இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை – ஜெயந்தி நடராஜன்

சார்க் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். தனது தந்தையும் தமிழக முன்னாள் முதல்வருமான பக்தவச்சலம் நினைவு நாளையொட்டி (13)சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்துக்கு ஜெயந்தி நடராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து ஜனாதிபதி உரையில் தெளிவாக கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலை. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி காங்கிரஸ் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.ராஜீவ், சோனியா காந்தி அவமானப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல இடங்களில் உருவப்பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பது கவலையளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள தீய சக்திகள் தான் இதை செய்கின்றன. காங்கிரஸ் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. எதிர் நடவடிக்கையில் இறங்கும். காங்கிரஸ் தலைவர்கள் கொச்சை படுத்தப்படுவதை ஏற்க மாட்டோம்.ராஜீவ், சோனியா மற்றும் காங்கிரஸ் கொடியை எரிப்பவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் காங்கிரஸ் தான் முதலிடத்தில் இருக்கிறது. இனப் படுகொலையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்றுதான் காங்கிரஸ் நினைக்கிறது.

சார்க் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகள் மட்டும் செய்யப்பட்டதே தவிர ராணுவ உதவி எதுவும் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ப்பது குறித்து கட்சி தலைவர் சோனியா காந்தி தான் முடிவு செய்வார் என்றார் ஜெயந்தி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *