2009

2009

சீனாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிட விருப்பம்

anura-piriyadarshana-yappa.jpgசீனாவின் பல்வேறு துறைகளையும் சார்ந்த முதலீட்டாளர்கள் 50 பேர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவைக் கொழும்பில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

சீன நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்புகளைச் செய்துவரும் பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்களான 50 முக்கியஸ்தர்கள் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாக கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்தது.

இதன்போது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இத்துறைகளில் சீன வர்த்தகர்கள் முதலீடுகளை மேற் கொள்ளும் வகையில் முதலீட்டுச் சலுகைகளை விரிவு படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சீனத் தூதுக் குழுவினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கையில் முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான காலமொன்று உருவாகியுள்ளதாகவும் இலங்கையின் முக்கிய துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் 35 சீன நிறுவனங்கள் இலங்கை முதலீட்டுச் சபை மூலம் முதலீடுகளை மேற் கொண்டுள்ளதுடன் மேலும் 46 நிறுவனங்கள் இலங்கை யின் பொது சட்ட திட்டங்களிற்கமைவாக தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சீன முதலீட்டாளர்களைக் கவனத்திற்கொண்டு விசேட பொருளாதார வலயமொன்றை கொழும்புக்கு அண்டிய பகுதியில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முதலீட்டுச் சபை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்துவது கொழும்பின் அவசியத் தேவை’

children-srilanka-01.jpgஇலங் கையில் தமக்கு எதிர்காலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையை கொழும்பு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கும் “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ உண்மையிலேயே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துக் கொண்ட தேசமாக இருக்க இலங்கை விரும்புகின்றது என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டிய தேவை கொழும்புக்கு இருக்கிறது’ என்று மகுடமிட்டு இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான “ரைம்ஸ் ஒவ் இந்தியா’ நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அண்மித்து வருவதாக இலங்கை அரசாங்கம் நம்புகிறது. அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் மனதை வென்றெடுக்கும் யுத்தத்தில் அது தோல்வியை அண்மித்து வருவதாக கருத முடியும்.

இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளால் தமிழ் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது போராட்டத்தின் பின்னணியில் தமிழ் சமூகத்தின் துன்பங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சமாதானப் பொதியையும் கொழும்பு முன்வைக்க வேண்டும். போர் முடியும் வரையென இது தொடர்பாக காத்திருக்க முடியாது.

தொடர்ந்து ஆட்சி செய்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த “சிங்களவர்களுக்கே பிரத்தியேகம்’ என்ற கொள்கைகளாலேயே தமிழர்களின் போராட்டம் தோன்றியது. தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்த குழுவினர் புலிகள் அல்ல. அதேசமயம், இனநெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அதற்குப் பரிகாரம் காணாவிடின் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் இறுதியான குழுவாகவும் புலிகள் இருக்கப் போவதில்லை. ஆதலால் தமிழ் மக்களின் அபிலாசைகளுடன் புலிகளின் அரசியல் இலக்குகளை ஒன்றுபடுத்தாமல் இருப்பது முக்கியமானதாகும்.

புலிகளின் முடிவானது தமிழ்ப் பிரிவினைவாதத்தின் முடிவாக அமையும் என பார்க்க முடியாது. புலிகள் மறைந்தாலும் சமாதானம் நழுவிச் சென்று விடும் என்பது நிரூபணமாகக் கூடும். புலிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சிறப்பான மாற்றீடாக இருக்குமென நிச்சயப்படுத்த முடியாத நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இலங்கை அரசானது சிங்கள இனமேலாதிக்கவாதத் தன்மையைக் கொண்டிருப்பதாக தமிழர்கள் பார்க்கின்றனர். சிறுபான்மையினங்களின் உண்மைகளுக்கு அது அங்கீகாரம் வழங்காதென அவர்கள் கருதுகின்றனர். தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமானால் தனது சிந்தனைகளை அதிகளவுக்கு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் மரபு ரீதியான கட்டமைப்புக்கு அப்பால் இந்த மோதலைப் பார்க்க வேண்டிய வேளை வந்துள்ளது. பிராந்தியத்திற்கான புனர்நிர்மாண மீள் நல்லிணக்கத் தீர்வுத் திட்டம் குறித்து கொழும்பு அறிவிக்க வேண்டும். ஒருதலைப் பட்சமான சமாதான முயற்சிகள் கேள்விப்படாத ஒன்றாக அமையலாம். ஆனால், இலங்கை முன்நோக்கிச் செல்வதற்கு இதுவே ஒரேயொரு வழிமுறையாகும். இலங்கை உண்மையாகவே சகல தரப்பினரையும் உள்ளீர்த்துள்ள தேசம் என்ற நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை கொழும்புக்குள்ளது. அத்துடன், தமக்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எல்லைகளுக்கான யுத்தத்துடன் இணைந்து மனங்களை வென்றெடுப்பதற்கான போரையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை மின்சார சபை சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அனுமதியோம் – தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgஇலங்கை மின்சக்தி சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிக்கையில்; எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை மின்சக்தி சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கு எதிர்பார்த்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின் பொதுமக்கள் சிக்கல் நிலைக்கு தள்ளப்படுவர்.

