2009

2009

ஜனாதிபதி தலைமையில் கண்டியில் பொங்கல் விழா

pongal-02.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாபெரும் பொங்கல் விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பின் விரிவான ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சமூக, சமய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள் இவ்விழாவில் முக்கிய இடத்தை வகிக்கும். பொங்கல் விழா நிகழ்வுகளை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் செய்யவுள்ளது.

சமாதானமும், செளபாக்கியமும், நம்பிக்கையும் நிலைத்து நிற்கட்டும் ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

உலகெங்கிலும் பரந்துவாழும் தமது இந்து சகோதரர்களோடு சேர்ந்து தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு இவ் வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தை மாதத்தின் முதல் தினத்தில் வருகின்ற தைப்பொங்கல், மரபுகளையும், கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்துவருகின்றனர்.  இரு விதங்களில் புனிதமாகக் கருதப்படுகின்ற இத்தினம் சிறந்த அறுவடையை எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற அறுவடைக்காகவும் அதை அளித்த சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும்.

தைப்பொங்கல் பண்டிகையானது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுரிமைகளை அனுஷ்டித்து அவற் றுக்கு தம்மை அர்ப்பணித்து, அவற்றைப் புதுப்பித்து எமது நாட்டின் ஏனைய மக்களைப் போல எதிர்காலம் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பன்மைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இத்தைப்பொங்கல் தினத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் தங்களை விடுவிப்பதற்காக போராடுகின்றோம் என உரிமை கோருபவர்களாலேயே தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியதாகும்.  இவ்விசேட தினத்தில் இலங்கைவாழ் இந்துக்களினதும் என்னுடையதும் சகோதர, சகோதரிகளான தமிழ் மக்கள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உண்மையாக விடுவிக் கப்பட்டு இலங்கையின் வடக்கே சுதந்திரமும் ஜனநாயக மும் மீளக் கட்டியெழுப்பப்படும் நாள் மிகத் தூரத்தில் இல்லை என்பதை இலங்கைவாழ் இந்துக்களுக்கு உறுதிபடத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கைவாழ் அனைத்து இந்துக்களுக்கும் நான் மகிழ்ச்சிகரமான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மலரும் வருடத்தில் எம்மிடையே சமாதானமும் செளபாக்கியமும் நல்ல நம்பிக்கையும் புரிந்துணர்வும் நிலைக்கட்டும் என்ற அவர்களது பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன். 

அரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திபாரமாக அமைந்துள்ளது – வீரவன்ச எம்.பி.

vimalveera.jpgஅரசியல் ரீதியான வெற்றிகள் இராணுவ வெற்றிக்கு அத்திரபாரங்களாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் தெரிவித்துள்ளார். கண்டி தபால் காரியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற முன்னணியின் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“ரணில் விக்கிரமசிங்கவின் சமாதன உடன்படிக்கை காரணமாகவே யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு காலதாமதமாகியது. நாம் இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டோம். உண்மையாகவே, ரணில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக வாசித்துப் பார்க்காமலேயே கையொப்பமிட்டுள்ளார் என்றே எண்ணவேண்டியுள்ளது.

எமது இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவார்கள் என நீண்ட காலமாகவே நாம் கூறிவந்தோம். அதுவே தற்போது நிறைவேறியுள்ளது.  2009 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு வெற்றிகரமான ஆண்டாகும். நாம் இந்த பூமிக்கு முழுமையான ஆதரவாளர்களாகவே திகழ வேண்டுகின்றோம்’ என்றார்.

வன்னியில் கடந்த 3 மாதப் போரில் மூவாயிரம் படையினர் உயிரிழப்பு -அமைச்சர் கெஹலிய

SL_Army_in_Killinochieவன்னியில் கடந்த மூன்று மாதப் போரில் மூவாயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அரசின் பாதுகாப்பு விவகாரப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாக “சண்டே ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அந்தப் பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரம் படையினர் வன்னி களமுனைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் 15 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தவறானது.  விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மட்டுமே தற்போது நிலைகொன்டுள்ளனர். அவர்கள் வசம் 2 ஆயிரம் பேரே உள்ளனர். எனவே அவர்களை நாம் இலகுவில் வெற்றி காண்போம் என்றார்.

