July

July

இடம்பெயர்ந்தோர் குறித்து நாளை சபையில் விவாதம்

வடக்கில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் தொடர்பாக நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பான இந்த விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாகவே நடைபெறவுள்ளது.

ஜே.வி.பி.யினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், புதன்கிழமை நண்பகல் 12.30 மணி தொடக்கம் மாலை 4.30 பணி வரையான 4 மணி நேரத்துக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

மானியங்களைக் குறைக்காமலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிப்பு

050709imf_.jpg மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை சிறதளவும் குறைக்காமலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கடனுதவி பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கடனுதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.சர்வதேச நாணய நிதியமும் சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தக் கடனுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குட்டித் தேர்தலாக இருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது – சித்தார்த்தன்

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல் குட்டித் தேர்தலாக இருந்தாலும், இன்றைய இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகப் பலதரப்பினராலும் கருதப்படுகின்றது. எனவே இந்த முக்கியத்துவத்தைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது என வவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா இறம்பைக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தி்னருடன் இடம்பெற்ற இறுதிச் சண்டைகளின்போது இறுதிப் போராளி இருக்கும் வரையில் போராடுவோம் என சூளுரைத்து போராடிய விடுதலைப்புலிகள் இன்று இல்லை. அந்தச் சண்டைகளின்போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறந்து போனார்கள். பலர் காயமடைந்தார்கள். சுமார் 3 லட்சம் மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிளாக இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என சூளுரைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்கள். இத்தகைய ஒரு போராட்டத்தின் மூலம், வவுனியாவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிவிடக் கூடாது. அதனை எமது மக்கள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக இங்கு பிரச்சினைகளே இல்லை. மக்கள் நன்றாக இயல்பாக வாழ்கின்றார்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கும் காரியத்தையும் தமிழ் மக்கள் செய்துவிடக் கூடாது.

விடுதலைப்புலிகளை அரசாங்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் பின்னர் தமி்ழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இன்று சர்வதேச நாடுகள் மிகுந்த ஆவலாக இருக்கின்றார்கள். எனவே இந்தத் தேர்தலில் சரியாக வாக்களிப்பதன் மூலம், தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும். என்றார் ரீ.சித்தார்த்தன்

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஹொரவப்பத்தானை வீதி போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திசாநாயக்கவினால் வவுனியா ஹொரவப்பத்தானை இன்று வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு, ஹொரவப்பத்தானைக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை புதன்கிழமை 22 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான நேரடி பேருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 7.30 மணிக்கு வவுனியா போக்குவரத்து சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும். அதிகாலை ஹொரவப்பத்தானையில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற ஹொரவப்பத்தானை சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து காலை 8.30 மணிக்கு திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இதேவேளை, காலையில் மன்னாரிலிருந்து புறப்படும் மன்னார் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவை வந்தடைந்து, காலை 9 மணிக்கு இங்கிருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வருட காலத்தின் பின்னர் மன்னார் திருகோணமலை மற்றும் வவுனியா திருகோணமலை நேரடி பேரூந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதாளக் குழுக்கள் பற்றிய தகவலை எனக்கு நேரடியாக அறிவியூங்கள் – பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

kottabaya.jpgபாதாளக் குழுக்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அது பற்றி குற்றத் தடுப்பு பிரிவினருக்கோ அல்லது நேரடியாக தமக்கோ அறிவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதாளக் குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் அதிரடிப்படை உறுப்பினர்கள் அடங்கிய விசேட பிரிவொன்று இதற்காக உருவாக்கப்பட்;டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

புலிப்பயங்கரவாதிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாதாளக்; குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகங்கள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளன

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகங்கள் நேற்று திங்கள் கிழமையுடன் மூடப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரிலேயே கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களையும் உப அலுவலகங்களையும் மூடி விட தீர்மானிக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அலுவலகங்களும் ,மூதூர் மற்றும் அக்கரைப்பற்று உப அலுவலகங்களும் நேற்றுடன் மூடப்பட்டு பரிதான நுழைவாயிலில் பூட்டுக்களும் போடப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மட்டுமே அங்கு கடமையில் காணப்படுகின்றனர்.

இலங்கையில் தனது நடவடிக்கைகள் குறைக்கப்படுமென சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம். அறிவித்திருந்தமைக்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழக்கில் அதன் பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்ததயைடுத்தே நேற்றுடன் அலுவலகங்களையும் மூடியுள்ளது.

கிழக்கில் தமது பணிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு அலுவலகங்களும் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்யும் உறுதிப்பாட்டை தமது அமைப்பு மீள் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல்கள் தொடர்பாக ஆராய இன்று விசேட கூட்டம் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_cast_ballots.jpgஊவா மாகாண சபை மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இந்தத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்னவும் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்தில் வாக்களிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசு ஆராய்வு?

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள படையில் இருந்து வெளியேறிய பலரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதையடுத்தே இது தொடர்பாக அரசு உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக இரு வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக்கொண்ட மிலிந்த மொறகொட சில நாட்களுக்கு முன்னர் முதல் தடவையாக வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள படையில் இருந்து தப்பிச்சென்றவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மொறகொட, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தான் ஆராய்வதாகத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பான யோசனை ஒன்றை மிலிந்த மொறகொட அரசிடம் முன்வைத்திருப்பதாகவும் அது தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் உயர்மட்டப் பாது?காப்பு அதிகாரிகளின் தலைமையிலான கூட்டம் ஒன்றில் ஆராயப்படும் எனவும் தெரியவருவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுமார் 65 ஆயிரம் பேர் படையணிகளில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 2 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சரணடைபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அரச பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்த போதிலும், அரசு எதிர்பார்த்தளவுக்கு அதிகமானவர்கள் சரணடையவில்லை.

படையினரில் இருந்து தப்பிச் சென்றவர்களில் பெருபாலானவர்கள் தலைமறைவாகவே இருப்பதுடன், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இவர்களுக்குப் பொதுமன்னிப்பை வழங்குவதன் மூலமாக மட்டுமே இவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்தி சமூகத்தில் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள முடியும் என மிலிந்த மொறகொட ஆலோசனை தெரிவிக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வெள்ளிக்கிழமை கிடைக்கும் – அமைச்சர் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் கோரியிருந்த கடன்தொகையின் முதலாம் தொகுதி நிதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிடைக்கவுள்ளதாக அரச வருமான மற்றும் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் கோரியிருந்த கடன்தொகை நிச்சயம் கிடைக்கும் என்பதை இச்சபையில் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

அரசாங்கம் 190 கோடி அமெரிக்க டொலர்களைக் கடனாகக் கோரியிருந்தபோதும் 250 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. இந்த நிதி 20 மாதங்களுக்குள் 8 தவணைகளில் கிடைக்கவுள்ளது. முதலாம் தவணையில் வழங்கப்படும் நிதிக்கு .5 வீத வட்டியே அறிவிடப்படவுள்ளது. மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு ஏற்ப இதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

புலிகளுடன் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கை கோரிக்கை

புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து இயங்கி வருவதால் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் உறுப்பினர்களிடயே பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர்; ரவிநாதா ஆரியசிங்க அண்மையில் உரையாற்றியபோதே இக்கோரிக்கையை முன்வைத்தார். அவர் தமது உரையில் மேலும் கூறியதாவது, இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக முற்றிலும் ஒழிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும், அவர்களின் சர்வதேச வலைப்பிண்ணல் (நெட்வொர்க்) ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது. புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நிலைமை மிகவும் மோசமாகி விடும்.

ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களிடம், இலங்கையின் புனரைமப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்த வேண்டும்.