இந்நிலையில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இது ஒரு சட்டமல்லவெனவும் வெறும் எழுத்தெனவும் கூறுவதுடன் இது பணம் திரட்டும் ஒரு வழியெனவும் கூறுகின்றார். இதனால் அரசாங்கத்தினால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். மின்சாரசபை ஊழியர்கள் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனால் மக்களும் பாதிக்கப்படுவர்.

இது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது எரிபொருள் சக்தித் துறைக்கான அடிப்படைச் சட்டமாக அமையுமென்பதால் இதனை எதிர்க்கின்றோம். இச்சட்டமூலம் சட்டமாக்கப்பட்ட பின் இதனை இனி யாராலும் திரும்ப வாபஸ் பெற முடியாது. இந்த சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தான் மேலும் பாதிப்பை எதிர்கொள்வர். இந்நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றத் தவறினால் எதிர்காலத்தில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

அரசாங்கம் இயலுமானால் இதனை சட்டமாக்கிக் காட்டட்டுமென சவால் விடுக்கின்றோமெனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பாக சக்திவள அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவிக்கையில்; மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பானது ஜே.வி.பி.யினுடைய தொழிற்சங்கமாகும். இவர்கள் இலங்கை மின்சக்தி சட்டத்தை மட்டுமன்றி எந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இந்த சட்டமூலத்தால் மின்சார சபை தனியாருக்கு விற்கப்படப் போவதில்லை. இதனை சட்டமாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மையை பெற முடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைவரம்- மார்ச் முதல்வாரம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை

civilians-1002-09.jpgஇலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா ஆகியோர் அடங்கலாக குழுவொன்று மார்ச் மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவுக்கு பயணமாகிறது. ஜெனீவாவுக்கான இந்த பயணத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு உட்பட உலக நாடுகள் யாவும் கவலை வெளியிட்டுவரும் தருணத்திலேயே, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் இலங்கை சார்பான அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் விடுக்கப்படவுள்ளது. அண்மையில் கூட நியூயோர்க்கில் பிரிட்டிஷ் பிரெஞ்சு தூதுவர்கள் இலங்கை நிலைவரம் தொடர்பாக கடும் கவலையை வெளியிட்டிருந்தனர். அத்துடன், அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ், அவரது அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்குமென அந் நாட்டுத் தூதுவர் ஜோன் சாவர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இவற்றுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தரப்பில் பதிலளிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான மஹிந்த சமரசிங்கவின் அறிக்கை இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட பிரிவுக்கான அமர்வில் கலந்துகொள்ளவே ஜெனீவா செல்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அதற்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் பற்றி கலந்து பேசவிருப்பதாகவும் கூறினார்.

