இலங்கை மின்சார சபை சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அனுமதியோம் – தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவிப்பு

electricitypowerlinesss.jpgஇலங்கை மின்சக்தி சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவிக்கையில்; எதிர்வரும் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கை மின்சக்தி சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பித்து சட்டமாக்குவதற்கு எதிர்பார்த்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின் பொதுமக்கள் சிக்கல் நிலைக்கு தள்ளப்படுவர்.

இந்நிலையில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இது ஒரு சட்டமல்லவெனவும் வெறும் எழுத்தெனவும் கூறுவதுடன் இது பணம் திரட்டும் ஒரு வழியெனவும் கூறுகின்றார். இதனால் அரசாங்கத்தினால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். மின்சாரசபை ஊழியர்கள் கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனால் மக்களும் பாதிக்கப்படுவர்.

இது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் அது எரிபொருள் சக்தித் துறைக்கான அடிப்படைச் சட்டமாக அமையுமென்பதால் இதனை எதிர்க்கின்றோம். இச்சட்டமூலம் சட்டமாக்கப்பட்ட பின் இதனை இனி யாராலும் திரும்ப வாபஸ் பெற முடியாது. இந்த சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தான் மேலும் பாதிப்பை எதிர்கொள்வர். இந்நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றத் தவறினால் எதிர்காலத்தில் பெரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நாம் தீர்மானித்துள்ளோம்.

அரசாங்கம் இயலுமானால் இதனை சட்டமாக்கிக் காட்டட்டுமென சவால் விடுக்கின்றோமெனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இது தொடர்பாக சக்திவள அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவிக்கையில்; மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பானது ஜே.வி.பி.யினுடைய தொழிற்சங்கமாகும். இவர்கள் இலங்கை மின்சக்தி சட்டத்தை மட்டுமன்றி எந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். இந்த சட்டமூலத்தால் மின்சார சபை தனியாருக்கு விற்கப்படப் போவதில்லை. இதனை சட்டமாக்குவதற்குத் தேவையான பெரும்பான்மையை பெற முடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *