கிளிநொச்சி மாவட்டத்துக்கான மின் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சுமார் 500 மில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இம் மாவட்டத்திற்கான மின் விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்ய சுமார் ஒரு வருட காலம் தேவையென மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியாவில் இருந்து மாங்குளத்திற்கான மின் விநியோக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புளியங்குளத்தில் அதிசக்திவாய்ந்த மின்சார கேபிள்கள், மின் கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஜப்பானின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், புளியங்குளத்துக்கும் வவுனியாவுக்கு மிடையே 66 கிலோ மீற்றர் நீளத்துக்கு மின் இணைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கான முழு மின்விநியோகம், அங்கு உப மின்நிலையம் ஒன்று நிர்மாணப்படுத்தப்பட்டதன் பின்னரே இடம் பெறுமெனவும், அதற்கு முன்னர் தற்காலிக மின் இணைப்புக்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மோதல் காரணமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த உப மின் நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், மீண்டும் அதே இடத்தில் அதனை மீள நிர்மாணிப்பதற்கும் மின்சார சபை திட்டமிட்டுள்ளது. அதேசமயம், இடம் பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கு முன்பதாக, அம்மக்களுக்கான குடிநீர், மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.