February

February

கொட்டகைகள், மரநிழல்களில் வகுப்புகளை நடத்துமாறு வவுனியாப் பகுதி அதிபர்களுக்கு பணிப்பு

college1.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களால் வவுனியா பாடசாலைகள் நிரம்பி வழிவதால் மாணவர்களுக்கான கல்வியை தற்காலிக கொட்டகைகளிலும் மரநிழல்களிலும் நடத்துமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வீ.ஆர்.ஏ. ஒஸ்வேல்ட் பணித்துள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் எட்டுப் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தேசிய மட்டப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள க.பொ.த. உயர்தர, சாதாரண தர மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தினமும் வகுப்புகளை நடத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அவர் சுற்றறிக்கை மூலம் சகல பாடசாலை அதிபர்களையும் பணித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது வவுனியாவில் தமிழ் மகாவித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா இந்துக் கல்லூரி, செட்டிகுளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் அ.த.க. பாடசாலை, நெளுக்குளம் கலைமகள் வித்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தாதியர் குழு இன்று விஜயம்

sri-lanka-nurse.jpgவன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள நோயாளர்களைக் கவனிப்பதற்காக தாதியர் குழுவொன்று இன்று வன்னிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பொது வைத்திய தாதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவர்கள் வன்னியிலுள்ள நலன்புரி நிலையங்களில் பணி புரிவதற்கென தன்னிச்சையாக முன்வந்துள்ளதாக மேற்படி சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். முதற்கட்டமாக இன்று 20 தாதியர் வன்னிக்குச் செல்வதுடன் மேலும் 20 பேர் அடுத்த வாரம் வன்னிக்குச் செல்ல தயாராயுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

இத்தாதியர் குழுவில் மனோதத்துவ ஆலோசகர்களும் இடம்பெறுவதுடன் தொடர்ச்சியாக மேலும் பல தாதியர்களை வன்னிக்கு அனுப்ப சங்கம் தீர்மானித்துள்ள தாகவும் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் 99 வீதமான பெண்கள் தமது கணவன் மூலமாகவே பாதிப்பு -சுகாதார அமைச்சு தகவல்

h-i-v-aids.jpgஇலங்கையில் 1059 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நிலையில், இவர்களில் 186 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.  எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானவர்களில் 615 பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 289 பேரில் 200 பேர் பெண்கள் எனவும் இப் பெண்களில் 99 வீதமானோர் தமது கணவர் மூலமே எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், கடந்த வருடத்தில் 30 எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந் நோய்த் தொற்றுக்கு உள்ளான 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சு மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், 72 வீதமான பாடசாலை மாணவர்கள் பல்வேறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் 29 வீதமானோர் ஆபாசப் படங்களை பார்வையிடுவதாகவும் மேலும், 18 வீதத்தினர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் குழு கிளிநொச்சி விஜயம் – புளியங்குளத்தில் உள்ள பொலிஸாருக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

electricitypowerlinesss.jpgசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தது. ஏ-9 வீதி வழியாக பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட மாங்குளம் கிளிநொச்சி பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவே இந்தக் குழு ஆராய்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுடைய பாதுகாப்பிற்கு பொலிஸ் நிலையங்கள் அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுமென மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, வவுனியாவிலிருந்து மாங்குளத்திற்கான மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டதை ஆரம்பிக்குமாறு அமைச்சிலிருந்து அனுமதி கிடைத்துள்ளதென வவுனியா மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது புளியங்குளம் வரையிலான மின் இணைப்புகள் உள்ளது. சேதமடைந்த மின்மாற்றிகள் திருத்தப்பட்டு ஏ-9 வீதியில் புளியங்குளத்தில் உள்ள பொலிஸாருக்கு மின்சாரத்தை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

பெப்.16 இல் பொலிஸ் பயிலுநர்தர அதிகாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை

srilanka-police.jpgபொலிஸ் திணைக்களத்துக்கு பயிலுநர் தரத்திலான அதிகாரிகளை சேர்த்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு பம்பலப்பட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெறவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் போது பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கே பயிலுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்குத் தேவையான தகுதிகளாக, பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கோரப்பட்டிருப்பவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு;

பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு…..

