யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக பிரதித்தலைமை அதிகாரி ஜேம்ஸ் ஆர்மோர் மற்றும் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மைக்டெடர் ஆகிய இருவரும் யாழ். ஆயர் அதி. வண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்துப் பேசியுள்ளனர்.
யாழ். ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வன்னிப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக இருவரும் ஆயருடன் கலந்துரையாடியதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேனளை, விடுவிக்கப்படாத இடங்களில் இருந்து யாழ்ப்பாண குடாநாட்டுக்கு வந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இடம்பெயர்ந்துள்ள இந்த மக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவும், அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ். ஆயர் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என ஆயரின் செயலாளர் அருட்தந்தை எஸ்.ஏ.றொசான் அடிகள் தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் அவசர மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பண்ணையில் நிறுவப்பட்டுள்ள சுகாதாரக் கிராமத்தை திறந்து வைக்க இரு தூதரக அதிகாரிகளும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.