இலங் கை பிரச்சனைக்கு எது தீர்வு என்பதை அங்குள்ள தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்.வெப்துனியா இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி: ஈழத் தமிழர்கள் விஷயத்தில் எப்போதுமே பாஜக கவலையைத் தெரிவித்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சம உரிமையோடும் வாழ வேண்டும். சம உரிமை என்பது அவர்களது பிறப்புரிமை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்.
இலங்கை அரசுக்கு ஆதவாக திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது; பணம் தருகிறது. இந்தியா நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பாக, தமிழனுக்கு எதிராக நடந்து கொள்வது தவறு. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு பிரணாப் முகர்ஜியை அனுப்பினாலும், மன்மோகன் சிங்கே போனாலும் கூட ஒன்றும் நடக்காது. தமிழக முதல்வரே டெல்லி போய் வற்புறுத்தினாலும் எதுவும் நடக்காது.
இப்பிரச்சனைக்குத் தீர்வு என்னவென்று முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்குத்தான் உள்ளது. தனி நாடு என்பதை பாஜக ஆதரிக்கவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. அதை தமிழர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். இவ்வாறு இல. கணேசன் தெரிவித்துள்ளார்.