இலங் கையின் 18ஆவது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றார். புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்தே ஜெனரல் சரத் பொன்சேகா பதவி விலகிச் செல்கிறார். இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதனையடுத்து இராணுவத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்புக்களைக் கையளித்ததுடன் உத்தியோகபூர்வ வைபவங்களின்போது தனது ஆடையில் சொருகிக்கொள்ளும் வாளையும் வழங்கினார். பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின்போது ஊடகவியலாளர்களுடன் உரையாடிய ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் அபிவிருத்திக்கும் புனரமைப்புக்கும் படையினரின் பூரண பங்களிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 12ஆம் திகதி நியமிக்கப்பட்டார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இப்புதிய நியமனத்தின்படி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.