2009

2009

காவற்துறையின் தலையீட்டை அடுத்து கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்?

swiss_01.jpgவன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.

13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது.

ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் முதல்கட்ட வாக்களிப்பு இன்று

india-election.jpgபாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.

நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வடக்கில் காற்றுடன் கூடிய மழை; சூறாவளி இல்லையென வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு

lighting.jpgயாழ். குடாநாட்டுக்கு கிழக்கே சுமார் 1200 கிலோ மீற்றர் தொலைவில் சூறாவளியாக வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் தமிழக கரையோரங்களை நோக் கியே நகர்கிறது.

இதனால் அடுத்த 48 மணி நேரத்தின் பின்னர் வடக்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யுமே தவிர சூறாவளி தாக்கம் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் உட்பட தென்மா நிலங்களில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழகத்திலுள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரித்துள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் ஏற்பட்டதைவிட வலுவடைந்து காணப்படுவதாகவும் கரையோரத்தை அணுகும்போது புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போது இத்தாழமுக்கம் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இலங்கையில் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது. இக் காலங்களில் இலங்கையில் சூரியன் உச்சத்தில் இருப்பதால் வெப்ப நிலை அதிகரித்திருப்பதுடன் பூமியின் உஷ்ண நிலையும் அதிகரிக்கிறது.

இரவு நேரங்களில் காற்று வீசினாலும் உஷ்ணமடைந்த காற்றாகவே வீசுகிறது. கடற்பரப்பிலிருந்து தரைப் பகுதியை நோக்கி காற்று வீசினாலும் கடற்பகுதியும் உஷ்ண நிலையிலேயே காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓரிரு தினங்களுக்கு தொடரலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டமாக இருக்கலாம்? – பேராசிரியர் கபில தஹநாயக்க தெரிவிப்பு

கிழக்கு, மலையகம், மற்றும் தென் பகுதிப் பிரதேசங்களில் நேற்றுக் காலை உணரப்பட்ட நில அதிர்வின் ஆரம்பம் அம்பாறை மாவட்டத்தின் நிலப்பகுதியாகவோ அல்லது அதனை அண்மித்த கடல் பகுதியாகவோ இருக்கலாம் என்று பேராதனைப் பல்கலைக் கழக பூகற்பவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்கா நேற்றுத் தெரி வித்தார்.

நில அதிர்வு காரணமான பாதிப்புக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிக ளவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இவ்வதிர்வு இம் மாவட்டத்தின் நிலத்திலோ அல்லது இம் மாவட்டத்தை அண்டிய கடலிலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த அதிர்வு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும், கட்டடங்க ளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. இவ்வாறான பாதிப்புக்கள் இவ்வதிர்வு காரணமாக ஏனைய பிரதேசங்களில் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் அண்மைக்காலமாக இவ்வாறான நில அதிர்வுகளை பல பிரதேசங்களில் ஏற்கனவே உணர முடிந்தது. அதனால் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்வதும், அது குறித்து விசேட கவனம் செலுத்துவதும் மிக அவசியம் எனவும் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் பாரிய பூகம்பத்தின் முன்னறிகுறியாகக்கூட இருக்க முடியும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை பூகற்பவியல் பணியக உதவிப் பணிப்பாளர் டப்ளியு. கே. பிரேம், நேற்று காலை 8.50 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் சில வினாடிகள் நாட்டின் பல பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளன.

கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி பிரதேசங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இந்த அதிர்வு 4 ரிச்டர் அளவுக்குக் குறைவாகவே இடம் பெற்றிருக்கிறது. இது கிழக்கு மாகாணத்தின் நிலப் பகுதியிலோ அல்லது அம்மாகாணத்தை அண்டிய கடல் பகுதியிலோ தான் முதலில் தோற்றம் பெற்றிருக்க முடியும்.

கடற்கொள்ளையை எதிர்த்து உலகம் உறுதியுடன் செயல்பட சோமாலியா கோரிக்கை

somaliya-robbery.jpgஆப்பிரிக்க முனை வழியே பயணம் செய்யும் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை சம்பவங்களை எதிர்த்து அனைத்துலக சமூகம் உறுதியுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சோமாலியாவின் பிரதிநிதி கேட்டுள்ளார்.

