எதிர்க்கட்சியினரை இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக்கு அனுமதித்திருந்தால் அகதி முகாம்களை உரிய முறையில் பராமரிக்கவில்லையென்ற சர்வதேச குற்றச்சாட்டு எழுந்திருக்காதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
வவுனியா நலன்புரி நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லையென ஊடகங்கள், இணையத்தளங்கள் வழியாக அறிய முடிகின்றது. உரிய முறையில் பராமரிக்காததன் விளைவாகவே சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு எழுமெனத் தெரிந்தே எதிர்க்கட்சியினரை அனுமதிக்குமாறு ஜே.வி.பி. கோரியது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால் எமது கட்சியின் செந்தாரகை செயலணியூடாக நாம் உதவிகளை வழங்கியிருப்போம்.
இந்நிலையங்களில் உள்ளோருக்கு உணவு வழங்குவோர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஓரிரு நாட்ளுக்காக அல்ல 4 மாதங்களாக உணவுக்காக பணம் வழங்கப்படவில்லை. அகதிகளுக்கான ஒருநாள் சாப்பாடுக்கான தொகை 120 ரூபாவாகும். அப்படியானால் எவ்வளவு தூரம் நிறைவு செய்யப்பட்டதை தெரிந்து கொள்ள முடியும்.
அரசாங்கம் பேச்சு ஜாலங்களை விட்டு விட்டு செயலில் காட்டி மக்களை மக்களாக மதித்து சரிவர செயற்பட முற்பட வேண்டும். எமக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட அனுமதி தாருங்கள் என மீண்டும் கேட்கின்றோம் என்றார்.