வன்னி யில் தொடரும் படை நடவடிக்கைகளால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்து வருவதால் அடுத்து வரும் நாட்களில் பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் 73 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராசா தெரிவித்தார்.
முன்னர் இங்கு 90 பாடசாலைகள் இயங்கின. அதில் 73 பாடசாலைகள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. இதிலும் 17 பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளதால் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் பரந்தனுக்கு கிழக்கேயும் வேறு பகுதிகளிலும் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் தொடர்ந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தருமபுரம் மற்றும் விசுவமடு பகுதி பாடசாலைகள் தற்போது, இடம்பெயர்ந்த மக்களால் முற்றாக நிரம்பிவழிகிறது. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்னியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலை ஏற்படலாமெனவும் பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.