2009

2009

குழந்தைகள் கடத்தல், விற்பனைகளில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பு

baby-01.jpgஅண்மைக் காலங்களில் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல்கள் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவற்ற தெரிவித்துள்ளார். சில ஆஸ்பத்திரிகளில் அதிகாரிகள், சிற்ழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் இதில் தொடர்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் விற்பனை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கும் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதில் தலையிட்டு அதனைத் தடுப்பதற்கு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் தற்போது பகிரங்கமாக நடைபெறும் அளவுக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் குழந்தை ஒன்று 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்ட போது பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.  இங்கு ஏலவிற்பனையாக குழந்தைகள் விற்கப்படுவது தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஒரு பிறந்த குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

கடத்திய பெண் பின்னர் கைது செய்யப்பட்ட போது அவர் குழந்தையைக் கடத்தி விற்பவர் என்பது தெரியவந்தது. வெளிநாட்டு தம்பதியருக்கு விற்கப்பட்ட குழந்தை ஒன்று பின்னர் மீட்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றம்

college1.jpgவவுனியா விலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு, அவை, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வருவோருக்கான நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் இந்துக் கல்லூரியும்  புதன்கிழமை முதல் மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காமினி வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, பம்பைமடு வளாகவிடுதி, செட்டிகுளம் பாடசாலை மற்றும் மெனிக்பாம் பகுதிகளில் 18 ஆயிரத்து 678 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சமைத்த உணவுகளே வழங்கப்படுகின்றன.  பஸ்கள் மூலம் கொண்டுவரப்பட்ட மக்கள் தமிழ் மகா வித்தியாலயத்திலும், இந்துக் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலைகளின் மைதானங்களில் தற்காலிக குடிசைகள் அமைக்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களில் மேலும் பெரும் எண்ணிக்கையானோர் வரும் பட்சத்தில் அவர்களை தங்கவைத்துப் பராமரிக்க பெரும் இடையூறுகளை அதிகாரிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை, திருச்சபை வித்தியாலயம், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி மட்டுமே தற்போது இயங்குகின்றன. நகரிலுள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.

பதவி துறக்க மஹேல முடிவு

mahela1102.jpgஇலங்கைக் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்தே தனது கப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக மஹேல ஜெயவர்தன கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தனாவே கப்டனாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தொடருக்கு இலங்கை அணி புறப்படவிருக்கும் நிலையில் தனது கப்டன் பதவியிலிருந்து விலக மஹேல முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மஹேலவின் துடுப்பாட்டம் மிகமோசமாக இருந்து வந்ததால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுமிருந்தார். இந்த நிலையிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கப்டன் பதவிகளைத் துறக்க அவர் முன்வந்துள்ளார்.

33,322 வாக்காளருக்கு தற்காலிக அடையாள அட்டை

identity-card-sri-lanka.jpgமத்திய மாகாணத்தில் அடையாள அட்டைகள் இல்லாத வாக்காளர்கள் 33,322 பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மாகாணத்தில் தற்போது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 955108, 338946, 452395 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேர்தல் மத்திய நிலையங்களாக கண்டி, மாத்தளை, நுவரேலியா மாவட்டங்களில் முறையே 680,296,393 ஆக மொத்தம் 1369 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளை (14) நடைபெறும் மத்திய மாகாண சபை தேர்தல் நடவடிக்கை கடமைகளை மேற்கொள்ளுமுகமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 12000, 3900, 4800 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வில்லையெனில் நாடு தழுவிய போராட்டம் -அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை

jvp-net.jpgகடல்கோள் அனர்த்தத்தினாலும் கடந்தகால யுத்தத்தினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் அரசின் நடவடிக்கைகளினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றார்கள். இவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி.)யின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்தார்.