கிளிநொச்சிக்கான மின் விநியோகத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டம்

electricitypowerlinesss.jpgகிளிநொச்சி மாவட்டத்துக்கான மின் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுமார் 500 மில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இம் மாவட்டத்திற்கான மின் விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்ய சுமார் ஒரு வருட காலம் தேவையென மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து மாங்குளத்திற்கான மின் விநியோக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புளியங்குளத்தில் அதிசக்திவாய்ந்த மின்சார கேபிள்கள், மின் கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜப்பானின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், புளியங்குளத்துக்கும் வவுனியாவுக்கு மிடையே 66 கிலோ மீற்றர் நீளத்துக்கு மின் இணைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கான முழு மின்விநியோகம், அங்கு உப மின்நிலையம் ஒன்று நிர்மாணப்படுத்தப்பட்டதன் பின்னரே இடம் பெறுமெனவும், அதற்கு முன்னர் தற்காலிக மின் இணைப்புக்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மோதல் காரணமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த உப மின் நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதனை மீள நிர்மாணிப்பதற்கும் மின்சார சபை திட்டமிட்டுள்ளது. அதேசமயம், இடம் பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கு முன்பதாக, அம்மக்களுக்கான குடிநீர், மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

135 பேருடன் துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது.

flight_.jpg135 பயணிகளுடன் சென்ற துருக்கி விமானம் விழுந்து நொறுங்கியது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 3 துண்டுகளாக நொறுங்கியது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். விமானம் தீ பிடிக்காததால் விமானத்தில் பயணம்  செய்த பயணிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த தொண்டர் கோகுல்ரத்தினம் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் இதுபோல தீக்குளித்து உயிரிழந்த இரண்டாவது திமுக தொண்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற திமுக தொண்டர், சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்னும் ஒரு திமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார். உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.  ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் திரட்ட சோனியா அறிவுறுத்தல்

soniya2.jpgஇலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கட்யின் தென்மாநிலப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தூர விலகி நிற்பதாக ஆத்திரமடைந்துள்ள தமிழ்நாட்டின் விசனத்தைத் தணிப்பதற்காகவே அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி தனது சகாக்களுக்கும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தமிழ் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தை இடைநிறுத்த ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்

UN_Logoமோதலை இடைநிறுத்தி பொது மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேவையற்ற விதத்தில் பொது மக்களுக்கு மேலும் இழப்புகளையும் இலங்கை சமூகத்திற்கு அழிவையும் ஏற்படுத்தாமல் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியத் தேவை இருப்பதாக ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

மோதல் அதிகரித்திருப்பதால் அங்கு அகப்பட்டிருக்கும் பொது மக்களின் இறப்புகள் அதிகரித்து வருவதையிட்டு ஐ.நா. கவலையடைந்துள்ளது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற இடமளிப்பதற்காக யுத்தத்தை இடைநிறுத்துவதற்கு ஐ.நா. ஆதரவளிக்கின்றது என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

யுத்த நிறுத்தம் என்ற வார்த்தையை ஐ.நா. செயலாளர் நாயகம் பயன்படுத்தவில்லை. ஆனால், பொது மக்களைப் பாதுகாக்குமாறு மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரையும் வலியுறுத்தி முன்னர் அவர் விடுத்த அறிக்கைகளிலும் பார்க்க அவர் இப்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிகமானதாக இருப்பதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. “சகல தரப்பினரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அரசியல் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்’ என்ற தனது அழைப்பை மீண்டும் ஐ.நா. விடுப்பதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார

புலம்பெயர் தொழிலாளருக்கென தேசிய கொள்கை அறிமுகம்

rambukwela.jpgபுலம்பெயர் தொழிலாளர்களுக்கென தேசியக் கொள்கையொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களது குடும்ப நலன்களைக் கருத்திற்கொண்டு இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது தொடர்பாக அமைச்சில் நடந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுடனான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு உத்தரவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் கடிதம் அவசியமில்லை.

இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்குதல், அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல் போன்ற தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமே தீர்மானங்கள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்குமேயன்றி தொழில் வழங்குநர்களுக்கு உதவ முன்வரமாட்டாது. பல்வேறு அமைப்புகளின் தேவைகளுக்கமைய கொள்கைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக வில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்களாக செல்வோர் காப்புறுதி செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் எனக் கூறியமைக்கு காரணம் அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டமையால் தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கட்டணங்களை செலுத்த தவறும் தொழில் வழங்குநர்களின் கீழ் பணியாளர்கள் சேவைக்கு அமர்த்தப் படமாட்டார்களென்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல கூறியுள்ளார்.