இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த தொண்டர் கோகுல்ரத்தினம் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் இதுபோல தீக்குளித்து உயிரிழந்த இரண்டாவது திமுக தொண்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு, சென்னை தரமணியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற திமுக தொண்டர், சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இன்னும் ஒரு திமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார். உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.