எஞ்சியிருக்கும் புலிகள் ஒன்றுசேர்ந்து கெரில்லா பணியிலான தாக்குதலை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா என அவரிடம் கேட்கப்பட்ட போது, அது சாத்தியமற்றது. இடையிடையே சிறு சிறு சேதங்களை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் சேதங்கள் எதனையும் அவர்களால் ஏற்படுத்த முடியாதென்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

படையிலிருந்து தப்பியோடிய 2,500 பேர் சிறையில் தடுத்துவைப்பு.

justice.jpgஇரா ணுவத்திலிருந்து தப்பியோடி பிடிபட்டவர்களில் 2,500 பேர் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; படைகளிலிருந்து தப்பியோடி பின்னர் கைது செய்யப்படுவோர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் . இவர்களுக்கான சிறைத் தண்டனை, மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடமாயிருக்கும், தற்போது இவ்வாறு 2,500 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கானோர் மீண்டும் படைகளில் இணைவதற்காக அவர்களுக்கு பல தடவைகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட அளவினரே பொது மன்னிப்பை பெற்று மீண்டும் படைகளில் இணைந்து கொண்டனர். சுமார் 3,000 பேர் இந்த பொதுமன்னிப்புக் காலத்தின் ஊடாக மீண்டும் படையணிகளில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையின் கெளரவ தூதுவர்களுக்கான கருத்தரங்கு

presidentmahinda.jpgவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்களுக்கு (வெளிநாட்டுப் பிரஜைகள்) இந்நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் மூன்று நாட்கள் கருத்தரங்கொன்று எதிர்வரும் 19ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்துவைக்க விருக்கிறார்.

இக்கருத்தரங்கின்போது இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை என்பன தொடர்பாக தெளிவுபடுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பங்குபற்றும் கெளரவத் தூதுவர்கள் திருகோணமலைக்கு நேரில் விஜயம் செய்யவிருக்கிறார்கள். இவர்கள் திருமலை மாவட்ட செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 பாதை திறப்பு மூலம் யாழ். குடா மக்கள் புத்துயிர் பெறுகின்றனர் – யாழ். ஆயர்

jaffna_thomas.jpgஏ-9  பாதை திறக்கப்பட்டது குறித்து தான் பெரு மகிழ்ச்சியடைவதாக யாழ். ஆயர் வண. தோமஸ் செளந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறப்பானது வடக்கிற்கும், தெற்கிற்குமிடையில் மிகவும் புரிந்துணர்வை ஏற்படுத்துமெனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ஏ-9 பாதை மூடப்பட்டிருந்ததன் மூலம் யாழ். குடாநாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். பாதை திறக்கப்பட்டு விட்டதென்ற செய்தி கேட்டதும் பெருமகிழ்ச்சியடைந்தேன். குடாநாட்டில் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு போக்குவரத்து பிரதான காரணமாக அமைந்தது. பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் யாழ். மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

அகதிகள் தஞ்சமடைந்திருப்பதால் வன்னி பாடசாலைகள் முழுவதும் இயங்கமுடியாத நிலை

school-2.jpgவன்னி யில் தொடரும் படை நடவடிக்கைகளால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்து வருவதால் அடுத்து வரும் நாட்களில் பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.  இராணுவ நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் 73 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராசா தெரிவித்தார்.

முன்னர் இங்கு 90 பாடசாலைகள் இயங்கின. அதில் 73 பாடசாலைகள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. இதிலும் 17 பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்தநிலையில் பரந்தனுக்கு கிழக்கேயும் வேறு பகுதிகளிலும் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் தொடர்ந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தருமபுரம் மற்றும் விசுவமடு பகுதி பாடசாலைகள் தற்போது, இடம்பெயர்ந்த மக்களால் முற்றாக நிரம்பிவழிகிறது.  இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்னியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனவும் பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பிரச்னைக்கு தீர்வு தமிழர்கள் கையில்: இல.கணேசன்

eela-ganash.jpgஇலங் கை பிரச்சனைக்கு எது தீர்வு என்பதை அங்குள்ள தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்.வெப்துனியா இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:  ஈழத் த‌மிழ‌ர்க‌ள் ‌விஷய‌த்‌தி‌ல் எ‌ப்போதுமே பாஜக கவலையை‌த் தெ‌ரி‌வி‌த்து வருகிறது. இல‌ங்‌கைத் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்போடு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது மட்டுமல்ல, சம உ‌ரிமையோடும் வாழ வே‌ண்டு‌ம். சம உ‌ரிமை எ‌ன்பது அவ‌ர்களது பிற‌ப்பு‌ரிமை. விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான நடவடி‌க்கை எ‌‌ன்ற போ‌ர்வை‌யி‌‌ல் அ‌ப்பா‌வி‌த் த‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படு‌கிறா‌ர்க‌ள். சொ‌ந்த நா‌ட்டிலேயே த‌மிழ‌ர்க‌ள் அக‌திகளாக வா‌ழ்‌கிறா‌ர்க‌ள்.