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் அகில இலங்கை மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;

கிழக்கு மாகாண மீனவர்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழிலை நாளாந்தம் சிக்கலின்றி மேற்கொள்ள முடியாதுள்ளனர். இதனால் தமது வாழ்க்கையை நடத்திச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றபோதும், இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்ட கரையோர பிரதேசமான வாழைச்சேனை, புன்னைக்குடா, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, கல்லாறு, காத்தான்குடி, பாலமுனை உட்பட பல மீனவர் கிராமங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் கடற்றொழிலையே தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் கடந்த ஒரு சகாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தால் பிரச்சினையை எதிர்கொண்டதுடன், கடல்கோளினாலும் பாரிய பாதிப்பினை எதிர்கொண்டனர். கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் இம் மீனவர்களின் படகுகளை கடத்திச்சென்றதுடன், வலைகளையும் எரிபொருட்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர். அதேபோல கடல்கோள் தாக்கியதனால் கிழக்கு மாகாண மீனவர்களின் படகுகள், வீடுகள், வலைகள் மற்றும் வாடிவீடுகள் என்பனவும் அழிவடைந்தன.

இந்நிலையில், இந்த மீனவர்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்டஈட்டையும் நிவாரணங்களையும் வழங்கவில்லை. இது குறித்து பல முறை எடுத்துக் கூறியபோதிலும் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. இதனைவிட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையில் மாத்திரமே இறங்குதுறையுள்ளது. இதனால் ஏனைய மாவட்ட மீனவர்கள் தமது படகுகளை வாழைச்சேனைக்கே கொண்டுவரவேண்டிய சிக்கலான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களது மேலதிக உற்பத்திகளை சேமிப்பதற்கான எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறைந்தது இரு ஐஸ் தொழிற்சாலை மற்றும் களஞ்சிய சாலை அமைப்பதன் மூலம் இம் மீனவர்களுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கமுடியும். அரசாங்கம் கிழக்கின் உதயமென கூறுகின்றதே தவிர உண்மையில் அங்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை.

இப்போராட்டம் தொடர்பில் இதுவரை நாம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை. ஏனெனில், இவர்களின் பிரச்சினை குறித்து மீன்பிடித்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தவுள்ளோம். இதன் பின்னர் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் அரசு வென்றாலும் புலிகள் தாக்குதலை நிறுத்தமாட்டார்கள் -தோற்றுவிட்டால் அரசும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை

election_.jpgஅரசாங்கம் இன்று எங்கும் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் யுத்தம் பற்றித்தான். மக்களை ஏமாற்றும் இந்தத் தந்திரோபாய வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். வடக்கில் யுத்தத்தை வெல்வதற்கு மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ கோருகிறார். இராணுவத்தினர் பெறும் யுத்த வெற்றிகளை மக்களுக்குக் காட்டி வாக்களிக்கக் கோருவது என்பது கடவுளின் உருவப்படத்தைக் காட்டி பூஜைப் பொருட்களடங்கிய தட்டைப் பேய்க்கு சமர்ப்பிப்பது போன்ற செயலை ஒத்ததாகும் என்று ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். கலேவெல நகரில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்பது போல் வடக்கில் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களித்தால் புலிகளின் அமைப்பு தமது தாக்குதலை இடைநிறுத்தி விடுமா? அல்லது மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு. முன்னணி தோல்வியடைந்தது என்பதற்காக இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவரா? அவ்வாறு எதுவுமே நடைபெறப்போவதில்லை. அப்படியானால் ஏன் இவர்கள் இவ்வாறு யுத்தத்தை விற்று இராணுவத்தினரின் வெற்றிகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு சென்ற போதும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நாம் கோரிய போதும் யுத்தம் முடிவடையும் வரையில் பொறுங்கள் என்று ஜனாதிபதி கூறினார். வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக் கொண்டு பொறுத்திருக்கச் சொன்னார். பெப்ரவரி 4 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்திருப்பதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் இனி எவ்வாறு எப்போது தீர்க்கப்படப் போகின்றன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜனாதிபதி பதில் கூறுவாரா?

