09

09

முட்கம்பி வேலிக்குள் 3 இலட்சம் மக்களை அடைத்துவைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல்

06arliament.jpgஎமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள்? இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. எனவே, உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுங்களென ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் \செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறியதாவது; வவுனியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று வந்த மருத்துவர்களை நான் சந்தித்தேன். அங்குள்ள மூன்று இலட்சம் மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களெனவும் அவர்கள் எதிர்வரும் மாரிகாலத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் இன்னும் பல வருடங்களுக்கு செயற்படும் நிலைமையே காணப்படுவதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சில அமைச்சர்கள் பாகிஸ்தானிலும் இவ்வாறான அகதிமுகாம்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். உண்மைதான் அங்கு அகதிமுகாம்கள் உள்ளன. ஆனால், அந்த முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் சென்றுவர முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படியா உள்ளது? எதனை மறைப்பதற்காக ஊடகங்கள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளை அங்கு அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.

இந்த அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பிச்சைக்காரர்களல்ல. அவர்கள் நன்றாக வசதியாக வாழ்ந்த மக்கள் அவர்கள் எதற்கும் வழியில்லாதவர்களென அரசு நினைக்கக் கூடாது. இந்த அகதிமுகாம்களுக்கு உதவ முன்வரும் நாடுகளிடம் பொருள் உதவிவேண்டாம். பண உதவி செய்யுங்கள் என இந்த அரசு கேட்கின்றது. ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அரசுடன் இணைந்து கொண்டு தமது புள்ளிகளை  அதிகரிப்பதற்காக கூச்சலிடுகின்றார்கள்.

யுத்தம் முடிந்துவிட்டதென அரசு கூறுகின்றது. உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றது. யுத்தம் முடிந்து விட்டதென்றால் பயங்கரவாதத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவசரகாலச் சட்டம், காவலரண், சோதனைச் சாவடிகளை நீக்க வேண்டும்.இவ்வாறான நிலைமை ஏற்பட்டால்தான் உல்லாசப்பயணிகள் இந்த நாட்டுக்கு வருவார்கள்.

இதேவேளை, எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்தச் சட்டத்தின் அடிப்படையிலே முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்களென அரசிடம் கேட்கின்றோம். இது ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல் உடனடியாக அந்த மக்களை அவர்களின் இடங்களில் மீளக்குடியேற்றுங்கள்.

யுத்தம் இல்லாத நிலையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் முயன்றோம். ஆனால், இவர்கள் யுத்தத்தை நடத்திவிட்டு 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு மேலாக தரத்தயார் என்கின்றனர்.  நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை ஆனால், யுத்தத்தின் மறைவிலே நடந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகளைத் தான் நாம் எதிர்த்தோம். அரசு செய்யும் அனைத்தையும் சரியெனக் கூற நாங்கள் இங்கு வரவில்லை.

அம்பாறை மாவட்ட மக்கள் வரட்சி மற்றும் மழையால் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதி மக்கள் வரட்சியாலும், மறு பகுதியினர் சுழல் காற்றுடன் கூடிய மழையினாலும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பொத்துவில், திருக்கோயில் பகுதிகளில் வரட்சி நிலவுவதால் சிறு போகமான நெற்பயிர்கள் கருகியுள்ளன. குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. கால்நடைகள் குடிநீரின்றி உயிரிழக்கின்றன.

அத்துடன் இப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் வரட்சியினால் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்பகுதிகளிலுள்ள பிரதேச சபைகள் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, இம் மாவட்டத்தின் மேற்குக்கரை பகுதிகளில் சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வரப்பத்தான் சேனை, தமனை தொட்டம் போன்ற இடங்களிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றுடன் பறந்துள்ளன. மரங்கள் சரிந்து விழுந்ததில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆரம்பமாகியுள்ள சிறுபோக நெல் அறுவடை வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதேச கிராமசேவையாளர்கள் விபரங்கள் சேகரித்து பிரதேச செயலாளர்களூடாக அரசாங்க அதிபரின் கவத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை, பல தொண்டர் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.

புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள், 1250மோட்டார் குண்டுகள், அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,  கிளிநொச்சி பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது,  ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 5000, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 40,  80மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுக்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 81மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 550,  60மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 468,  120மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 330,  12.7மி.மீற்றர் ரவைகள் 470,  வெடிமருந்து 400கிறாம் மற்றும் ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்

சபையில் 5 தடவை நேற்று மின் தடை

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 5 தடவைகள் மின் விநியோக தடை ஏற்பட்டதினால் சபையில் அடிக்கடி இருள் சூழ்ந்து மறைந்தது.
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தகமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவிகருணாநாயக்க பேசிக் கொண்டிருக்கும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. முதல் 3 சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் அடிக்கடி தடைப்பட்டு மீண்டும் வழமைக்கு வந்தது.

இதன்போது சபையில் இருள் சூழவே அரசாங்கத்தின் நிலைமையும் இதுவே என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் 2 தடவைகள் மின் விநியோக தடை ஏற்படவே நாட்டின் நாளைய தலைவர்கள் பாராளுமன்றத்தின் நிலைமையை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்று கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களை சுட்டிக் காட்டி ரவி கருணாநாயக்க கூறினார்.