இல‌ங்கை அரசுக்கு ஆதவாக திமுக அங்கம் வகிக்கும் கா‌ங்‌கிர‌ஸ் அரசு செய‌ல்படு‌கிறது; பண‌ம் த‌‌ருகிறது. இந்தியா நடு‌நிலையாக இ‌‌ல்லாம‌ல் ஒரு சா‌ர்பாக‌, த‌மிழனு‌க்கு எ‌திராக நட‌ந்து கொ‌ள்வது தவறு. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு பிரணா‌ப் முக‌ர்‌ஜியை அனு‌ப்‌பினாலு‌ம், ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கே போனாலு‌ம் கூட ஒ‌ன்று‌ம் நட‌க்காது. த‌மிழக முத‌ல்வரே டெ‌ல்‌லி போ‌ய் வ‌ற்புறு‌த்‌தினாலு‌ம் எதுவு‌ம் நட‌க்காது.

இப்பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வு எ‌ன்னவெ‌ன்று முடிவு செ‌ய்ய வே‌ண்டிய அ‌திகார‌ம் இல‌ங்கை‌யி‌ல் வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிற த‌மி‌ழ் ம‌க்களு‌க்கு‌த்தா‌ன் உ‌ள்ளது. த‌னி நாடு எ‌ன்பதை பாஜக ஆத‌ரி‌க்கவு‌ம் இ‌ல்லை; எ‌தி‌ர்‌க்கவு‌ம் இ‌ல்லை. அதை தமிழர்கள் முடிவு செ‌ய்து கொ‌ள்ள‌ட்டு‌ம். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
 

மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர்

mumbai.jpgமும் பைத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டாலும் அவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.  கராச்சியில் (11)செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மும்பையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டு என்று, கண்டறியப்பட்டாலும் அவர்கள் பிறநாடுகளிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தான் நாட்டு சட்டப்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கென தனிச் சட்டம் உள்ளது. அதன்படி விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெரிவிப்போம்.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள வெளிநாடுகளின் தூதர்களுக்கு ஜனாதிபதி சர்தாரி விருந்து அளித்தார். முஸ்லிம் அல்லாத நாடுகளின் தூதர்களுக்கு மட்டுமே இந்த விருந்து அளிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சத்யபிரபாபோல் மற்றும் அமெரிக்க, சீன, இங்கிலாந்து, ரஷ்ய, பிரான்ஸ் தூதர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் கிலானியும் இதில் பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சி மூலமாக பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை வெளிநாட்டு தூதர்களிடம் சர்தாரி தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை சர்தாரியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். விருந்து நிகழ்ச்சியில் சர்தாரி எந்த உரையும் ஆற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.

யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்: சேனன்

12309911698101.jpgகாசாவில் இஸ்ரேலிய இரானுவத்தின் தாக்குதலை வன்மையாக கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடந்துவருகிறது. கடந்த 10ம் திகதி இரண்டாவது முறையாக ஆயிரக்கணக்கானவர்கள் லன்டனில் கூடி இஸ்ரேலிய தூதரகத்துக்கு எதிர்வரை சென்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். அக்கூட்டத்தில் வளங்கிய பேச்சின் சுருக்கம்.
——

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து – கடந்த எட்டு வருடத்துக்குள் – மில்லியன் கணக்கான மக்களை நாம் யுத்தத்துக்கு இழந்துள்ளோம்.

கொங்கோவில் நாலு மில்லியனுக்கும் மேல், ஈராக்கில் ஒரு மில்லியனுக்கும் மேல், டாபூர் சூடானில் அரை மில்லியனுக்கு மேல் என்று உலகெங்கும் யுத்தம் பலிகொண்ட மனித உயிர்களின் எண்ணிக்கையின் தொகை அதிகரித்துகொண்டு செல்கிறது.

