாக சிறுமி தெரிவித்தார். எதிரி மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் பாலியல்வல்லுறவு தொடர்பானவை.
குற்றச் சம்பவம் நடைபெற்றதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வவுனியா வைத்திய அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பின் உட்பகுதியில் உராய்தல் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் பலவந்தமாக அவர் மீது பாலியல் குற்றம் புரியப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தமது வைத்திய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
விசாரணைகளின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் எதிரிக்கு 15 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராதமாக அவர் 10 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டு என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்