இதன்போது சபையில் இருந்த அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஏதோ கூறிவிட்டு தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபையை விட்டு வெளியில் செல்ல முற்பட்டபோது அமைச்சரின் பச்சை நிற சால்வை பொன் நிறமாக மாறிவிட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், அது பச்சோந்தியின் நிறமென ஜே.வி.பி. எம்.பி.யான திலகரட்ன விதானாச்சி கூறினார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தை அப்புறப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

maussakele-maskeleya.jpgகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தக் கோரி தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்ததைத் தொடர்ந்து தலவாக்கலைப் பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில், கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை குறிப்பிட்ட தோட்டத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி வேறொரு தோட்டத்தில் குடியமர்த்தக் கோரிய ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இப்போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

986 கோடி 64 இலட்ச ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கு சபை அங்கீகாரம்

வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக இரு அமைச்சுகளுக்கென 986 கோடியே 64 இலட்சம் ரூபாவை குறைநிரப்பு தொகையாக வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு ஆகிய இரண்டினதும் கீழான செலவினங்களுக்காகவே இந்த குறைநிரப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம் பலாப்பிட்டிய நேற்று இதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையாக 801 கோடியே 64 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையானது 35 கோடி ரூபா மற்றும் 150 கோடி ரூபா என இரண்டு கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேநேரம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகளையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவற்றுடன் சமர்ப்பித்தார்.

அத்துடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் விடயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறவே இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பொருட்களினதும் விலையும் அதிகரிக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை மீதான விவாதத்தின் இறுதியில் குறைநிரப்புப் பிரேரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கழிவகற்றும் 10 பவுஸர்கள் யூனிசெப் நிறுவனத்தால் அன்பளிப்பு

00001111.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்; தற்காலிக மலசல கூடங்களிலிருந்து கழிவுகளை அகற்றும் 10 பவுஸர்களை யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் இந்த பவுஸர்களை யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே இன்று காலை  கையளித்தார். இதற்கான வைபவம் யுனிசெப் நிறுவனத்தின் கொழும்பு பணியகத்தில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் ஐயாயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பவுஸர்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவாகும்.

நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் நன்மை கருதி மேலும் பல உதவிகளை யுனிசெப் நிறுவனம் எதிர்காலத்தில் வழங்கவுள்ளதாக வைபவத்தில் உரையாற்றிய யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே தெரிவித்தார்.

சந்திரகாந்தன் எம்.பி.க்கு 3 மாதகாலம் விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கு மூன்று மாத காலத்துக்கு விடுமுறை வழங்க சபை அனுமதி வழங்கியுள்ளது. சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கான 3 மாத கால விடுமுறைப் பிரேரணையை நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்த துரைரட்ணசிங்கம் எம்.பி. சந்திரகாந்தனுக்கு இன்றிலிருந்து (நேற்று) 3 மாத விடுமுறை வழங்குமாறு முன்மொழிந்தார். பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. வழிமொழிந்தார்.

இதையடுத்து அவருக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அரச தரப்பினர் நேற்று எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டு ஒதுக்கம் இரு மாதங்களில் 27 சதவீதம் வளர்ச்சி – பாராளுமன்றத்தில் அமைச்சர் சியம்பலாபிட்டிய

26parliament.jpgஇலங் கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 27 சத வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உற்பத்தித் தீர்வை சட்டம் மற்றும் நிதிச் சட்டம் ஆகியவை சார்ந்த 7 கட்டளைகளும் 3 குறைநிரப்புப் பிரேரணைகளும் நேற்று  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது ஜுன் மாதமாகும்போது 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது.

நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் இத்தகைய குறுகிய காலப் பகுதியில் இந்தளவு வளர்ச்சியடைந்தமை இதுவே முதற்தடவையாகும்.தீர்வை அதிகரிக்கப்பட்டதால் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது. வரியை உயர்த்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி சிகரட் பாவனையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சிப் பதிவின் மூலம் ஆடை உற்பத்தித்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத்துறையில் சிறப்பாக செயற்பட்ட 125 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பல சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டரை வயதுக் குழந்தைக்கு நஞ்சூட்டிய தந்தை நேற்று கைது கந்தளாய் பேராறு பகுதியில் சம்பவம்

இரண்டரை வயது பெண் குழந்தையை நஞ்சூட்டி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ள சம்பவமொன்று கந்தளாயில் இடம் பெற்றுள்ளது. கந்தளாய் பேராறு பகுதி யுனிப் ஒன்றைச் சேர்ந்த நெளபிதா என்ற 2 1/2 வயது சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குழந்தைக்கு நஞ்சூட்டியதாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தந்தையான நவாஸ் என்பர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி குழந்தையின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதற்காக சென்றுள்ளார். தாயாரின் சகோதரியின் பாதுகாப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது. குழந்தையின் தந்தை வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்றும் தெரி விக்கப்படுகிறது.

சம்பவதினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காலை 8 மணி யளவில் அழைத்துக் சென்றுள்ளார். 8.30 மணியளவில் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் வந்த குழந்தை சில மணி நேரத்தில் வாந்தியெடுத்ததுடன் மயக்க மடைந்துள்ளது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாகவும் குழந்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தந்தையான நவாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கந்தளாய் ஆஸ்பத்திரியிலிருந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு இறந்த குழந்தையின் சடலம் நேற்று அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குழந்தை நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் போதே தெரிய வரும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.