வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்களுக்கு (வெளிநாட்டுப் பிரஜைகள்) இந்நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் மூன்று நாட்கள் கருத்தரங்கொன்று எதிர்வரும் 19ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையின் கெளரவத் தூதுவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்துவைக்க விருக்கிறார்.
இக்கருத்தரங்கின்போது இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை என்பன தொடர்பாக தெளிவுபடுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் பங்குபற்றும் கெளரவத் தூதுவர்கள் திருகோணமலைக்கு நேரில் விஜயம் செய்யவிருக்கிறார்கள். இவர்கள் திருமலை மாவட்ட செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.