2009

2009

புத்தாண்டுக் கொண்டாட்ட விபத்துக்கள் 202 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விபத்துக்களில், 202 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6.00 வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 75 பேர் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

புத்தாண்டு காலத்தில் முக்கிய பாதுகாப்பு குறித்து மட்டும் கவனம் செலுத்தவும் – படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு

mahinda.jpgதற்போது ஏற்பட்டுள்ள தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அரசாங்கத்திடம் சரணடைவதற்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்கள் தேசியப் புத்தாண்டைப் பொருத்தமான முறையில் கொண்டாட வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாத்திரம் அதிக கவனம் செலுத்தும்படி படை நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது 

கண்துடைப்பு அறிவிப்பு : தேவை நிரந்தர போர் நிறுத்தம் – விடுதலைப் புலிகள்

lttelogo.jpgஇலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.

தாக்குதல் இடைநிறுத்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தத்துக்கு வழிகோல இந்தியா உதவும். – பி.சிதம்பரம்

chidambaram1.jpgஇலங்கை அரசு அறிவித்துள்ள தாக்குதல் நிறுத்தத்தை விடுத லைப்புலிகள் முறைப்படி அனு சரித்துச் செயற்பட்டால், போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அது உதவும் என்று இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப் படவேண்டும் என்று இந்தியா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

போர் நிறுத்தம் இரு தரப்புகளும் சம்மதித்தாலேயே நடைமுறைப்படுத்த முடியும் விடுதலைப்  புலிகளும் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வெளியிடவேண்டும். தாக்குதல் இடைநிறுத்தம் இரு நாள்களில் முடிவடையாமல் தொடரவேண்டும் என்பதனையே சமாதானத்தை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

தாக்குதல் இடைநிறுத்தம் சிறிய அளவிலாளன செயற்பாடுதான். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். நாம் தொடர்ந்து வழங்கிய அழுத்தத்தினாலேயே இலங்கை அரசு இரண்டு நாள்களும் தாக்குதல் இடைநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும் இந்தியாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டால், நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர நாம் எடுக்கும் முயற்சி பலன் தரும்  என்றார் அமைச்சர் சிதம்பரம். 

உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட அங்கீகாரம் குறித்து கி.மா.சபை வியாழனன்று முடிவெடுக்கும் : ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpg“மத்திய அரசு கொண்டுவரப்படவுள்ள உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கூடி முடிவு எடுக்கும்” என சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இத்திருத்தச் சட்டமூலத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இச்சட்ட மூலம் முன் வைக்கப்படுகின்றது சபையின் எதிர்க்கட்சிகள் இச்சட்ட மூலத்தை எதிர்ப்பது அல்லது நிராகரிப்பது என ஏற்கனவே அறிவித்துள்ளன.

ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மத்திய அரசாங்கம் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச சட்ட மூலம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இதன் படி சபை முதல்வர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இதனை சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார். உத்தேச சட்டத்தைப் பொறுத்த வரை வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாக தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே அச்சம் நிலவுகின்றது. மாகாண சபைக்குரிய அதிகாரப் பரவலாக்கத்திலும் சில பிரச்சினைகள் உள்ளன.

அதே நேரம் சில சாதகமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாகத் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இதனை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இது வரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சி உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்

தமிழக பி.ஜே.பி. வேட்பாளர் பட்டியல் வெளியீடு : தென் சென்னையில் இல.கணேசன் போட்டி

india-election.jpgநாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும். தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி!: பிரியங்கா பேட்டி

23-priyanka.jpgராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதி என்று, பிரியங்கா கூறினார். அமேதி தொகுதியில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்காக அவரது தங்கை பிரியங்கா, பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை அவர் 18 கூட்டங்களில் பேசி இருக்கிறார். அயோத்யா நகரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மன்மோகன்சிங் தான் பிரதமர். இதில் மாற்றம் இல்லை. அவரது பெயரை காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. ராகுல் காந்தி சிறந்த உழைப்பாளி. அவருக்கு சிறப்பான திறமை உண்டு. பிரதமராக அவருக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. எதிர் காலத்தில் ஒருநாள் ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.

நான் அரசியலில் ஈடுபடுவேனா? என்ற கேள்விக்கு, எதிர்மறை பதிலை கொடுக்க விரும்பவில்லை. இல்லை என்பது நான் விரும்பாத வார்த்தை. ஆனால் இப்போது நான் அதுபற்றி சிந்திக்க வில்லை. எனது அண்ணன் மற்றும் தாயார் தொகுதிகளில் தேர்தல் நிர்வாகியாக மட்டும் செயல்படுகிறேன். சிறிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறேன். எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. எனவே அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இதுவரை 4,100 பொதுமக்கள் பலி; 8,800 பேர் காயம்! -தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை

tna-mp-22.jpgவன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 100 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 ஆயிரத்து 800 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் படுகொலைகள் அனைத்தும் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளி விவகாரக் குழு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும்  கூறப்பட்டிருப்பவை வருமாறு:

குறிப்பாக கடந்த சில நாள்களில் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் 707 பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

அங்கு மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டமையினால் மனிதப் பேரவலம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்துப் பொருள்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது. முன்னர் ஒரு போதும் எதிர்நோக்காத இன்னல்களை தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். பாதுகாப்பு வலயத்திலேயே மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்து வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ளனர்; காணாமற் போயுள்ளனர். இலங்கை அரசு தற்போது பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள மூன்று லட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியே இதுவாகும்.

எனவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இணைந்து உடனடியாக இராணுவ நடவடிக்கை நிறுத்தி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்  என்றுள்ளது.

‘தாய்லாந்தில் நிலைமைகள் கட்டுப்பாட்டில்’

protest_afp.jpgதாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இராணுவத்தினருக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்ட பின்னணியில், தற்போது அங்கு நிலைமைகள் கட்டுக்குள் இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அபிஷிட் வெஜஜிவா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அபிஷிட் அவர்கள் மறுத்தார். இராணுவத்தினர் வெறும் சத்த வெடிகளை மட்டுமே வெடித்ததாகவும் அவர் கூறினார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா அவர்களின் ஆதரவாளர்களுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த தள்ளுமுள்ளுகளில், போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர். இந்த போராட்டங்களை தாம் ஏற்பாடு செய்யவில்லை என்று தக்ஷின் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி நகரில் சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிப்பு

sri-lanka-police00.jpg நாவலப்பிட்டி நகரில் உள்ள பொதுத் தொலைபேசி நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  நாவலப்பிட்டி பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள தொலைபேசி நிலையத்திலேயே இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, இது வழமையாக போக்குவரத்து நெரிசலான பகுதி எனவும் தெரிவித்தார்.

தொலைபேசி நிலையத்துக்குள் சந்தேகத்துக்கிடமான பொருள் ஒன்று காணப்படுவதைக் கண்ட பயணி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குத் கொடுத்த தகவலையடுத்தே அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட குண்டை மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிஸ்கட் டின் ஒன்றுக்குள் இந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் எடை 750 கிராம் எனவும் தெரிவித்த பொலிஸார், பெருமளவு போக்குவரத்து நெரிசலும் சன நடமாட்டமும் உள்ள வேளையில் இது வெடித்திருந்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு பின்னர் பொலிஸாரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. புதுவருடத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியும் குறிப்பாக பஸ் நிலையப் பகுதியிலும் பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்த வேளையிலேயே இந்தக் குண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

இச்சம்பவத்தையிட்டு நாவலப்பிட்டி நகரப் பகுதியில் அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.