உயரம் (குறைந்தபட்சம்) 5 அடி 4 அங்குலம் வயது 18 இற்கும் 28 இற்கும் இடையில் மார்பளவு சாதாரண நிலையில் 30 அங்குலம் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூல பாடம் உட்பட, 2 தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 2 அமர்வுகள் மூலம் சித்தி பெற்றவர்கள் முதலாவது அமர்வில் 5 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு…..

உயரம் (குறைந்தபட்சம்) 5 அடி 2 அங்குலம். வயது 18 இற்கும் 28 இற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டியதுடன், திருமணமாகாதவராகவும் இருக்க வேண்டும். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூல பாடம் உட்பட, 2 தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியெய்தியிருக்க வேண்டும். 2 அமர்வுகளின் மூலம் சித்தி பெற்றவர்கள் முதலாவது அமர்வில் 5 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவிக்கு…..

உயரம் (குறைந்தபட்சம்) 5 அடி 3 அங்குலம். வயது 19 இற்கும் 28 இற்கும் இடைப்பட்டதாகவும் திருமணமாகாதவராகவும் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் மார்பளவு 30 அங்குலம். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூல பாடம் உட்பட, 2 தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். 2 அமர்வுகளின் மூலம் சித்தி பெற்றவர்கள் முதலாவது அமர்வில் 5 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

‘காந்தியின் பொருட்கள் மீளப்பெறப்பட வேண்டும்’- நாடாளுமன்ற உறுப்பினர்கள்

mohandas_gandhi.jpgசுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள், அங்கிருந்து பெறப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இந்திய அரசாங்க அமைச்சர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இந்திய அரசாங்கமே இந்தப் பொருட்களை நேரில் ஏலத்தில் வாங்கி எடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவுக்கான பார்வையை தமக்கு வழங்கிய கண்ணாடிகள் என்று காந்தியினால் விபரிக்கப்பட்டு, பின்னர் இந்திய இராணுவ அதிகாரி ஒருவருக்கு காந்தியினால் வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடியும் அதில் அடங்கும்.

காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்ட போது அவரைத்தாங்கியிருந்த அவரது பேத்திக்கு வழங்கப்பட்ட கைக்கடிகாரமும் அதில் அடங்கும் இன்னுமொரு பொருளாகும்.

தலவாக்கலை தோட்டத்தில் தீ: 6 லயன் வீடுகள் எரிந்து நாசம் – பாதிக்கப்பட்டோர் கோயில்களில் தஞ்சம்

sri-lanka-upcountry-01.jpgதலவாக் கலை கிரேட்வெஸ்ட் தோட்டத்தில் ஆறுலயன் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் உயிர்ச்சேதமெதுவும் ஏற்படவில்லையெனவும் தோட்ட மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் தீ மேலும் லயன் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீடுகளின் கூரைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதுடன் இவ்வீடுகளில் குடியிருந்தோரை தோட்டக் கோயிலில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட 65 பேருக்கு சமைத்த உணவுகளை வழங்கவும் கிரேட் வெஸ்ட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை – ஜெயந்தி நடராஜன்

சார்க் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். தனது தந்தையும் தமிழக முன்னாள் முதல்வருமான பக்தவச்சலம் நினைவு நாளையொட்டி (13)சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்துக்கு ஜெயந்தி நடராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஜனாதிபதி உரையில் தெளிவாக கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலை. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி காங்கிரஸ் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.ராஜீவ், சோனியா காந்தி அவமானப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல இடங்களில் உருவப்பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள தீய சக்திகள் தான் இதை செய்கின்றன. காங்கிரஸ் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. எதிர் நடவடிக்கையில் இறங்கும். காங்கிரஸ் தலைவர்கள் கொச்சை படுத்தப்படுவதை ஏற்க மாட்டோம்.ராஜீவ், சோனியா மற்றும் காங்கிரஸ் கொடியை எரிப்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் காங்கிரஸ் தான் முதலிடத்தில் இருக்கிறது. இனப் படுகொலையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்றுதான் காங்கிரஸ் நினைக்கிறது.