உருப்படியான திட்டங்கள் எதுவும் தன்னிடம் இல்லாத காரணத்தினால் மகிந்த ராஜபக்ஷ ஒரு புறத்தில் யுத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மறுபுறத்தில் சிறிது சிறிதாக தேர்தல்களை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்து வருகிறார். இரு வருடங்களாக தேர்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. ஆனால், நாட்டின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. நாட்டை நிர்வகிக்கும் திறனற்றவர் மகிந்த ராஜபக்ஷ என்பதை இவற்றின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு நாம் கேட்டபோது மறுத்த அரசாங்கம் தமது அமைச்சர்களின் கொடுப்பனவுகளை வீட்டு வாடகை என்ற பெயரில் ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துக் கொண்டது. சொந்த வீடுகளில் வசிக்கும் அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் வசிப்போருக்கும் ஒரு இலட்சம் ரூபாவை மாதாந்தக் கொடுப்பனவு மூலம் அதிகரித்துக் கொண்டனர்.

நுகர்வுப் பொருட்கள் பலவற்றின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல இன்னல்களுக்குள்ளாகி வருவதை அரசாங்கத்திற்கு விளக்கிக் கூறி மானிய அடிப்படையில் பொருட்களைப் பெற உதவுமாறு வேண்டினோம். யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களுக்கு மானியம் வழங்க மறுத்த ராஜபக்ஷ அரசாங்கம், கோதாபய ராஜபக்ஷவின் “”மிஹின் லங்கா’ விமான நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவை நிவாரண உதவியாக வழங்கியது.

எனவே, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. மாதாந்தம் அவர்களுக்கும் வீட்டு வாடகையாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வேண்டுகிறோம்.

உலக சந்தையில் பால்மாவின் விலை குறையும் போது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அதன் பயனை மக்கள் அடைய விடாமல் அரசாங்கம் இரண்டு விதமான வரிகளை விதித்துள்ளது. பால்மாவுக்கு 8 வீதமும் அதனைப் பைக்கற்றுகளில் அடைக்க 5 வீதமும் என வரிகளை விதித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தினமும் ஐயாயிரம் பேர் வரையிலானோரைக் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பகலுணவுப் பொட்டலங்களையும் அன்பளிப்புப் பொருட்களையும் அரசாங்கப் பணத்தில் தாராளமாக வழங்குகிறார். வாக்காளர்களிடம் வாக்குகளை எதிர்பார்த்து பொருள் பண்டங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்குதல் என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான செயல் என 1960 ஆம் ஆண்டின் தேர்தல் சட்ட விதிகளின் 79 ஆவது பந்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால்மாவுக்கான மானியத்தை பெற்றுத் தருவதற்கு முடியாதென மறுக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவு கொடுக்கவே வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் சட்ட விதிகளை முற்றாக மீறியுள்ள ஜனாதிபதிக்கும் அவர்தம் சகாக்களுக்கும் எதிராக மனுவொன்றை நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

கடந்த தனது 3 வருட ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்யாத மகிந்த ராஜபக்ஷ இறுதியாக இப்போது இராணுவ வீரரின் வெற்றிச் செயற்பாடுகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தனது இயலாமையை மறைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் யாவரும் அறிவர் என்று கூறினார்.

3 இலங்கையருக்கு 11 வருட சிறை

drugs.jpgஹெரோயின் கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 11 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையிலுள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுவதாக  தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 கிலோ எடையுள்ள ஹெரோயின் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ரியாஸ் ஃபரூக், சுபேர் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாகச் சென்னைக்கு ஹெரோயின் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சஜித் நிஷாந்தா என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையில் மக்கள் அழியும் விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வராததால் போர் நிறுத்தம் கோர முடியாது! ஐ.நா.செயலாளர் பான் கீமூன்

banki-moon.jpgஇலங்கை யில் நடைபெறும் போரினால் பெரும் இரத்தக்களரி உண்டாகி வருகின்றபோதிலும், அந்த நாட்டின் விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாததால், அங்கு போர் நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கத்தை நான் கோர முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன்.

