யாழ். குடாவில் சகல பொருட்களையும் கொழும்பு விலையில் விற்பதற்கு ஏற்பாடு

யாழ்.  குடாநாட்டில் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல பொருட்களும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுத் தெரிவித்தார். சமூக சேவைகள், சமூக நலன்புரித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசாங்கம் இதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நல்லூர் பிரதேச செயலாளர் ப. செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்வைபவத்தின் போது நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த வியாபாரிகளை நாளை (இன்று) கொழும்பு க்கு வரவழைத்து முக்கிய கூட்டமொன்றை நடத்தவிருக்கின்றோம். இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டில் சகல பொருட்களையும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கு யாழ். குடா நாட்டில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இப்போது பயங்கரவாதப் பிரச்சினை இல்லை. மக்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், வடபகுதி மக்கள் 24 மணி நேரமும் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *