பிரித்தானியாவில் காணப்படும் சாதியப் பாகுபாட்டை அடையாளப்படுத்தம் மாநாடு ஒன்று யூலை 15ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Voice of Dalit International (VODI) என்ற அமைப்பும் Catholic Association for Racial Justice (CARJ) என்ற அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டில் ஆபிரிக்க ஆசிய சமூகங்கள் முகம்கொடுக்கும் இனப்பாகுபாடு பற்றியும் பேசப்பட இருக்கின்றது.
ஈலிங் சவுத்தோல் பா உ விரேந்திர சர்மா சிறப்புப் பேச்சாளராக உரையாற்றும் இம்மாநாட்டில் சகல சமயக் குழுக்கள், தேவாலயங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள், பொது அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் என 70 பேர்வரை கலந்துகொள்கின்றனர்.
National Council of Dalit Christians (NCDC) என்ற இந்தியாவில் உள்ள அமைப்பில் இருந்து வி ஜே ஜோர்ச் சர்வதேசப் பேச்சாளராகக் இம்மாநாட்டில் உரைநிகழ்த்த உள்ளார்.
பிரித்தானியாவில் ஆசிய சமூகங்களின் பெருக்கத்துடன் சாதியப்பாகுபாடு சமுகங்களை சாதிய அடிப்படையில் பிளவுபடுத்துவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு இம்மாநாடு பற்றிய தனது அழைப்பிதழில் தெரிவித்து உள்ளது. இச்சாதியப் பாகுபாடு ஒரு பரம்பரையில் இருந்து மற்றைய பரம்பரைக்கு கைமாற்றப்படுவதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.
சாதியப்பாகுபாடு பாதிக்கப்பட்டவர் மீது கீழான முத்திரையைக் குத்துவதாகவும் அவருடைய ஆளுமையை பாதிப்பதாகவும் சமூகத்தில் பெறுமதி அற்றவர் என்ற உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் Catholic Association for Racial Justice (CARJ) தெரிவிக்கின்றது. பிரித்தானியா உறுதியாகக் கடைப்பிடிக்கும் சுதந்திர விதிகள் சமத்துவம் என்ற ஜனநாயக விழுமியங்கள் சாதியப் பாகுபாட்டினால் கீழ்நிலைப் படுத்தப்படுவதாக Catholic Association for Racial Justice (CARJ) அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 3.5 மில்லியன் தெற்காசியர்கள் வாழ்கின்றனர். இவர்கள் பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.7 வீதம். இவர்களில் 50 000 தொடக்கம் 200 000 பேர் வரையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என Voice of Dalit International (VODI) அமைப்பு தெரிவிக்கின்றது.
‘இதனைச் சிலர் இந்து சமயப் பிரச்சினையாகக் கூறுகிறார்கள். ஆனால் அப்படியல்ல’ என்று கூறும் ஈலிங் – சவுத்தொல் பா உ விரேந்திர சர்மா ‘இஸ்லாம், சீக், கிறிஸ்தவம், பௌத்தம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் துணைக் கண்டத்தில் இருந்த வந்திருந்தால் அவர்களது சமூகப் பின்னலில் சாதியமும் பின்னப்பட்டு இருக்கும்’ என்கிறார். சர்மா IANSற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்து இருந்தார்.
மேற்கு லண்டனில் உள்ள Voice of Dalit International (VODI) அமைப்பின் அலுவலகத்திற்கு சாதியப் பாகுபாடு பற்றிய 20 குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு வாரமும் வருவதாக அவ்வமைப்பின் இயக்குநர் Eugene Culas தெரிவிக்கின்றார். இக்குற்றச்சாட்டுக்கள் திருமணம், தொழில், சேவைகள், கல்வி அகியவை தொடர்பாக வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களில் ராம் லஹாக் என்ற கொவன்ரியின் முன்னாள் மேயர் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியர் இல்லாத பகுதியில் போட்டியிட நேர்ந்தது. பள்ளியில் இவரது பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர். இவர் தனது கதையை ‘No Escape: Caste Discrimination in the UK. என்ற அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.