இலங்கையில் நடைபெறும் போரினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் குறைவாகவே வெளிப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்த மூன் தாம் நாடுகளின் இறைமையை மதிப்பவர் என்றும் ஒரு கட்டத்தில் கூறினார். பல வெளிநாடுகளுக்கு விஜயம் செய்த பின்னர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அந்த மாநாட்டில் வைத்து “இன்னர் சிற்றி பிறெஸ்” ஊடகத்தின் செய்தியாளர் மத்தி ரஸல் லீ, பான் கீ மூனிடம் காஸா, கொங்கோ ஆகிய நாடுகளில் போர் நிறுத்தத்தை கோரியது போன்று, ஏன் பெரும் இரத்தக்களரி உண்டாகியுள்ள இலங்கையில் போர் நிறுத்தம் கோரவில்லை என்று கேட்டார். அப்போதே இலங்கை விவகாரம் குறித்து பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமையால் தன்னால் போர் நிறுத்தம் கோர முடியவில்லை என்று பான் கீ மூன் சொன்னார்.

இதேவேளை அதே ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்துக்கு ஏற்பநடத்தப்பட வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்தும் பிரஸ்தாபித்த போது பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டு; இராணுவ நடவடிக்கைகளால் அல்ல என்று மற்றொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டார்.அப்போது பான்  கீ மூன் “இன்னர் சிற்றி பிறெஸ்” செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:

“இலங்கை நிலைவரம் தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்னர் நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் சிறப்புப் பிரதிநிதியுடன்(பஸில் ராஜ  பக்ஷவுடன்) ஆராய்ந்தேன்.மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் இந்த விடயம் தொடர்பாகத் தொலைபேசியில் தீவிரமாக ஆராய்ந்தேன்.

அவர் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும், மோதலில் சிக்கியுள்ள மக்களுக்கும் உதவ வேண்டும். இதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாம் எனத் தெரிவித்திருந்தேன். அவர் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவார் எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அளவுக்கதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே நியாயபூர்வமாகச் சிந்திக்கும் அனைவரினதும் கருத்தாகும். இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெறவில்லை. நாடொன்றின் இறைமையை மதிப்பது என்ற விடயத்தை எனது முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளேன். எனினும் இலங்கை மற்றும் காஸா நிலைவரங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட விடயங்களாகும்.சர்வதேச தராதரங்கள் மீறப்படுதல் தொடர்பாக நான் தொடர்ச்சியாக எனது ஆழ்ந்த கண்டனத்தைத் தெரிவித்து வந்துள்ளேன்.

குறைந்தளவிலேயே தகவல்கள் கிடைத்துள்ளன இலங்கையில் தொடரும் முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக  எனது கவலையைத் தெரிவித்து வந்துள்ளதுடன்   இராணுவத் தீர்வல்ல, அரசியல் தீர்வே அவசியம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன். இலங்கையில் காணப்படும் நிலைவரம் குறித்து குறைந்த எண்ணிக்கிகையிலேயே தகவல்ககள் வெளியாகியுள்ளன. எந்த மோதல் சூழ்நிலையிலும் நீங்கள் முதலில் அறிய விரும்புவது உண்மை நிலைவரம் எவ்வாறானதாக உள்ளது என்பதையே  என்றார் .

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு: பிரதிபா உரை

prathiba1102.jpgஇலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நிரந்தரமாக அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 
 

வன்னி நிலைமைகள் குறித்து யாழ்.ஆயருடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துரையாடல்

thomas-sawndaranayakam.jpgயாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பிரதித்தலைமை அதிகாரி ஜேம்ஸ் ஆர்மோர் மற்றும் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்டெடர் ஆகிய இருவரும் யாழ். ஆயர் அதி. வண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்துப் பேசியுள்ளனர்.

யாழ். ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வன்னிப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக இருவரும் ஆயருடன் கலந்துரையாடியதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேனளை, விடுவிக்கப்படாத இடங்களில் இருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு வந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இடம்பெயர்ந்துள்ள இந்த மக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். ஆயர் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.றொசான் அடிகள் தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் அவசர மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பண்ணையில் நிறுவப்பட்டுள்ள சுகாதாரக் கிராமத்தை திறந்து வைக்க இரு தூதரக அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.