தற்போது காசாவில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் மக்கள்மேல் கற்பனை பண்ணமுடியாத கொடிய தாக்குதலை பார்க்கிறோம்.  மனிதர் படும் துன்பங்கள் புது எல்லைகளை தாண்டிக் கொண்டிருக்கிறது.

ஏன் இது? ஒரு சொற்ப – ஆயிரக்கணக்கான பணக்கார முதலைகளின் சொத்துக்களை பாதுகாக்கத்தான் இத்தனையும்.

சொத்துக்களை குவித்தலும் அதை பாதுகாத்தலும் முதலாளித்துவத்தின் இயல்பு என்பது எமக்கனைவருக்கும் தெரியும். தமது சொத்துக்களை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்துக்கு தாவுவதை வரலாறு முழுக்க நாம் பார்த்துள்ளோம்.

மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது பற்றி அமெரிக்க – மேற்கத்தேய பணக்கார ஆளும் வர்க்கத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமில்லை. உடனடி தீர்வை எடுக்க அவர்கள் வக்கற்றவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.

காசாவில் வறிய மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அதே தருனத்தில் கவலை முக பாவனை காட்டி ‘மனித இனத்துக்கு கவலைப்படுவதாக’ ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகார மூஞ்சிகளை நாம் ஒருபோதும் நம்புவதில்லை.

ஏனெனில் எமக்கு தெரியும் – எம் நலனில் இருந்து அவர்கள் நலன் முற்றிலும் மாறுபட்டது. எண்ணை வள மத்திய கிழக்கின் வளத்தை தமது கட்டுபாட்டில் தொடர்ந்து வைத்திருக்க இஸ்ரேலிய ஆளும் வர்க்க ஆதரவு தமக்கு தேவை என்பதில் அவர்கள் தெட்டதெளிவாக இருக்கிறார்கள். வாடும் வறிய மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திக்கப் போவதில்லை. வளங்களை சுறண்டுவது சொத்துக்களை சேர்ப்பது என்பதை மடடும் குறிவைத்து இயங்குவதே அவர்கள் சிந்தனை.

முதலாளித்து பொருளாதாரம் உலகெங்கும் கடும் ஆட்டங்கண்டுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தின் கோப நடவடிக்கைகளின் வேகமும் அட்டூளியமும் பல மடங்கு அதிகரிப்பதை நாம் பார்க்கடியதாக இருக்கிறது. பச்சை பொறுக்கித்தனமான செயல்களை – மிக கொடூரமான நடவடிக்கைகளை எந்த வெக்கமும் ஒளிப்பு மறைப்புமின்றி வெளிப்படையாக செய்வதில் ஆளும்வர்க்கத்தின் தெனாவட்டு அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தங்களை கேள்வி கேட்க ஆளில்லை – கதைச்சுபேசி சடைஞ்சு எப்பிடியும் தப்பிவிடுவோம் என்ற அபார நம்பிக்கையுடன் அவர்கள் இந்த அட்டூளியங்களில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த தேர்தலை வெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக பல இஸ்ரேலிய பாலஸ்தீன உயிர்களை பலிகொடுக்க தயங்காது நிற்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம். உலகெங்கும் வாழும் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பிருந்தும் தான்தோன்றி தனமாக கடும் தெனாவட்டுடன் பட்ட பகலில் பச்சை கொலை செய்கிறது இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.

ஆளும்வர்க்கம் உலகெங்கும் இதைதான் செய்துவருகிறது.  அமெரிக்க – மேற்கத்தேய – இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் கடும் அட்டூளியங்களை செய்தபிறகும் கேட்பாரற்று தப்பிவிடுவதை படிப்பினையாக எடுத்து முன்றாம் உலக நாடுகளை உலுப்பும் ஆளும் வர்க்கங்களும் இதே பாணியை பின்பற்றுகின்றன.

நான் இலங்கையில் இருந்து வந்தவன். காசாவை இஸ்ரேலிய இராணுவம் கடுமையாக தாக்கும் இதே தருனத்தில் இலங்கை இராணுவமும் வடக்கில் கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இராணுவம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து விட்டனர். அவர்கள் எங்கே. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கதையில்லை.

