இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா ஆகியோர் அடங்கலாக குழுவொன்று மார்ச் மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவுக்கு பயணமாகிறது. ஜெனீவாவுக்கான இந்த பயணத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் உறுதிப்படுத்தினார்.
இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு உட்பட உலக நாடுகள் யாவும் கவலை வெளியிட்டுவரும் தருணத்திலேயே, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் இலங்கை சார்பான அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் விடுக்கப்படவுள்ளது. அண்மையில் கூட நியூயோர்க்கில் பிரிட்டிஷ் பிரெஞ்சு தூதுவர்கள் இலங்கை நிலைவரம் தொடர்பாக கடும் கவலையை வெளியிட்டிருந்தனர். அத்துடன், அண்மையில் இலங்கை வந்திருந்த ஐ.நா.மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ், அவரது அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்குமென அந் நாட்டுத் தூதுவர் ஜோன் சாவர்ஸ் தெரிவித்திருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தரப்பில் பதிலளிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான மஹிந்த சமரசிங்கவின் அறிக்கை இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட பிரிவுக்கான அமர்வில் கலந்துகொள்ளவே ஜெனீவா செல்வதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, அதற்கு அப்பால் ஐ.நா.மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் பற்றி கலந்து பேசவிருப்பதாகவும் கூறினார்.