இந்த கடற்கொள்ளையர்களுக்கு நிதியுதவி வழங்கி, பின்னணியில் இருந்து இயக்கி வரும் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்றும் கண்டிக்க வேண்டும் என்றும் சோமாலியத் தூதர் ஐக்கிய நாடுகள் சபைபில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் மட்டும் சோமாலிய எல்லையை அண்மித்த கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தென்புறத்தே, பிரான்ஸின் போர்க்கப்பல்களில் ஒன்று, கென்யாவின் கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்கொள்ளையர்கள் 11 பேரை கைப்பற்றியுள்ளதாகவும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம்

இலங்கையின் வடகிழக்கே போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதாகவும் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.  மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள் என்றும், அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாலும் சுத்தமான நீர் அருகி வருவதாலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

போர் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமான நிலையில் இல்லாததால் அங்கு அங்கு தொற்று நோய் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண  தெரிவித்தார். ஆனாலும் இதுவரை தொற்று நோய் பரவல் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உதவ விரும்புவோர் ஆணையாளரை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை

p-devaaratna.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அன்பளிப்பாக குழந்தைகள் பால் மா, உடு புடவைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்க விரும்பும் நலன்விரும்பிகள், வர்த்தகர்கள் இருப்பின் உடனடியாக தம்முடன் தொடர்புகொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு உறவினர்களின் வீட்டுக்கு செல்லல் என்ற பாரம்பரியத்தை பின்பற்றக்கூடியதாக ‘புதுமாத்தளனுக்கான உறவுப் பயணம்’ என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 20 ஆம் திகதி சுமார் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களுடன் மேர்க்ஸ் டப்ளின் கப்பல் செல்லவுள்ளது.

இக்கப்பலில் அங்குள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்களையும், உடுபுடவைகளையும் அனுப்ப அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

 ஜனாதிபதியின் ஆலேசானைக்கு அமைய, இந்த ஏற்பாடுகள் செய் யப்படுவதுடன் அந்த மக்களுக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள், உடுபுடவைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், போன்றவற்றை அனுப்ப விரும்புபவர்கள் 011-2478322 அல்லது 0112478323, 0112478324, 0112478325 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் 757 பொதுமக்கள் வருகை

udaya_nanayakkara_brigediars.jpgகடந்த இரண்டு தினங்களில் 757 பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திங்கட்கிழமை 518 பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை 239 பொதுமக்களுமே மூன்று தடவைகளில் வருகை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 68,037 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி வந்த 136 பொதுமக்களுள் 45 ஆண்கள், 39 பெண்கள், 22 சிறுவர்கள் மற்றும் 20 சிறுமிகள் அடங்குவர். அம்பலவான்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வந்த 103 பொதுமக்களில் 32 ஆண்கள், 27 பெண்கள், 26 சிறுவர்கள் மற்றும் 18 சிறுமிகளும் அடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

மன்னாரில் தொடர்ச்சியாக மின்சாரம் தடை

மன்னாரில் கடந்த சில வாரங்களாக பகல்-இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்பட்டு வருவதாகவும் இதனால் மக்களின் அன்றாட தேவைகள் தொடர்ச்சியாகத் தடைப்பட்டு வருவதாகவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். சித்திரை புத்தாண்டு தினத்தன்று முழுநேரமும் மன்னாரில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தொடர்ச்சியாகவும், பகல், இரவு வேளைகளிலும் மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமையால் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும், மின் சாதனங்கள் பழுதடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

ஏ9 வீதியை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்குத் திறக்க அரசாங்கம் முயற்சி

a9-road.jpgஅடுத்த மாதத்தில் ஏ9 வீதியை மக்கள் பாவனைக்குத் திறந்து விடுவதற்குத் திட்ட மிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியைத் திறந்து விடும் பொருட்டு கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளைக் காரியாலயம் ஒன்றை திறக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏ9 வீதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் யாவும் அகற்றப்பட்டு அது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்,ஏனைய பணிகள் அனைத்தும் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் கிடைக்கும் எனவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ9 வீதி ஓமந்தையில் இருந்து முகமாலை வரை கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக படையினருக்கான மற்றும் யாழ் குடாநாட்டுக்கான அத்தியாவசிய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது