இலங்கைக் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்தே தனது கப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக மஹேல ஜெயவர்தன கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தனாவே கப்டனாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தொடருக்கு இலங்கை அணி புறப்படவிருக்கும் நிலையில் தனது கப்டன் பதவியிலிருந்து விலக மஹேல முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மஹேலவின் துடுப்பாட்டம் மிகமோசமாக இருந்து வந்ததால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுமிருந்தார். இந்த நிலையிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கப்டன் பதவிகளைத் துறக்க அவர் முன்வந்துள்ளார்.