சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தது. ஏ-9 வீதி வழியாக பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் பாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட மாங்குளம் கிளிநொச்சி பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவே இந்தக் குழு ஆராய்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களுடைய பாதுகாப்பிற்கு பொலிஸ் நிலையங்கள் அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுமென மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை, வவுனியாவிலிருந்து மாங்குளத்திற்கான மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டதை ஆரம்பிக்குமாறு அமைச்சிலிருந்து அனுமதி கிடைத்துள்ளதென வவுனியா மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது புளியங்குளம் வரையிலான மின் இணைப்புகள் உள்ளது. சேதமடைந்த மின்மாற்றிகள் திருத்தப்பட்டு ஏ-9 வீதியில் புளியங்குளத்தில் உள்ள பொலிஸாருக்கு மின்சாரத்தை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.