மும் பைத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டாலும் அவர்களை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார். கராச்சியில் (11)செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மும்பையில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்கள் குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டு என்று, கண்டறியப்பட்டாலும் அவர்கள் பிறநாடுகளிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தான் நாட்டு சட்டப்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுபவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கென தனிச் சட்டம் உள்ளது. அதன்படி விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெரிவிப்போம்.
பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாதிகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றார். இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள வெளிநாடுகளின் தூதர்களுக்கு ஜனாதிபதி சர்தாரி விருந்து அளித்தார். முஸ்லிம் அல்லாத நாடுகளின் தூதர்களுக்கு மட்டுமே இந்த விருந்து அளிக்கப்பட்டது. அதில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சத்யபிரபாபோல் மற்றும் அமெரிக்க, சீன, இங்கிலாந்து, ரஷ்ய, பிரான்ஸ் தூதர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் கிலானியும் இதில் பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சி மூலமாக பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை வெளிநாட்டு தூதர்களிடம் சர்தாரி தெரிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை சர்தாரியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். விருந்து நிகழ்ச்சியில் சர்தாரி எந்த உரையும் ஆற்றவில்லை என்று அவர் தெரிவித்தார்.