குட்டித் தேர்தலாக இருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது – சித்தார்த்தன்

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல் குட்டித் தேர்தலாக இருந்தாலும், இன்றைய இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகப் பலதரப்பினராலும் கருதப்படுகின்றது. எனவே இந்த முக்கியத்துவத்தைத் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது என வவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து வவுனியா இறம்பைக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தி்னருடன் இடம்பெற்ற இறுதிச் சண்டைகளின்போது இறுதிப் போராளி இருக்கும் வரையில் போராடுவோம் என சூளுரைத்து போராடிய விடுதலைப்புலிகள் இன்று இல்லை. அந்தச் சண்டைகளின்போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இறந்து போனார்கள். பலர் காயமடைந்தார்கள். சுமார் 3 லட்சம் மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிளாக இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவோம் என சூளுரைத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்கள். இத்தகைய ஒரு போராட்டத்தின் மூலம், வவுனியாவும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலாக மாறிவிடக் கூடாது. அதனை எமது மக்கள் அனுமதிக்கக் கூடாது. இதற்காக இங்கு பிரச்சினைகளே இல்லை. மக்கள் நன்றாக இயல்பாக வாழ்கின்றார்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்கும் காரியத்தையும் தமிழ் மக்கள் செய்துவிடக் கூடாது.

விடுதலைப்புலிகளை அரசாங்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் பின்னர் தமி்ழ் மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இன்று சர்வதேச நாடுகள் மிகுந்த ஆவலாக இருக்கின்றார்கள். எனவே இந்தத் தேர்தலில் சரியாக வாக்களிப்பதன் மூலம், தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை எமது மக்கள் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும். என்றார் ரீ.சித்தார்த்தன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *