இரா ணுவத்திலிருந்து தப்பியோடி பிடிபட்டவர்களில் 2,500 பேர் தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்; படைகளிலிருந்து தப்பியோடி பின்னர் கைது செய்யப்படுவோர் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் . இவர்களுக்கான சிறைத் தண்டனை, மூன்று மாதத்திலிருந்து ஒரு வருடமாயிருக்கும், தற்போது இவ்வாறு 2,500 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் மேலும் 4,000 பேர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படவுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கானோர் மீண்டும் படைகளில் இணைவதற்காக அவர்களுக்கு பல தடவைகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் குறிப்பிட்ட அளவினரே பொது மன்னிப்பை பெற்று மீண்டும் படைகளில் இணைந்து கொண்டனர். சுமார் 3,000 பேர் இந்த பொதுமன்னிப்புக் காலத்தின் ஊடாக மீண்டும் படையணிகளில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.