சார்க் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ப்பது குறித்து கட்சி தலைவர் சோனியா காந்தி தான் முடிவு செய்வார் என்றார் ஜெயந்தி.

கருணாநிதிக்கு பிரபாகரன் கடிதம் எழுதவில்லை – புலிகள் மறுப்பு

ltte.jpgதமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும், மறைந்த அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசியதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாலசிங்கத்தின் மனைவியார் அடேல், வாஷிங்டனில் ஹில்லாரியை சந்தித்துப் பேசியதாகவும், அதேபோல பிரபாகரன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாகவும் சில தமிழக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடேல்- ஹில்லாரி சந்திப்பு குறித்த செய்தியை விடுதலைப் புலிகளின் வானொலியான “புலிகளின் குரல்” ஒலிபரப்பியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தரப்பில் கூறுகையில், உண்மைக்குப் புறம்பான இவ்வாறான செய்திகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாகவே அமையும்.

போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் ஆர்வத்தில் – சில சமயங்களில் – மீள உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்படும் இவ்வாறன செய்திகள் தமிழர்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசு தேர்தல் பிரசாரம் – சாடுகிறது ஜே.வி.பி.

jvp-net.jpgமக்கள் பிரச்சினையை தேர்தல் தொனிப்பொருளாக முன்வைக்காது யுத்தத்தை முன்னிறுத்தி பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி, மாகாண சபைகளுக்கு அமைச்சர்களின் உறவினர்களையும் சமூக விரோதிகளையும் அனுப்ப முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.

இத்தகைய கும்பலிடம் மாகாண சபைகள் சிக்கிவிடாது பாதுகாப்பதற்கு மக்கள் தமது வாக்குகளை நாட்டின் பிரிவினைக்கு இடமளிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படும் ஜே.வி.பி.க்கே வாக்குகளை அளித்து சக்தியளிக்க வேண்டுமென அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் ரில்வின் சில்லா கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்துகின்றது. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்வதுடன் தேர்தல் சட்ட விதிகளை மீறுவது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதென அனைத்தையும் மேற்கொள்கின்றது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அரசாங்கமே அதிகளவான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதைக் காணலாம். அச்சுறுத்துவது முதல் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் தேர்தல் சட்டவிதிகளை மீறுவது என அனைத்திலுமே பெரியளவில் ஈடுபட்டதனையும் அவதானிக்கலாம்.

அரச கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதுடன், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றது. சட்ட விதிகளின் படி ஒரு வேட்பாளர் ஒரு ஒலிபெருக்கி வாகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியுமென்ற நிலையில் அரச தரப்பு தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி, வரம்புக்கு மிறிய வகையில் ஒலி பெருக்கியின் சத்தங்களையும் கூட்டியும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் ஒலி மாசடைதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் தனது வெற்றிக்காக இது மட்டுமன்றி, மக்களின் வாக்குகளை பிரித்தெடுத்து வெற்றிபெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பேசாது இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து பெற்றுவரும் வெற்றிகளை பொய்களைக் கூறி தனது வெற்றியாக காட்ட முனைகின்றது.

இவ்வாறு செய்து வெற்றி பெற்று மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றுவதற்கு காரணம். அங்கும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கேயாகும். இரு மாகாண சபை வேட்பாளர்களை பார்க்கின்ற போது அமைச்சர்களின் சகோதரர்களாகவும் மாமன், மருமகன் போன்ற உறவு முறையை நாம் காணலாம். அது போல் மாகாண சபையை அதிகாரத்துடன் கொண்டு நடத்த குண்டர்கள் பாதாள உலகத்தினர் குடுகாரர்கள் போன்ற சமூக விரோதிகளையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

இவர்களின் வெற்றிக்காக அரச ஊடகங்களை பயன்படுத்துகின்றது. இவர்களுக்காக பிரசாரம் செய்யும் ஊடகங்கள் அரச ஊடகங்கள் அல்ல. அது மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகமாகும். தனது வெற்றிக்காக அரசாங்கம் யுத்த வெற்றியையும் சகல பலத்தினையும் பாவித்து மக்களை ஏமாற்றுவோரை நிராகரித்து உங்கள் வாக்குரிமையை பாதுகாக்குமாறு கோருகின்றோம் என்றார்.