இலங்கை இரானுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் காசா மக்களை போல்தான் கடும் பயக்கெடுதியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இவர்களிள் பெரும்பான்மையானவர்களை தீவிரவாதிகள் என்று இராணுவம் நம்புவதால் இவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விரைவில் கொல்லப்படக்கூடிய சாத்தியமுண்டு. அது மட்டுமின்றி ஒரு சொற்பன் தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் மேல் கடும் தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. அண்மையில் ஒரு முக்கிய ஊடகவியலாளரை அரச கூலிகள் சுட்டு கொண்டுள்ளார்கள். வரும் இந்த கிழமை இலங்கை தூதரகம் முன்னாலும் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு படுத்தப்படவுள்ளது.

யுத்தத்தால் சிதைந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவன் என்ற முறையில் இன்று காசா மக்கள் படும் துன்பத்தை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சா எப்ப வரும் என்று தெரியாமல் எந்த நிமிடமும் சாவை எதிர்நோக்கி வாழ்வது மிக கொடிய வாழ்வு. ஒவ்வொரு குண்டு சத்தத்திலும், ஒவ்வொரு துப்பாக்கி சத்தத்திலும், விமானம் பதிந்து பறக்கும் ஒவ்வொரு தருனத்திலும் சாவை எதிர்கொண்டு தப்பி துடிக்கும் அவர்களின் துன்பம் அளப்பரியது.

அத்துடன் அவர்களுக்கு குடிக்க தண்ணியில்லை – சாப்பிட எதுவுமற்ற கடும் பட்டிணி – இதற்குள் தமது உறவுகள் நண்பர்கள் சக மனிதர்கள் தமக்கு முன்னால் கோரத்தனமாக கொல்லப்படுவதை செய்ய வழியற்று அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இதயத்தின் அடியில் நெருப்பாக துடிக்கும் இயலாமையை எம்மால் உணர முடிகிறது. இதை உணரும் இங்கிருக்கும் யாரும் அவர்களை தனியாக துன்பப்பட விடமாட்டோம்.

ஆனால் யு. என். இன் நீண்ட கொரிடோர்களில் அங்கும் இங்குமாக நடந்து விலைகூடின கமராக்களுக்கு போஸ் குடுக்கும் மேற்கத்தேய அரசியல்வாதிகளுக்கு இந்த உணர்வுகள் ஒருபோதும் புரியப்போவதில்லை. காசா மக்களின் அடி மன வேதனையை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. அவர்கள் சிந்தனை வேறு விதமானது. மக்கள் மேலும் மேலும் வறுமைப்பட அவர்கள் தமது சொத்துக்களை அதிகரித்துகொண்டு யுத்த நடவடிக்கைகளுக்கான செலவையும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த மாதத்தில் மட்டும் அரை மில்லயனுக்கும் மேலான அமெரிக்க மக்கள் வேலை இழந்த நிலையில் அது பற்றி எந்த அக்கறையுமற்ற அமெரிக்க அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கை பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. மொத்த ஜி.என்.பி யில் கிட்டத்தட்ட 4 வீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளது அரசு. கடந்த ஆண்டில் அதிகூடிய ஆயுத விற்பனை செய்தது இந்த இங்கிலாந்து அரசுதான். மூன்றாம் உலக நாடுகளின் கொடிய ஆளும்வர்க்கங்களை ஆயுதமயப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இஸ்ரேலிய அரசு.

நாம் இதை பார்த்து கொண்டிருக்க முடியாது. நாம் யுத்தத்துக்கு எதிராக –யுத்தத்தின் மூல காரணத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். யுத்தத்தின் மூல காரணம் முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் இருக்கும் வரைக்கும் யுத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். யுத்த நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் நாம் முதலாளித்துவத்துக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.

மில்லயன் கணக்கான நாம் – தொழிலாளர்களான நாம் – உலக சொத்துக்களை சூறையாடும் ஒரு சிறு குழுவை விட மிகப் பலம் வாய்ந்தவர்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.

காசா – முழு பாலஸ்தீனம் – இஸ்ரேல் – அமெரிக்க – இலங்கை என்று ஆங்காங்கு போராடிவரும் தோழர்களுடன் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மனிதர் துன்பப்படாத – யுத்தமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்.

நாம் எமது யுத்தத்தை – இறுதி யுத்தத்தை செய்தாக வேண்டும். மனித துன்பத்துக்கு நிரந்தர தீர்வு கட்டும் இறுதி போராட்டத்திற்கு இணைவோம். எமது யுத்தத்தில் இனைந்து கொள்ளுங்கள். சோசலிஸ்டுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.